Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 65)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
அதில் சிலருடைய ஜ்ஞாநம் எப்போதும் விபுவாயிருக்கும், சிலருடைய ஜ்ஞாநம் எப்போதும் ஆவிபுவாயிருக்கும், சிலருடைய ஜ்ஞாநம் ஒருக்கால் விபுவாய் ஒருக்கால் ஆவிபுவாயிருக்கும்.
ஸகல சேதநருடைய ஜ்ஞாநமும் இப்படி இராதொழிவானென்? என்கிற சங்கையிலே ஸங்கோசாஸங்கோச நிபந்தநமான தாரதம்யத்தை அருளிச் செய்கிறார் (அதில் சிலருடைய ஜ்ஞாநம்) என்று தொடங்கி.
ஆனால் அனைத்து ஆத்மாக்களுடைய ஞானமும் இவ்விதம் இல்லாமல் உள்ளது ஏன் என்று சந்தேகத்திற்கு, ஞானச்சுருக்கம் ஏற்படுதல் மற்றும் மலர்தல் ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ள ஏற்றத்தாழ்வை அடுத்து சமாதானமாக அருளிச்செய்கிறார்.
– அதாவது “அயர்வறுமமரர்கள்” என்கிறபடியே, பகவத்ஜ்ஞாநத்துக்கு ஒரு நாளும் ஸங்கோசமின்றிக்கே தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ஸதாநுபவம் பண்ணுகிற நித்யஸூரிகளுடைய ஜ்ஞாநம், எப்போதும் விபுவாயிருக்கும்; “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு” மாயிருக்கிற பத்தருடைய ஜ்ஞாநம், கர்மாநுகுணமாக ஸங்கோச விகாஸங்களோடே கூடிக்கொண்டு, எப்போதும் அவிபுவாயிருக்கும். “கரை கண்டோர்” என்கிறபடியே, பகவத் ப்ரஸாதத்தாலே ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்பட்ட முக்தருடைய ஜ்ஞாநம், பூர்வாவஸ்தையில் அவிபுவாய், உத்தராவஸ்தையில் “ஸர்வம் ஹ பச்ய பச்யதி” என்கிறபடியே விபுவாயிருக்குமென்கை.
திருவாய்மொழி (1-1-1) – அயர்வறும் அமரர்கள் - என்பதற்கு ஏற்ப, பகவானை எப்போதும் அனுபவித்தல் என்ற ஞானத்திற்கு ஒருநாளும் சுருக்கம் ஏற்படுவதில்லை; அதாவது அவனுடைய ஸ்வரூபம், ரூபம், குணங்கள் மற்றும் விபூதிகள் ஆகிய அனைத்தையும் எப்போதும் அனுபவித்தபடி உள்ள நித்யஸூரிகளுடைய ஞானமானது எப்போதும் எங்கும் நிறைந்தபடியே இருப்பதாகும். திருவிருத்தம் (1) – பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் - என்பதற்கு ஏற்ப உள்ளதான, ஸம்ஸாரத்தில் பந்தப்பட்டுள்ள ஸம்ஸாரிகளுடைய ஞானமானது, கர்மங்களின் காரணமாக, சுருக்கம் மற்றும் மலர்ச்சி ஆகியவற்றுடன் கூடியதாக, எங்கும் நிறைந்ததாக இன்றி காணப்படும். திருவாய்மொழி (8-3-10) - கரை கண்டோர் - என்பதற்கு ஏற்ப, பகவானின் கருணை காரணமாக ஸம்ஸாரத்தைக் கடந்து அக்கரை சென்ற முக்தர்களுடைய ஞானமானது, முக்திக்கு முன்னர் எங்கும் நிறையாததாகவும், முக்திக்கு பின்னர், சாந். (7-26-2) - ஸர்வம் ஹ பச்ய பச்யதி - எப்போதும் பார்த்தபடியே இருப்பர் – என்பதற்கு ஏற்ப, எங்கும் நிறைந்ததாகவே உள்ளது.