Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 47)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
அசித்துக் கழிந்தவாறே அவித்யாதிகள் கழியுமென்பர்கள்.
இப்படி ஆத்மாவுக்கு வந்தேறியான அவித்யாதிகள் தான் எவ்வவஸ்தையிலே கழிவது? என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (அசித்துக் கழிந்தவாறே அவித்யாதிகள் கழியுமென்பர்கள்) என்று.
இவ்விதம் ஆத்மாவிற்கு வந்து சேர்ந்ததான அவித்யை போன்றவை எந்த நிலையில் விலகுகின்றன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது காரணநிவ்ருத்தயா கார்ய நிவ்ருத்தியாகையாலே, அசித் ஸம்பந்த நிபந்தநமாக வந்த இவையும் தத் ஸம்பந்தம் கழிந்தவாறே கழியுமென்று தத்வ வித்துக்கள் சொல்லுவர்களென்றபடி. “என்பர்கள்” என்றவித்தை பரமதமாக்கி, மயர்வற மதிநலமருளப் பெற்றவர்களுக்கு பகவத் ப்ரஸாத விசேஷத்தாலே அசித்துக் கழியும் முன்னே அவித்யாதிகள் கழியக் காண்கையாலே அந்த நியமமில்லை என்று இவருக்குக் கருத்து என்று சொல்லுவாருமுண்டு. அது முக்யமன்று; அவர்கள் திருமேனியோடே இருக்கச் செய்தே, பரமபக்தி பர்யந்தமாகப் பிறந்ததேயாகிலும் “வினைப்படலம் விள்ள விழித்துன்னை மெய்யுற்றாலுள்ளவுலகளவும் யானுமுளனாவனென்கொலோ” என்கையாலே, “ஸர்வம் ஹ பச்ய: பச்யதி” என்கிற முக்தாவஸ்தையில் வைசத்யம் அசித்து கழிவதற்கு முன்பில்லாமையாலே. ஆக, கீழ்ச் செய்ததாயிற்றது - ஆத்மஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண மூன்றுபடிப்பட்டிருக்குமென்றும், அதில் பத்த சேதநர்க்கு அவித்யாத்யுத்பத்தி மூலமும், தந் நிவ்ருத்திக்ரமமும் சொல்லி நின்றது.
அதாவது, “காரணம் விலகும்போது, கார்யமும் விலகும்” என்று கூறுவதற்கு ஏற்ப, அசித் வஸ்துக்களுடைய ஸம்பந்தத்தின் விளைவாக வந்து சேர்ந்த இவை அனைத்தும், அத்தகைய ஸம்பந்தம் நீங்கிய பின்னர் அழிந்துவிடும் என்று, உண்மையை அறிந்தவர்கள் கூறுவர். சூர்ணையில் உள்ள “என்பர்கள்” என்பதை, மற்றவர்கள் கூறும் கருத்தாக எடுத்துக்கொண்டு, “மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்க்கு, பகவத் க்ருபையின் சிறப்பு காரணமாக, அசித் வஸ்துக்களுடைய ஸம்பந்தம் நீங்குவதற்கு முன்பாகவே அவித்யை போண்றவை நீங்குவதை நாம் காண்கிறோம். ஆகவே அசித் ஸம்பந்தம் நீங்கவேண்டும் என்ற விதிமுறை அனைவருக்கும் பொருந்தாது” என்று உரைப்பதே இவருடைய கருத்து என்று சிலர் கூறுவர். ஆனால் அது முக்கியம் அல்ல; ஆழ்வார்கள் தாங்கள் ஆதரித்த திருமேனியுடன் இருக்கும் நிலையில் கூட பரமபக்தி வரை நீண்ட ஞானம் ஏற்பட்டபோதிலும், பெரியதிருவந்தாதி (76) – வினைப்படலம் விள்ள விழித்துன்னை மெய்யுற்றாலுள்ளவுலகளவும் யானுமுளனாவனென்கொலோ - என்று கூறுவதால், சாந்தோக்யம் - ஸர்வம் ஹ பச்ய: பச்யதி – ப்ரஹ்மத்தைக் கண்டவன் அனைத்தையும் கண்டவன் ஆகிறான் - என்று முக்தி பெற்ற நிலையில் ஏற்படும் ஞானத்தெளிவானது, அசித் ஸம்பந்தம் நீங்குவதற்கு முன்பு இல்லை என்பதால், இவ்விதம் உரைத்தார் என்று கருத்து. இதுவரை கூறப்பட்டது என்ன? ஆத்மஸ்வரூபமானது “பத்தர், முக்தர், நித்யர்” என்று மூன்றுவகையாக உள்ளது என்பதும், ஸம்ஸாரத்தில் பந்தப்பட்ட சேதநர்களுக்கு அவித்யை உற்பத்தி ஆவதன் அடிப்படையும் அவற்றின் விலகுதலும் கூறப்பட்டது.