Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 53)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஒருவன் ஸம்ஸரிக்கையும், ஒருவன் முக்தனாகையும், ஒருவன் சிஷ்யனாகையும், ஒருவன் ஆசார்யனாகையும் கூடாது.
– இப்படி, ஸுகதுக்க வ்யவஸ்தாநுபபததியேயன்று; ஏகாத்மாவென்னும் பக்ஷத்தில் பத்த முக்த வ்யவஸ்தாநுபபத்தியும், சிஷ்யாசார்ய வ்யவஸ்தாநுபபத்தியும் உண்டென்கிறார் மேல் (ஒருவன் ஸம்ஸரிக்கையும்) என்று தொடங்கி.
இவ்விதம் “ஆத்மாக்கள் பல அல்ல, ஒரு ஆத்மா மட்டுமே” என்று கூறும் வாதத்தில், இன்ப துன்பங்களுடைய வேறுபாடுகளின் பொருந்தாமை மட்டும் அல்ல; ஒரே ஆத்மாதான் உள்ளது என்று கூறும் வாதத்தில், “பத்தர், முக்தர்” என்பது போன்று வேறுபாடுகள் பொருந்தாமை மற்றும் “சிஷ்யர், ஆசார்யன்” என்பது போன்று வேறுபாடுகள் பொருந்தாமை ஆகியவையும் ஏற்படும் என்கிறார்.
– அதாவது, ஏகாத்மாவாகில், “அநேக ஜந்ம ஸாஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந், மோஹச்ரமம் ப்ரயாதோஸௌ வாஸநா ரேணு குண்டித:” என்கிறபடியே, ஒருவன் ஸம்ஸரிக்கையும், “சுகோ முக்கோ வாமதேவோ முக்த:” என்கிறபடியே ஒருவன் முக்தனாகையும், “தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித்பாணி: ச்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம் | தஸ்மை ஸ வித்வான் உபாஸந்நாயஸம்யக் ப்ரசாந்த சித்தாய சமாந்விதாய | யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம்” என்கிறபடியே, ஒருவன் சிஷ்யனாய வந்து உபஸத்தி பண்ண, ஒருவன் ஆசார்யனாயிருந்து அவனுக்கு உபதேசிக்கையும் கூடாதென்கை.
அதாவது “ஆத்மா ஒன்று மட்டுமே” என்று கூறினால், ஸ்ரீவிபு (6-7-19) - அநேக ஜந்ம ஸாஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந், மோஹச்ரமம் ப்ரயாதோஸௌ வாஸநா ரேணு குண்டித: – பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் ஸம்ஸாரத்தில் உழன்றபடி மயக்க வாஸனைகளால் உண்டாகும் துன்பத்தை அடைகிறான் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஒரு ஜீவாத்மா ஸம்ஸாரத்தில் ஆழ்ந்து நிற்பது; சுகோ முக்கோ வாமதேவோ முக்த: - ஸுகர் முக்தரானார், வாமதேவர் முக்தரானார் - என்பதற்கு ஏற்ப ஒரு ஜீவாத்மா முக்தனாக இருப்பது; முண். (1-2-12, 13) – தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித்பாணி: ச்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம் | தஸ்மை ஸ வித்வான் உபாஸந்நாயஸம்யக் ப்ரசாந்த சித்தாய சமாந்விதாய | யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் – இத்தகைய ப்ரஹ்ம ஞானத்தை அடையும் பொருட்டு வேதங்களை அத்யயனம் செய்த அவன்,தனது கையில் ஸமித் (ஆலமரத்தின் சுள்ளிகள்) போன்றவற்றை எடுத்தவனாக, வேத அத்யயனம் செய்தவரும் ப்ரஹ்மத்தைக் குறித்து நன்கு அறிந்தவரும் ஆகிய ஆசார்யனை அடையவேண்டும்; தன்னிடம் வந்தவனும், தன்னிடம் வணக்கம் நிறைந்தவனும், தனது மனதை வசப்படுத்தியவனும் ஆகிய அந்த சிஷ்யனுக்கு ஆசார்யன் செய்யவேண்டியது என்னவெனில், தான் எந்த ஒரு வித்யை மூலமாக ஸ்வரூபம் மற்றும் குணங்களால் மாறுபாடு இல்லாத பரமபுருஷனை அறிகின்றாரோ, அத்தகைய ப்ரஹ்மவித்யையை அந்தச் சிஷ்யனுக்கு நேர்மையாக உபதேசிக்கவேண்டும்– என்பதற்கு ஏற்ப, ஒரு ஆத்மா சிஷ்யனாக வந்து உபதேசம் கேட்பது மற்றும் ஒரு ஆத்மா ஆசர்யனாக இருந்து உபதேசம் செய்வது போன்ற பலவும் பொருந்தால் போகும்.