Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 46)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

ஜலத்துக்கு அக்நி ஸம்ஸ்ருஷ்டஸ்த்தாலீ ஸம்ஸர்கத்தாலே ஔஷ்ண்ய சப்தாதிகளுண்டாகிறாப்போலே, ஆத்மாவுக்கும் அசித் ஸம்பந்தத்தாலே அவித்யா கர்ம வாஸநா ருசிகளுண்டாகிறன.

பூர்வோக்தமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையுடைய ஆத்மாவுக்கு அவித்யாதி தோஷ ஸம்பந்தம் வந்தபடி என்? என்கிற சங்கையிலே, ஸத்ருஷ்டாந்தமாக தத்தேதுவை அருளிச்செய்கிறார் (ஜலத்துக்கு) என்று தொடங்கி.

முன்பு கூறப்பட்டதான, மிகவும் சிறப்பான ஸ்வரூபத்தைக் கொண்ட ஆத்மாவிற்கு, அவித்யை முதலான தோஷங்கள் எப்படி ஏற்படுகிறது என்று கேள்விக்கு, ஓர் உதாரணத்துடன், அதற்கான காரணத்தை அருளிச்செய்கிறார்.

அதாவது ஸ்வபாவத ஏவ நிர்விகாரமாய் சீதளமாயிருக்கிற ஜலத்துக்கு அக்நியோடே ஸம்ஸ்ருஷ்டையான ஸ்தாலியோட்டை ஸம்ஸர்கத்தாலே ஒளஷ்ண்ய சப்தோத்ரேக ரூபங்களான விகாரங்களுண்டாகிறாப்போலே ஸ்வத ஜ்ஞாநாநந்தாமல ஸ்வரூபனான ஆத்மாவுக்கும் குணத்ரயாச்ரய அசித் ஸம்பந்தத்தாலே, அவித்யா கர்ம வாஸநா ருசிகளுணடாகிறன என்கை. இவருடைய திருத்தம்பியாரும் ஆசார்ய ஹ்ருதயத்திலே “அவித்யா காரணமநாத்யசித் ஸம்பந்தம்” என்று அருளிச்செய்தாரிறே. இப்படி ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலே “நிர்வாணமய ஏவாயமாத்மா ஜ்ஞாநமயோமல: து:காஜ்ஞாநமலா தர்மா: ப்ரக்ருதேஸ் தே ந சாத்மந: ஜலஸ்ய சாக்நி ஸம்ஸ்ருஷ்ட ஸ்தாலீ ஸங்காத ததாபி ஹி சப்தோத்ரேகாதிகாந் தர்மாந் தத் கரோதி யதாமுநே ததாத்மா ப்ரக்ருதெள ஸங்காத அஹம்மாநாதி தூஷித:, பஜதே ப்ராக்ருதாந் தர்மாநந்ய ஸ்தேப்யோபி ஸோவ்யய:” என்று சொல்லப்பட்டது. அவித்யையாவது அஜ்ஞாநம்; அதுதான் ஜ்ஞாநாநுதய, அந்யதாஜ்ஞாந, விபரீத ஜ்ஞாந ரூபேண அநேக விதமாயிருக்கும். கர்மமாவது கரண த்ரய க்ருதமாய், புண்ய பாபாத்மகமான க்ரியா விசேஷம்; அதில் புண்யம் ஐஹிக ஆமுஷ்மிக நாநாவித போக ஸாதநதயா பஹுவிதமாயிருக்கும், பாபமும் அக்ருத்யகரண க்ருதயாகரண பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசார ரூபேண அநந்தமாயிருக்கும். வாஸனையாவது முன்பு செய்து போந்தவற்றிலே மீளவும் மூளுகைக்குறுப்பான ஸம்ஸாரம்; இதுதான் ஹேது பேதத்தாலே பஹுவிதமாயிருக்கும். ருசியாவது ரஸாந்தரத்தாலும் மீட்கவொண்ணாதபடி ஒன்றிலே செல்லுகிற விருப்பம்; இதுவும் விஷய பேதத்தாலே பஹுவிதமாயிருக்கும். “அவித்யா கர்ம வாஸநா ருசிகளுண்டாயிற்றன” என்னாதே, “உண்டாகிறன” என்கையாலே இவற்றினுடைய ப்ரவாஹ ரூபத்வம் சொல்லப்பட்டது.

இயல்பாகவே எந்தவிதமான மாறுதல்களும் அடையாமல், குளிர்ந்துள்ள நீருக்கு, அக்னியின் ஸம்பந்தம் காரணமாக “உஷ்ணம், மிகுந்த சப்தத்துடன் கொதித்தல்” போன்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன; இதனைப் போன்று இயல்பாகவே “ஞானம், ஆனந்தம், தூய்மை” ஆகியவற்றுடன் கூடியுள்ள ஆத்மாவிற்கு, மூன்று குணங்களையும் அண்டி நிற்கின்ற அசித் பொருள்களுடைய ஸம்பந்தம் காரணமாக, “அவித்யை, கர்மம், வாசனை, ருசி” போன்றவை ஏற்படுகின்றன. இவருடைய திருத்தம்பியாராகிய அழகிய மணவாளப்பெருமாள் நாயனார், ஆசார்ய ஹ்ருதயத்தில் (10) – அவித்யா காரணம் அநதி அசித் ஸம்பந்தம் – என்னும் கருத்தை அருளிச்செய்தார் அல்லவோ? இவ்விதம் ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் (6-7-22) - நிர்வாணமய ஏவாயமாத்மா ஜ்ஞாநமயோமல: து:காஜ்ஞாநமலா தர்மா: ப்ரக்ருதேஸ் தே ந சாத்மந: ஜலஸ்ய சாக்நி ஸம்ஸ்ருஷ்ட ஸ்தாலீ ஸங்காத ததாபி ஹி சப்தோத்ரேகாதிகாந் தர்மாந் தத் கரோதி யதாமுநே ததாத்மா ப்ரக்ருதெள ஸங்காத அஹம்மாநாதி தூஷித:, பஜதே ப்ராக்ருதாந் தர்மாநந்ய ஸ்தேப்யோபி ஸோவ்யய: – மோக்ஷ நிலையில் உள்ள ஜீவாத்மா, ஞானம் மற்றும் ஆனந்தமே ஸ்வரூபமாக உள்ளவன், தோஷம் அற்றவன் ஆவான்; துன்பங்கள், அஜ்ஞானம், தோஷங்கள் ஆகிய பலவும் ப்ரக்ருதியான அசித்தின் தர்மங்கள் ஆகும்; அவை ஆத்மாவுடையது அல்ல; நீருடன் அக்னிக்கு ஏற்படும் ஸம்பந்தம் காரணமாக ஓசை, வெப்பம் போன்றவை நீருக்கு எவ்விதம் ஏற்படுகின்றனவோ அது போன்று, ஆத்மாவானது ப்ரக்ருதியின் ஸம்பந்தம் காரணமாக “நான், என்னுடையது” என்பது போன்ற எண்ணங்களால் தாழ்வை அடைந்து, ப்ரக்ருதியின் ஸம்பந்தம் கொண்ட தர்மங்களை அடைகிறான்; அழிவற்ற ஆத்மாவானவன் ப்ரக்ருதியின் தர்மங்களைக் காட்டிலும் வேறுபட்டவன் ஆவான் - என்று உரைக்கப்பட்டது. அவித்யை என்பது அறிவின்மை; அது “ஞானம் இன்மை, பொருளின் தன்மையை வேறாக அறிதல், ஒரு பொருளை மற்றொன்றாக அறிதல்” என்பது போன்று பலவிதமாக உள்ளது. கர்மம் என்பது மனம், வாக்கு மற்றும் சரீரம் ஆகிய மூன்றாலும் இயற்றப்படுவதாகவும், புண்ணியம் மற்றும் பாபங்களை உள்ளடக்கியதாகவும் உள்ள செய்கைகள் ஆகும். புண்ணியம் என்பது இந்த லோகத்திலும், அந்த லோகத்திலும் பலவிதமான இன்பங்களை அடையும்படியாகச் செய்யவல்ல உபாயங்கள் பல கொண்டதாக, பலவிதமாக உள்ளது. பாபங்கள் என்பவை “செய்யத்தகாதவற்றைச் செய்தல், செய்யவேண்டியதைச் செய்யாமல் விடுதல், பகவத் அபசாரம், பாகவத அபசாரம், பொறுக்க இயலாத மற்ற அபசாரம்” என்று எண்ணற்றதாக உள்ளவை ஆகும். வாஸனை என்பது முன்பு செய்தவற்றில் மீண்டும் ஈடுபடுதல் என்பதற்குக் காரணமாக ஸம்ஸாரம் ஆகும்; இது பல்வேறு காரணங்களால் பலவிதமாக உள்ளதாகும். ருசி என்பது, வேறு ஒரு சிறந்த சுவையைக் காண்பித்த போதிலும் மீட்க இயலாதபடி, அதனைக் காட்டிலும் தாழ்ந்தவற்றில் கொள்ளும் ஆழ்ந்த ஈடுபாடு ஆகும். இதுவும் விஷயங்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாகப் பலவிதமாக உள்ளதாகும். “அவித்யை, கர்மம், வாஸனை, ருசி” ஆகியவை, “உண்டாயின” என்று கூறப்படாமல், “உண்டாகின்றன” என்று ஏன் கூறப்பட்டது என்றால், இவற்றின் இடைவிடாத ப்ரவாளம் காரணமாகவே ஆகும்.