Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 66)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

ஜ்ஞாநம் நித்யமாகில், “எனக்கு ஜ்ஞாநம் பிறந்தது, நசித்தது” என்கிறபடி யென்னென்னில்;

– இனிமேல், ஜ்ஞாநத்துக்குச் சொன்ன நித்யத்வாதிகளை உபபாதிக்கிறார். அதில் ப்ரதமத்திலே, “எனக்கிப்போது ஜ்ஞாநம் பிறந்தது, எனக்கிப்போது ஜ்ஞாநம் நசித்தது” என்று உத்பத்தி விநாசவத்தாகச் சொல்லப்படுகிற ஜ்ஞாநத்துக்கு, நித்யத்வம் கூடும்படி எங்ஙனே என்கிற சங்கையைப் பரிஹரிக்கைக்காக, தஜ்ஜிஜ்ஞாஸு ப்ரசநத்தை அநுவதிக்கிறார்.

அடுத்து, ஞானத்திற்குக் கூறப்பட்டதான “நித்யமாக உள்ள தன்மை” போன்றவற்றை விளக்குகிறார். அதில் முதலில், “எனக்கு இப்போது ஞானம் பிறந்தது, எனக்கு இப்போது ஞானம் அழிந்தது” என்று, உற்பத்தி மற்றும் அழிவு ஆகியவற்றுடன் கூடிய ஞானத்திற்கு, நித்யமாக உள்ள தன்மை என்பது எவ்விதம் பொருந்தும் என்ற சந்தேகத்தை விலக்குவதற்காக, அதனைக் குறித்து அறிய விரும்புபவர்களுடைய கேள்வியை அடியொற்றி உரைக்கிறார்.

(ஜ்ஞாநம் நித்யமாகில், “எனக்கு ஜ்ஞாநம் பிறந்தது, நசித்தது” என்கிறபடி யென்? என்னில்) என்று.

ஞானம் நித்யமானது என்றால், “எனக்கு ஞானம் பிறந்தது, எனக்கு ஞானம் அழிந்தது” என்று கூறுவது எப்படி? இதற்கான விடை அடுத்த சூர்ணையில் உள்ளது.