Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 64)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஸ்வரூபம் தர்மியாய், ஸங்கோச விகாஸங்களுக்கு அயோக்யமாய், தன்னை யொழிந்தவற்றை ப்ரகாசிப்பியாமலே தனக்குத்தான் ப்ரகாசிக்கக் கடவதாய், அணுவாயிருக்கும்; ஜ்ஞானம் தர்மமாய், ஸங்கோச விகாஸங்களுக்கு யோக்யமாய், தன்னையொழிந்தவற்றை ப்ரகாசிப்பிக்கக் கடவதாய், தனக்குத்தான் ப்ரகாசியாதே ஆத்மாவுக்கு ப்ரகாசிக்கக் கடவதாய், விபுவாயிருக்கும்.
– வைதர்ம்யம் தன்னை அருளிச் செய்கிறார் (ஸ்வரூபம் தர்மியாய்) என்று தொடங்கி.
ஆத்மாவின் ஸ்வரூபம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள சேராத தன்மைகளை அருளிச்செய்கிறார்.
அதாவது தர்மித்வம், ஸங்கோச விகாஸாயோக்யத்வம், ஸ்வவ்யதிரிக்தார்த்தாப்ரகாசகத்வம், ஸ்வஸ்மை ஸ்வயம்ப்ரகாசத்வம், அணுத்வம் இவை ஸ்வரூபத்துக்கு விசேஷம். தர்மத்வம், ஸங்கோச விகாஸ யோக்யத்வம், ஸ்வவ்யதிரிக்தார்த்த ப்ரகாசகத்வம், ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாச ரஹிதத்வம், ஸ்வாச்ரயஸ்ய ஸ்வயம்ப்ரகாசத்வம், விபுத்வம் இவை ஜ்ஞாநத்துக்கு சேஷமென்றபடி. (விபுவாயிருககும்) என்று ஜ்ஞாநத்தினுடைய ஸ்வாபாவிக வேஷத்தை அருளிச் செய்தாரித்தனையிறே.
தர்மத்தை கொண்டதாக உள்ள தன்மை, சுருங்குதல் மற்றும் மலர்தல் போன்ற தன்மை, தன்னைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்தாத தன்மை, தனக்குத்தானே வெளிப்படுத்தும் தன்மை, அணு அளவே உள்ள தன்மை போன்ற பலவும் ஆத்ம ஸ்வரூபத்திற்கு உள்ள சிறப்புகளாகும். தர்மமாக உள்ள தன்மை, சுருங்குதல் மற்றும் மலர்தல் ஆகியவற்றுக்கு ஏற்றதாக உள்ள தன்மை, தன்னைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்தும் தன்மை, தனக்குத் தானே வெளிப்படுத்தாத தன்மை, தனக்கு இருப்பிடமாக உள்ள ஆத்மாவிற்கு தன்னை வெளிப்படுத்தும் தன்மை, எங்கும் பரவி உள்ள தன்மை போன்ற பலவும் ஞானத்திற்கு உள்ள சிறப்புகளாகும். “எங்கும் பரவி உள்ள தன்மை” என்று ஞானத்தின் இயல்பான நிலையை அருளிச்செய்தார்.