Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 50)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

அந்த பக்ஷத்தில், ஒருவன் ஸுகிக்கிற காலத்திலே வேறெ ஒருவன் துக்கிக்கக் கூடாது.

அது அயுக்தமென்னுமிடம் ஸாதிக்கிறார்.

அவர்களுடைய வாதமானது பொருந்தமற்றது என்று அடுத்து கூறுகிறார்.

(அந்த பக்ஷத்தில்) இத்யாதியாலே. அதாவது, அப்படி ஆத்மபேதமில்லாத பக்ஷத்தில், “அஹம் ஸுகீ” என்று ஒருவன் ஸுகோத்தரனாயிருக்கிற காலத்திலே வேறே ஒருவன், “அஹம் து:கீ” என்று துக்கோததரனாயிருக்கிற இந்த ஸுகதுக்க வ்யவஸ்தை கூடாதென்கை. ஸுகது:க்கங்களிரண்டும் ஏகாச்ரயகதமாகில், உபய ப்ரதிஸந்தாநமும் ஒருவனுக்கே உண்டாகவேணுமிறே. ஆகையால் ஸுகதுக்கங்கள் நியதங்களாகையாலே ஆத்மபேதமுண்டாக வேணுமென்று கருத்து.

“ஆத்மாக்கள் பல அல்ல, ஒருவன் மட்டுமே” என்பதான, ஆத்மாக்களில் வேறுபாடு இல்லை என்னும் வாதத்தில், “அஹம் ஸுகீ - நான் சுகமாக உள்ளேன்” என்று ஒருவன் சுகம் நிறைந்தவனாகவும், வேறு ஒருவன் “அஹம் து:கீ - நான் துக்கமாக உள்ளேன்” என்று துக்கம் நிறைந்தவனாகவும், இவ்விதமாக சுகதுக்க வேறுபாடுகள் இருக்கக்கூடாது அல்லவோ? சுகம் மற்றும் துக்கம் ஆகிய இரண்டும் ஒரே இடத்தில் உள்ளது என்றால், இரண்டுவிதமான நிலையும் ஒருவனுக்கு ஒரே நேரத்தில் உண்டாக வேண்டும் அல்லவோ? ஆகவே சுகம் மற்றும் துக்கம் ஆகிய இரண்டும் தனித்தனியே ஏற்படுவதால், ஆத்மாக்களில் வேறுபாடு உண்டு; அதாவது, பல ஆத்மாக்கள் உள்ளனர் என்று கருத்து.