Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 68)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
இதுதான் ஏகமாயிருக்கச் செய்தே நாநாவாய்த் தோற்றுகிறது ப்ரஸரண பேதத்தாலே.
இப்படி இந்த்ரிய த்வாரா ப்ரஸரிக்கிற ஜ்ஞாநம் ஏகமாயிருக்கச் செய்தே, விஷய க்ரஹண வேளையில் ப்ரகாசிக்கும்போது, தர்சந ச்ரவணாதி ஸம்ஜ்ஞா பேதத்தை உடைத்தாய்க் கொண்டு, அநேகத்வேந ப்ரகாசிக்கிறபடி எங்ஙனே? என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார்.
ஆனால் இவ்விதம் இந்த்ரியம் மூலமாக வெளியே உலவியபடி உள்ள ஞானமானது ஒன்று என உள்ளபோது, உலக விஷயங்களை உணரக்கூடிய நேரத்தில், “காணுதல், கேட்டல்” என்பது போன்றுதான, அறிதல்களில் உள்ள வேறுபாடு காரணமாக பல பெயர்களை அடைந்து, பலவிதமாக ப்ரகாசிப்பது எப்படி என்ற கேள்வி எழலாம். இதற்குச் சமாதானம் கூறுகிறார்.
(இதுதான் ஏகமாயிருக்கச்செய்தே, நாநாவாய்த் தோற்றுகிறது ப்ரஸரண பேதத்தாலே) என்று. அதாவது ஏகமுகமாக ப்ரஸரிக்கையன்றிக்கே, சக்ஷுச் ச்ரோத்ராத்யநேகேந்த்ரிய த்வாரா ப்ரஸரித்து, ரூப சப்தாத்யநேக விஷயங்களை க்ரஹிக்கிறவிதுக்கு, தர்சந ச்ரவணாதி ஸம்ஜ்ஞா பேதேந தோற்றுகிற நாநாத்வம் ப்ரஸரண பேத நிபந்தநமென்கை. இத்தால், நித்யமான ஜ்ஞானத்துக்கு உத்பத்தி விநாச வ்யவஹார ஹேது இன்னதென்று சொன்ன அநந்தரத்திலே ப்ராஸங்கிகமாக அதினுடைய நாநாத்வேந ப்ரகாசந ஹேதுவும் சொல்லப்பட்டதாயிற்று. ஆத்மாவினுடைய தர்மபூதஜ்ஞாந நித்யத்வம், “ந ஹி விஜ்ஞாதா விஜ்ஞாதோ விபரிலோபோ வித்யதே, ந ஹி த்ருஷ்டோ விபரிலோபோ வித்யதே”, “ஜ்ஞாநம் வைராக்யமைச்வர்யம் தர்மச்ச மநுஜேச்வர, ஆத்மநோ ப்ரஹ்ம பூதஸ்ய நித்யமேதத் சதுஷ்டயம் யதோதபாநகரணாத் க்ரியதே ந ஜலாம்பரமம், ஸதேவ நீயதே வ்யக்திமஸதஸ் ஸம்பவ: குத: ததா ஹேய குணத்வம்ஸாதவபோதாதயோ குணா:, ப்ரகாசயந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே” என்று ச்ருதி ஸ்ம்ருத்யாதிகளில் சொல்லப்பட்டதிறே.
இந்த்ரியங்கள் மூலம் உலவுகின்ற வேற்றுமை காரணமாக, ஞானமானது ஒன்று என உள்ளபோதிலும், பலவாகத் தோன்றுகிறது. அதாவது ஒரே வழியாக ஞானம் வெளியேறி உலவுதல் என்பது அல்லாமல், கண் மற்றும் காது என்பது போன்ற பலவிதமான இந்த்ரியங்கள் வழியாக உலவியபடி, உருவம் மற்றும் ஒலி போன்ற பல உலகவிஷயங்களை ஞானம் உள்வாங்குகிறது. ஆகவே, காணுதல் மற்றும் கேட்டல் என்பது போன்று பெயர் வேறுபாடுகள் காரணமாக உண்டாகின்ற பன்மை என்பது, ஞானத்தின் உலவுகின்ற வேற்றுமைக்கு அடிப்படையாகிறது. இதன் மூலம், நித்யமாக உள்ள ஞானத்திற்கு, உற்பத்தி மற்றும் அழிவு என்று கூறப்படுவதற்கான காரணம் இன்னதாகும் என்கிறார். இதனைத் தொடர்ந்து, இதன் மூலமாகவே ஞானமானது பலவிதமாக வெளிப்படுதல் என்பதற்கான காரணமும் கூறப்பட்டது. ஆத்மாவின் தர்மபூதஞானமானது நித்யமான தன்மை கொண்டது என்பதை, ப்ரு. (4-3-30) – ந ஹி விஜ்ஞாது: விஜ்ஞாதே: விபரிலோபோ வித்யதே – அறிபவனுடைய அறிவுக்கு அழிவு உள்ளதை இதுவரை அறிந்ததில்லை – என்றும், வைஷ்ணவதர்மம் - ஜ்ஞாநம் வைராக்யமைச்வர்யம் தர்மச்ச மநுஜேச்வர, ஆத்மநோ ப்ரஹ்ம பூதஸ்ய நித்யமேதத் சதுஷ்டயம் யதோதபாநகரணாத் க்ரியதே ந ஜலாம்பரமம், ஸதேவ நீயதே வ்யக்திமஸதஸ் ஸம்பவ: குத: ததா ஹேய குணத்வம்ஸாதவபோதாதயோ குணா:, ப்ரகாசயந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே – ஞானம், வைராக்யம், ஐச்வர்யம் மற்றும் தர்மம் என்றுள்ளதான ப்ரஹ்மத்துடன் ஒப்புமை அடைந்தவனாகிய முக்தாத்மா ஒருவனுக்கு இந்த நான்கும் எவ்விதம் நித்யமாக உள்ளது? இது எப்படி என்றால், கிணறு வெட்டுவதன் மூலம் நீரானது எவ்விதம் உற்பத்தி ஆகாமல் தானாகவே வெளிப்படுகிறதோ அதே போன்று, தாழ்ந்த குணங்கள் அனைத்தும் விலகுவதால் ஞானம் வெளிப்படுகிறது; இத்தகைய ஞானம் போன்றவை ஆத்மாவிற்கு நித்யமே ஆகும் - என்றும் ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டது அல்லவோ?