Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 61)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
இப்போது இவர்களுக்கு லக்ஷணம் சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.
கீழே ஆத்மஸ்வரூப லக்ஷணத்தை விஸ்தரேண அருளிச் செயதார். அதில் அசித் விலக்ஷணத்வம், அஜடத்வம், ஆநந்தரூபத்வம், அவ்யக்தத்வம் அசிந்த்யத்வம், நிரவயவத்வம், நிர்விகாரத்வம், ஜ்ஞாநாச்ரயத்வமாகிற இவை ஜீவேச்வர ஸாதாரணம். நியாமயத்வாதிகள் மூன்றும் சிதசித் ஸாதாரணம். நித்யத்வம் தத்வத்ரய ஸாதாரணம். அணுத்வமும், அசித் பரமாணு ஜீவ ஸாதாரணம். இவையித்தனையும் சேரக்கூடி, ஆத்மஸ்வரூபத்துக்கு அசிதீச்வர வ்யாவ்ருத்தியை ஸித்திப்பிக்கையாலே இவற்றை லக்ஷணமென்னக் குறையில்லை. அப்படியன்றிக்கே, ஸுக்ரஹமாக ஒரு லக்ஷணம் அருளிச் செயகிறார்.
இதுவரை ஆத்மஸ்வரூபத்தின் லக்ஷணத்தை விரிவாக அருளிச்செய்தார். அவற்றில், ஆத்மாவானது “அசித்தைக் காட்டிலும் வேறுபட்ட தன்மை கொண்டது, அஜடமாக உள்ளது, ஆநந்தமயமானது, இந்த்ரியங்களால் அறிய இயலாதது, இப்படிப்பட்டது என்று எண்ணமுடியாத தன்மை கொண்டது, அவயவங்கள் அற்றது, மாற்றங்கள் அடையாதது, ஞானத்தின் இருப்பிடமாக உள்ளது” என்பது போன்று பல தன்மைகள் கொண்டதாக உள்ளது; இவை அனைத்தும், ஜீவாத்மா மற்றும் ஈச்வரன் ஆகியவர்களுக்கே உரிய தன்மைகளாகும். “ஏவப்படும் தன்மை, தாங்கப்படுதல், மற்றும் அடிமையாக உள்ள தன்மை” ஆகியவை சித் மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் உரியதாகும். நித்யமாக இருத்தல் என்பது சித், அசித் மற்றும் ஈச்வரன் ஆகிய மூன்றுக்கும் உள்ளதாகும். அணு அளவே உள்ளது என்பது ஜீவாத்மாக்களுக்கே உரியதாகும். இவை அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிக்கொண்டு, ஆத்ம ஸ்வரூபத்தில் உள்ளதான, அசித் மற்றும் ஈச்வரன் ஆகியவற்றை காட்டிலும் வேறுபட்ட தன்மையை உணர்த்துவதால், இவை அனைத்தும் ஆத்மாவின் வடிவங்கள் என்று கூறுவதில் தவறில்லை. அது மட்டும் அல்லாமல், ஆத்மாவிற்கு, தெளிவான வேறு ஒரு அடையாளத்தையும் அடுத்து அருளிச் செய்கிறார்.
– இவர்களென்கிறது, த்ரிவித சேதநரையும். லக்ஷணமாவது, அஸாதாரண தர்மமிறே. ஆகையால் சேஷத்வ மாத்ரத்தைச் சொல்லில், அசித் வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும்; ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொல்லில், ஈச்வர வ்யாவருத்தி ஸித்தியாமையாலும், சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணமென்கிறார்.
“இவர்கள்” என்று கூறுவது பத்தர், முத்தர் மற்றும் நித்யர் என்பதான மூன்று ஆத்மாக்களையும் ஆகும். லக்ஷணம் என்றால் ஒரு குறிப்பிட்ட வஸ்துவிற்கு மட்டுமே உரிய அடையாளம் அல்லவோ? ஆகவே, அடிமையாக உள்ள தன்மையை மட்டுமே உரைத்தால் அசித்தைக் காட்டிலும் உள்ள வேறுபட்ட தன்மை வெளிப்படுவதில்லை என்பதாலும்; அறிபவனாக இருத்தல் என்ற தன்மையை மட்டுமே உரைத்தால், ஈச்வரனை காட்டிலும் வேறுபட்ட தன்மை வெளிப்படுவதில்லை என்பதாலும், “அடிமைத்தனம் என்பதுடன் கூடிய அறிபவனாக உள்ளவன்” என்பதே ஆத்மாவின் லக்ஷணம் என்கிறார்.