Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 49)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

சிலர், ஆத்மபேதமில்லை; ஏகாத்மாவே உள்ளதென்றார்கள்.

உக்தமான ஜீவாநந்த்யத்துக்கு விரோதியான ஐகாத்ம்ய வாதத்தை நிராகரிக்கிறார் மேல் (சிலர் ஆத்ம பேதமில்லை, ஏகாத்மாவேயுள்ளதென்றார்கள்) என்று தொடங்கி.

மேலே கூறப்பட்டதான “ஆத்மாக்கள் எண்ணற்றவை” என்ற வாதத்திற்கு முரண்பட்ட கருத்தான “ஆத்மா ஒன்று மட்டுமே” என்ற வாதத்தை அடுத்து மறுக்கிறார்.

சிலரென்று அநாதரோக்தியாலே அருளிச் செய்கிறார். இப்படி சொல்லுமவர்கள் தாங்கள் ஆரோ? என்னில், ஜீவாத்வைத ப்ரதிபாதக சாஸ்த்ரத்தில் குத்ருஷ்டிகள். அதாவது, ப்ரஹ்மாத்வைதமென்றும், ஜீவாத்வைதமென்றும் சாஸ்த்ர ப்ரதிபாத்யமான அத்வைதம் த்விவிதமாயிருக்கும். அதில் ப்ரஹ்மாத்வைதமாவது ப்ரகார்யத்வைதம். ஜீவாத்வைதமாவது ப்ரகாராத்வைதம். இதுக்கு நியாமகமேது? என்னில், ப்ரஹ்ம ப்ரகரணங்களிலே “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம”, “ஐததாத்ம்யமிதம் ஸர்வம்”, “புருஷ ஏவேதம் ஸர்வம்” என்று ஸாமாநாதிகரண்யத்தாலே ப்ரஹ்மாத்வைதத்தை ப்ரதிபாதிக்கையாலும், ஸாமாநாதிகரண்யம் ப்ரகார பேத விசிஷ்ட ப்ரகார்யேகத்வ பரமாகையாலும், “ஏகஸ்ஸந் பஹுதா விசார” என்று ப்ரகார பஹுத்வம் கண்டோக்தமாகையாலும், ஐக்ய விதிக்கு சேஷமான “நேஹநாநாஸ்தி” இத்யாதி பேத நிஷேதம் விஹிதைக்ய விரோதி பேத விஷயமாகையாலும், ஸாமான்ய நிஷேதம் விஹித வ்யதிரிக்த விஷயமாகையாலே ப்ரகாரி பஹுத்வ நிஷேத பரமாகையாலும், “ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே” என்று ப்ரஹ்ம துல்ய ப்ரகார்யந்தர நிஷேத கண்டோக்தியாலும் ப்ரகார்யத்வைதமே ப்ரஹ்மாத்வைதம். ஜீவபஹுத்வம் ச்ருதி ஸித்தமாகையாலும், அல்லாதபோது பத்த முக்த வ்யவஸதாநுபபத்தியாலும் உபதேசாநுபபத்தியாலும் ஸுகாதி வ்யவஸ்தாநுபபத்தியாலும் “புமாந் ந தேவோ ந நரோ ந பசுர் ந ச பாதப:, சதுர்விதோ விபேதோயம் மித்தயா ஜ்ஞாந நிபந்தந தேவாதிபேதே அபத்வஸ்தே” இத்யாதிகளாலே தேவாதி சரீர பேத விசேஷ நிஷேதம் கண்டோக்தமாகையாலும், முக்தாத்மாக்களுக்கு ஸாம்யத்தை ச்ருதி சொல்லுகையாலும், ஜீவாத்வைதம் ப்ரகாராத்வைதமே. இதுதாம் ச்ருதப்ரகாசிகையிலே ஆதிபரத சதுச்ச்லோகீ வ்யாக்யாநோபக்ர மத்திலே “ப்ரஹ்மாத்வைதம் ஜீவாத்வைதஞ்சேத்யத்வைதம் த்விவிதம் சாஸ்த்ர ப்ரதிபாத்யம்” என்று தொடங்கி, ஸ்ரீவேதவ்யாஸபட்டராலே விஸ்தரேண ப்ரதிபாதிக்கப்பட்டது. இப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப்படுகிற ஜீவாத்வைதத்துக்கு ஹ்ருதயமறியாதே “ஆத்மபேதமில்லை ஏகாத்மாவே உள்ளதெ”ன்று சில குத்ருஷ்டிகள் சொன்னார்களென்கை.

அவ்விதம் உரைப்பவர்கள் யார் என்று, அவர்கள் குறித்து உரைப்பதற்கும் அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதால், அவர்களை “சிலர்” என்கிறார். இவ்விதம் கூறுபவர்கள் யார் என்றால், “ஜீவாத்மா - பரமாத்மா” என இரண்டு உள்ளதை வெளிப்படுத்தும் சாஸ்த்ரங்களைத் தவறாக அறிபவர்கள் ஆவார்கள். அதாவது சாஸ்த்ரங்களில் கூறப்படும் அத்வைதமானது, ப்ரஹ்ம அத்வைதம் மற்றும் ஜீவ அத்வைதம் என இரு வகைப்படும். இவற்றில் ப்ரஹ்ம அத்வைதம் என்பது “ப்ரகாரி ஒன்று” என்பதாகும்; ஜீவ அத்வைதம் என்பது “ப்ரகாரம் ஒன்று” என்பதாகும் (ப்ரகாரி என்றால் முதன்மையான வஸ்து, ப்ரகாரம் என்றால் ப்ரகாரிக்கு உடைமையான பொருள் என்பதாகும்). இதற்கான சான்றுகள் என்ன? ப்ரஹ்மத்தைக் குறித்து உரைக்கப்படும் பகுதிகளில், சாந். (3-14-1) - ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம - இவை அனைத்தும் ப்ரஹ்மம் -– என்றும், சாந். (6-8-7) – ஐதத் ஆத்ம்யமிதம் ஸர்வம் - அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொண்டது - என்றும், ச்வே. (3-15)- புருஷ ஏவேதம் ஸர்வம் – இந்தப் புருஷனே இவை அனைத்தும் - என்றும் உள்ள பல வாக்கியங்களில், ஸாமாநாதிகண்யம் (பல பொருள்கள் கொண்ட சொற்கள், ஒரே வேற்றுமையில் நின்று, ஒரே பொருள் குறித்து உரைக்கும் தன்மை : உதாரணம் - கறுத்த பருத்த யானை – என்பதில் உள்ள கறுத்த மற்றும் பருத்த ஆகிய சொற்களை யானையையே குறிப்பதாக உள்ளன) மூலம், ப்ரஹ்ம அத்வைதம் வெளிப்படுத்தப்படுகிறது; சிறப்புடன் கூடியவை மற்றும் அவ்விதம் அல்லாதவை எனப் பலவற்றையும் ஒன்றாக ஸாமாநாதிகரண்யம் கூறுவதால், ப்ரகாரங்களில் உள்ள வேறுபாட்டுடன் ப்ரகாரி உள்ளது என்று உணர்த்துகிறது; ஏகஸ்ஸந் பஹுதா விசார – பரமாத்மா ஒன்றாக இருந்தபடி பலவற்றையும் வ்யாபிக்கிறான் – என்று ப்ரகாரத்தின் பலவாக உள்ள நிலை கூறப்பட்டுள்ளது. “ஒன்றே ஆகும்” என்ற ஐக்யத்தை கூறும் விதியின் எஞ்சிய பகுதியானது, ந இஹ நாநாஸ்தி - பரமாத்மாவை விடுத்து ஏதும் இல்லை - என்று வேறுபாட்டைத் தள்ளுகிறது; இப்படியாக வேறுபாட்டைத் தள்ளுகின்ற சாஸ்த்ரங்களில் “அனைத்தும் ஒன்றே” என்று விதிக்கப்பட்ட கருத்தானது விரோதிபேத விஷயமாக உள்ளதாலும், பொதுவாகத் தள்ளப்படும் விதியானது வேறுபட்ட விஷயமாக இருப்பதால் ப்ரகாரியாகிய விஷயம் பலர் என்று தள்ளுவதாக உள்ளதாலும், ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே – பரமாத்மாவிற்கு நிகரானதும் மேலானதும் காணப்படவில்லை – என்று ப்ரஹ்மத்திற்கு நிகரான ப்ரகாரி வேறு இல்லை என்று விதிவாக்கியமான இதில் கூறப்படுவதாலும், “ப்ரகாரியானது ஒன்றே ஆகும்” என்று கூறுவதே ப்ரஹ்ம அத்வைதமாகிறது. ஜீவாத்மாக்கள் பலர் உள்ளனர் என்பது ச்ருதி மூலம் வெளிப்படுவதாலும், இவ்விதம் கொள்ளவில்லை என்றால் “பத்தர், முக்தர்” என்பது போன்ற நிலைகள் பொருத்தம் இல்லாமல் போகும் என்பதாலும், உபதேசங்கள் அனைத்தும் பொருந்தாமல் போகும் என்பதாலும், இன்பம் முதலான அனுபவங்கள் பொருந்தாது என்பதாலும், ஸ்ரீவிபு. (2-13-98) - புமாந் ந தேவோ ந நரோ ந பசுர் ந ச பாதப:, சதுர்விதோ விபேதோயம் மித்தயா ஜ்ஞாந நிபந்தந தேவாதிபேதே அபத்வஸ்தே - ஜீவாத்மா தேவனும் அல்லன், மனிதனும் அல்லன், தாவரம் அல்லன், விலங்கு அல்லன் என்று கூறப்பட்ட நான்குவிதமான வேறுபாடுகள் தவறான ஞானத்தால் ஏற்படுகிறது; தேவன் முதலான வேறுபாடுகள் நீங்கும்போது மெய்யான ஞானம் ஏற்படுகிறது - என்பது போன்று வாக்கியங்கள் மூலம் தேவர்கள் முதலான சரீர வேறுபாடுகள் அனைத்தும் கண்டிக்கப்பட்டதாலும், முக்தி பெற்ற ஆத்மாக்களுடைய ஸ்வரூபத்தில் ஒற்றுமை கூறப்படுவதாலும், ஜீவ அத்வைதம் என்பது ப்ரகார அத்வைதமே ஆகிறது. இதனை ச்ருதப்ரகாசிகையில் ஸ்ரீவேதவ்யாஸபட்டர் ஆதிபரத சதுச்லோகி வ்யாக்யான தொடக்கத்தில், ப்ரஹ்மாத்வைதம் ஜீவாத்வைதஞ்சேத்யத்வைதம் த்விவிதம் சாஸ்த்ர ப்ரதிபாத்யம் - ப்ரஹ்ம அத்வைதம் மற்றும் ஜீவ அத்வைதம் என்று இரண்டுவிதமான அத்வைதங்கள் சாஸ்த்ரத்தில் கூறப்பட்டன – என்று உரைக்கத் தொடங்குகிறார். இவ்விதம் சாஸ்த்ரத்தில் கூறப்பட்ட ஜீவ அத்வைதத்தில் கருத்து இன்னது என்று அறியாமல் சாஸ்த்ரத்திற்கு முரணான பொருள் கற்பிக்கும் சிலர், “ஆத்மாக்களில் வேறுபாடு இல்லை. ஒரு ஆத்மா மட்டுமே உள்ளது” என்றனர்.