Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 57)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

மோக்ஷ தசையிலும் பேதமுண்டாகையாலே.

(மோக்ஷ தசையிலும் பேதமுண்டாகையாலே) என்று. அதாவது, “ஸதா பச்யந்தி”, “மம ஸாதர்ம்யமாகதா:”, “முக்தாநாம் பரமாகதி:”, “ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே”, “யஸ்மிந் பதே விராஜந்தே முக்தாஸ் ஸம்ஸார பந்தநை:” என்று, மோக்ஷ தசையிலும் ஆத்மபேதத்தை ச்ருதி ஸ்ம்ருதிகள் சொல்லுகையாலே, அப்படி சொல்லவொண்ணா தென்கை. மோக்ஷ தசையாவது, ஸர்வோபாதி விநிர்முக்த தசையிறே. அந்த தசையிலும், ஆத்மபேதம் ச்ருதி ஸித்தமாகையாலே, “நித்யோ நித்யாநாம்” என்கிற ச்ருதியும் ஆத்மபேதத்தைச் சொல்லுகிறதென்றதாயிற்று.

ப்ர. (5-10) - ஸதா பச்யந்தி - நித்யஸூரிகள் எப்போதும் அந்த விஷ்ணுவின் உயர்ந்த இடத்தைப் பார்த்தபடி உள்ளனர் – என்றும், கீதை. (14-2) - மம ஸாதர்ம்யம் ஆகதா: - எனது ஸ்வரூபத்தை அடைந்தவர்கள் – என்றும், முக்தாநாம் பரமாகதி: - முக்தர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள் – என்றும், ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே – ஸாயுஜ்யம் அடைகிறார்கள் – என்றும், யஸ்மிந் பதே விராஜந்தே முக்தாஸ் ஸம்ஸார பந்தநை: - எந்த இடத்தை அடைவதால் முக்தர்கள் ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுகிறார்களோ – என்றும் பலவிதமாக மோக்ஷ நிலையில் கூட ஆத்மபேதத்தை ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் கூறுவதால், அந்த வாக்கியம் ஔபாதிக பேதத்தைக் கூறுவதாக உரைக்க இயலாது. மோக்ஷ நிலை என்றால், அனைத்துவிதமான உபாதிகளிலிருந்தும் விடுபட்ட நிலை அல்லவோ? அந்த நிலையில் கூட ஆத்மபேதங்கள் குறித்து ச்ருதி உரைப்பதால், “நித்யோ நித்யாநாம்” என்ற வாக்கியமும், ஆத்மபேதத்தை கூறுவதாகவே ஆகிறது.