Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 70)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
க்ரியாகுணங்களுக்கு ஆச்ரயமாய், அஜடமாயிருக்கையாலே த்ரவ்யமாகக் கடவது.
– தத் ஹேதுக்களை அருளிச்செய்து த்ரவ்யத்வத்தை ஸாதிக்கிறார்.
ஞானமானது திரவியமாக இருப்பதற்கான காரணங்களை அருளிச்செய்கிறார்.
(க்ரியா குணங்களுக்கு ஆச்ரயமாய், அஜடமாயிருக்கையாலே த்ரவ்யமாகக் கடவது) என்று. க்ரியையாவது ஸங்கோச விகாஸங்கள். குணமாவது ஸம்யோக வியோகங்கள். அஜடத்வமாவது ஸ்வயம்ப்ரகாசத்வம். “க்ரியாச்ரயோ த்ரவ்யம், குணாச்ரயோ த்ரவ்யம்” என்று த்ரவ்ய லக்ஷணம் சொல்லப்படுகையாலே, க்ரியாச்ரயத்வமும் குணாச்ரயத்வமும் ஓரொன்றே த்ரவ்யத்வ ஸாதகம். இவற்றோடே அஜடத்வத்தையும் சொல்லுகையாலே, அதுவும் த்ரவ்யத்வ ஸாதகமென்று இவர்க்குக் கருத்து. எங்ஙனே? என்னில், ஜட வஸ்துககளிலே த்ரவ்யாத்ரவ்யங்களிரண்டுமுண்டு; அஜட வஸ்துக்களிலே அத்ரவ்யமாயிருப்பதொன்றில்லையிறே. ஆகையால், “ஜ்ஞாநம் த்ரவ்யம்; அஜடத்வாத், யதஜடம், தத் த்ரவ்யம், யதா ஆத்மாதி” என்று, அஜடத்வந்தன்னைக் கொண்டே த்ரவ்யத்வம் ஸாதிக்கலாமிறே. ஆகையிறே, “இதுதான் அஜடமுமாய், ஸங்கோச விகாஸங்களுக்கும் ஸம்யோக வியோகாதிகளுக்கும் ஆச்ரயமுமா யிருக்கையாலே த்ரவ்யம்” என்று தத்வசேகரத்திலும் இவரருளிச்செய்தது. இப்படி த்ரவ்யமாயிருக்குமாகில், இதுக்கு ஆத்ம குணத்வம் கூடும்படி என்? என்னில், நித்ய ததாச்ரயத்வத்தாலே கூடும். “ஆச்ரயாதந்யதோ வ்ருத்தேராச்ரயேண ஸமந்வயாத், த்ரவ்யத்வம் ச குணத்வம் ச ஜ்ஞானஸ்யைவோபபத்யதே” என்றிறே ஆளவந்தார் அருளிச்செய்தது. ஆச்ரயாதந்யதோ வ்ருத்தித்வம், க்ரியாச்ரயத்வம் சொன்னபோதே சொல்லிற்றாயிற்று. இதுதான் ஜ்ஞாநத்துக்கேயன்றிறே; தீபாதி தேஜ பதார்த்த ப்ரபைகளுக்கும் ஒக்குமிறே. ஆகையால் த்ரவ்யத்வ குணத்வங்களிரண்டும், ஜ்ஞாநத்துக்கு உபபந்நம்.
க்ரியை என்றால், சுருங்குதல் மற்றும் மலர்தல் ஆகியவற்றுக்கு ஏற்றபடியான செயல்பாடுகள். குணம் என்றால் சேர்ந்து இருத்தல் மற்றும் பிரிந்து இருத்தல். அஜடத்வம் என்றால், தானே தன்னை வெளிப்படுத்துவதாக இருத்தல். “க்ரியாச்ரயோ த்ரவ்யம், குணாச்ரயோ த்ரவ்யம் - ஒரு செயல் புரிவதற்கு ஏற்ற இடமாக இருத்தல் என்பது திரவியமாக உள்ளதன் இலக்கணம்; குணத்தின் இருப்பிடமாக இருத்தல் என்பது திரவியமாக உள்ளதன் இலக்கணம் ஆகும்”, என்று திரவியத்தின் இலக்கணம் கூறப்படுகிறது. ஆகவே செயல் புரிவதற்கான இடமாக இருத்தல் மற்றும் குணத்திற்கு இருப்பிடமாக இருத்தல் ஆகிய ஒவ்வொன்றுமே, திரவியமாக உள்ள தன்மைக்கு சாதகமாக உள்ள நிலையாக உள்ளன. இதனுடன் சேர்ந்து அஜடமாக உள்ள தன்மையும் கூறப்படுவதால், அந்தத் தன்மையும், திரவியமாக உள்ள தன்மைக்குச் சாதகமாக உள்ளது என்பது இவருடைய கருத்து ஆகும். எப்படி? ஜடமாக உள்ள பொருள்களில் திரவியமாக உள்ளவை மற்றும் திரவியம் அல்லாதவை என்று இரண்டு வகைகள் உள்ளன. ஆனால் அஜடமான பொருள்களில், “திரவியம் அல்லாதவை” என ஏதும் இல்லை அல்லவோ? எனவே, “ஜ்ஞாநம் த்ரவ்யம்; அஜடத்வாத், யத் அஜடம், தத் த்ரவ்யம், யதா ஆத்மாதி - ஞானம் திரவியமாகும்; அது அஜடமாக உள்ளதால்; எது அஜடமோ அது திரவியம் ஆகும்; ஆத்மா போன்று” என்பதன் மூலம், அஜடமாக உள்ள தன்மையைக் கொண்டே திரவியமாக உள்ள தன்மையானது ஞானத்திற்கு உள்ளது என நிரூபிக்கலாம் அல்லவோ? எனவேதான், தத்வசேகரத்தில், “இதுதான் அஜடமுமாய், ஸங்கோச விகாஸங்களுக்கும் ஸம்யோக வியோகாதிகளுக்கும் ஆச்ரயமுமா யிருக்கையாலே த்ரவ்யம்”, என்று இவரே அருளிச்செய்தார். ஆனால் இவ்விதம் ஞானமானது திரவியமாக உள்ளது என்றால், ஞானத்திற்கு ஆத்மாவின் குணத் தன்மை எவ்விதம் சேரும் என்பதற்கு விடை அளிக்கிறார். ஞானமானது எப்போதும் ஆத்மாவை அண்டியே நிற்பதால் பொருந்தும். ஸித்தித்ரயத்தில், ஆச்ரயாதந்யதோ வ்ருத்தேராச்ரயேண ஸமந்வயாத், த்ரவ்யத்வம் ச குணத்வம் ச ஜ்ஞானஸ்யைவோபபத்யதே - தனக்கு இருப்பிடமான ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளதாலும், தனியாக வெளிப்படுவதாலும், ஞானத்திற்கு, குணமாக உள்ள தன்மை மற்றும் திரவியமாக உள்ள தன்மை ஆகியவை உள்ளன என்று ஸ்வாமி ஆளவந்தார் அருளிச்செய்தார். தனக்கு இருப்பிடமாக உள்ள ஆத்மாவைக் காட்டிலும் வேறு இடத்தில் உள்ள இருப்பு என்பது, செயல் புரிவதற்கு இடமாக உள்ள தன்மையைக் கூறியபோதே கூறப்பட்டதாகிறது. இத்தகைய தன்மையானது ஞானத்திற்கு மட்டும் அல்ல; விளக்கு முதலான ஒளிரும் பொருள்கள் அனைத்திற்கும் உள்ள ஒளிக்கும் பொருந்தும். எனவே திரவியமாக உள்ள தன்மை மற்றும் குணமாக உள்ள தன்மை ஆகிய இரண்டும் ஞானத்திற்கும் பொருந்தும் என்று கருத்து.