Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 55)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஆத்மபேதம் சொல்லுகிற ச்ருதியோடும் விரோதிக்கும்.
இப்படி யுக்தியாலே அநேக விரோதங்களை தர்சிப்பித்தார் கீழ். இவ்வளவேயன்று; இப்பக்ஷத்துக்கு ச்ருதி விரோதமுமுண்டென்கிறார்.
இவ்விதம் தகுந்த வாதங்கள் மூலம், “ஒரே ஆத்மா மட்டுமே உள்ளான்” என்று கூறுவதில் உள்ள பலவிதமான முரண்பாடுகளை எடுத்துரைத்தார். இது மட்டுமே அல்லாமல், இந்த வாதத்தை ஏற்பது என்பது, ச்ருதிக்கும் விரோதம் என்று அடுத்து அருளிச்செய்கிறார்.
(ஆத்மபேதம் சொல்லுகிற ச்ருதியோடும் விரோதிக்கும்) என்று. அதாவது, ஏகாத்மா என்கிற பக்ஷம், “நித்யோ நித்யாநாம் சேதநச் சேதநாநாமேகோ பஹூநாம் யோ விததாதி காமாந்” என்று ஆத்மபேதத்தைச் சொல்லுகிற ச்ருதிக்கும் சேராதென்றபடி.
அதாவது “ஒரே ஆத்மா” என்ற வாதத்தில், கட. (5-13) – நித்யோ நித்யாநாம் சேதநச்சேதநாநாம் ஏகோ பஹூநாம் யோ விததாதி காமாந் – நித்யர்களில் நித்யமானவனும், சேதநர்களில் சேதநனும் ஆகிய அவன் அனைவருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுகிறான் – என்று, ஆத்மபேதத்தைக் கூறும் ச்ருதி வாக்கியத்திற்கு முரண்பாடு ஏற்படும்.