Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 45)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

நித்யரென்கிறது ஒருநாளும் ஸம்ஸரியாத சேஷசோஷஸநாதிகளை.

இனி நித்யரென்கிறது ஆரை? என்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார்.

நித்யர் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கு அடுத்து விடை அருளிச்செய்கிறார்.

(நித்யரென்கிறது ஒருநாளும் ஸம்ஸரியாத சேஷ சேஷாஸநாதிகளை) என்று ஒருநாளும் ஸம்ஸரியாத என்கையாலே முக்தரை வ்யாவர்த்திக்கிறது. நிவ்ருத்த ஸம்ஸாரரிறே அவர்கள்; இவர்கள் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரகந்தரிறே. “அஹ்ருத ஸஹஜதாஸ்யாஸ் ஸூரயஸ் ஸ்ரஸ்தபந்தா” என்றாரிறே பட்டர். “நித்யோ நித்யாநாம்” என்றும், “ஜ்ஞாஜ்ஞௌ த்வாவஜாவீசநீசௌ” என்றும் சொல்லுகிறபடியே ஆத்மஸ்வரூபம் நித்யமாயிருக்க, “அஸந்நேவ” என்பது “ஸந்தமேநம்” என்பதாகிறது. பகவத் விஷய ஜ்ஞாநராஹித்ய ஸாஹித்யங்களாலேயிறே. ஆகையால் இவர்களை நித்யரென்கிறதும் பகவத்ஜ்ஞாநத்துக்கு ஒருநாளும் ஸங்கோசமில்லாமையாலே என்று கொள்ளவேணும். இந்த வைபவத்தைப் பற்றவிறே “யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா:” என்றும், “யத்ர ருஷய: ப்ரதமஜா யே புராணா:” என்றும ச்ருதி இவர்களை ச்லாகிக்கிறது பாஷ்யகாரரும் இவர்களுடைய வைபவத்தை “ஸ்வச்சந்தாநுவர்த்தி” இத்யாதியாலே ஸ்ரீகத்யத்திலே பரக்க அருளிச்செய்தார். ஆகையாலே, (ஒருநாளும் ஸம்ஸரியாத) என்றபோதே, இவர்களுடைய வைபவமெல்லாம் சொல்லிற்றாயிற்று அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதனாய் கைங்கர்யபரர்க்கெல்லாம் படிமாவாயிருக்கையாலே, திருவனந்தாழ்வானை சேஷனென்கிறது. “நிவாஸ சய்யாஸந பாதுகாம்சுகோபதாந வர்ஷாதப வாரணாதிபி: சரீரபேதைஸ் தவ சேஷதாம்கதைர் யதோசிதம் சேஷ இதீரிதே ஜநை:” என்றிறே ஆளவந்தாரும் அருளிச்செய்தது. மற்றுள்ள ததீயரைப் போலே அநியமமாயிராதே ஸர்வேச்வரன் அமுது செய்த சேஷமொழிய அமுது செய்யாத நியமத்தைப் பற்ற சேஷாஸநரென்று சேனை முதலியாரை நிரூபிக்கிறது. “த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிநா” என்றாரிறே ஆளவந்தாரும். “வநாத்ரி நாதஸ்ய ஸுஸுந்தரஸ்ய வை ப்ரபுக்த சிஷ்டாச்யத ஸைந்ய ஸத்பதி:” என்று ஆழ்வானும் அருளிச்செய்தார். ஆதிசப்தத்தாலே, “சேஷசேஷாசந கருட ப்ரமுக நாநாவிதாநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித சரண யுகள” எனகிறபடியே, பகவத் கைங்கர்யைக போகராயிருந்துள்ள வைநதேய ப்ரமுகரான நித்யஸித்தரையெல்லாம் சொல்லுகிறது.

“நித்யர்” என்று கூறுவதன் மூலம், “ஸம்ஸாரத்தில் ஒருபோதும் பந்தப்படாமல் உள்ளவர்கள்” ஏன்று உரைப்பதால், இவகளிடமிருந்து முக்தர்கள் வேறுபடுத்தப்பட்டனர். முக்தர்கள், “ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டவர்கள்” ஆவர்; ஆனால் நித்யர்கள் ஒருபோதும் ஸம்ஸாரத்தால் தீண்டப்படாதவர்கள் ஆவார்கள். ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (2-32) – அஹ்ருத ஸஹஜதாஸ்யாஸ் ஸூரயஸ் ஸ்ரஸ்தபந்தா - அபகரிக்கப்படாமல் உள்ள இயல்பான கைங்கர்யம் பெறவர்கள் நித்யர்கள் – என்று ஸ்வாமி பராசரபட்டர் அருளிச் செய்தார். கட. (5-13) – நித்யோ நித்யாநாம் – நித்யர்களில் நித்யமானவனும் – என்றும், ச்வே. (1-9) – ஜ்ஞா ஜ்ஞௌ த்வௌ ஈச அநீச - பிறப்பற்ற இரண்டில் ஒன்று அறிந்ததும் ஒன்று அறியாததுமாகவும், ஒன்று வலிமை உள்ளதும் ஒன்று வலிமை அற்றதுமாகவும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஆத்மஸ்வரூபமானது நித்யமானதாகவே உள்ளது; ஆனாலும் தை. (2-6-1) – அஸந்நேவ - இல்லாதவர்கள் ஆகிறார்கள் – என்றும், தை. (2-6-1) –ஸந்தமேநம் - இருப்பவர்கள் ஆகிறார்கள் - என்றும் ஏன் கூறப்படுகிறது என்றால், “பகவத் விஷயம் குறித்த ஞானம் அற்ற நிலை, பகவத் விஷயம் குறித்த ஞானம் பெற்ற நிலை” என்பதன் அடிப்படையிலேயே ஆகும். ஆகவே இவர்களை “நித்யர்கள்” என்று கூறுவது ஏனென்றால், “பகவத் ஞானத்திற்கு எப்போதும் சுருக்கம் ஏற்படாதவர்கள்” என்ற அடிப்படையில் ஆகும். இவர்களுடைய இந்த மேன்மையைக் கொண்டாடுவதாகவே ச்ருதியானது, யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா: - எந்த ஒரு பரமபதத்தில் பகவத் அனுபவத்தில் முதன்மையாக நித்யர்கள் உள்ளனரோ – என்றும், யத்ர ருஷய: ப்ரதமஜா யே புராணா: - எந்தப் பரமபதத்தில் அனைத்தையும் நேரே காணக் கூடிய நித்யர்கள் முன்பே உள்ளனரோ - என்றும் கொண்டாடுகிறது. பாஷ்யகாரரும் இவர்களுடைய வைபவத்தை கத்யத்தில் - ஸ்வச்சந்தாநுவர்த்தி - பகவானுடைய இச்சையைப் பின்பற்றியபடி உள்ள – என்று அருளிச்செய்தார். ஆகவே ஒருநாளும் சூர்ணையில் “ஒருநாளும் ஸம்ஸரியாத” என்று கூறியபோதே அவர்களுடைய அனைத்து வைபவங்களும் கூறப்பட்டதாகிறது. அனைத்துவிதமன கைங்கர்யங்களிலும் ஈடுபடுபவனாகவும், கைங்கர்யம் செய்யும் அனைவருக்கும் உதாரணமாக உள்ளவனாகவும் இருப்பதால் திருவனந்தாழ்வானை “சேஷன்” என்று கூறுகிறோம். ஸ்தோத்ரரத்னம் (40) – நிவாஸ சய்யா ஆஸந பாதுகாம்சுக உபதாந வர்ஷாதப வாரணாதிபி: சரீரபேதை: தவ சேஷதாம்கதை: யதோசிதம் சேஷ இதி ஈரிதே ஜநை: - ஸர்வேச்வரனாகிய நீ எழுந்தருளியுள்ள இருப்பிடமாகவும், திருக்கண் வளர்வதற்கு ஏற்ற படுக்கையாகவும், வீற்றிருப்பதற்கு ஸிம்ஹாஸனமாகவும், நிற்கும்போது பாதுகைகளாகவும், திருப்பரிவட்டமாகவும், நடந்தால் குடையாகவும் என்பதாக, உனக்கு அடிமையாக உள்ளதையே தனது இயல்பாகக் கொண்டதால் சேஷன் எனப்படுபவன் - என்று ஆளவந்தார் அருளிச்செய்தார். வேறு சில அடியார்கள் போன்று எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி அல்லாமல், ஸர்வேச்வரன் அமுது செய்யாத எதனையும் ஏற்பதில்லை என்னும் விதிமுறையைக் கொண்டுள்ளதால் சேனைமுதலியாரை “சேஷாஸநர்” என்கிறார்கள். ஸ்தோத்ரரத்னம் (42) - த்வதீய புக்த உஜ்ஜித சேஷ போஜிநா - நீ அழுது செய்த மீதத்தை உட்கொள்பவனாக உள்ளவர் - என்று ஆளவந்தார் அருளிச்செய்தார். ஸுந்தரபாஹு ஸ்தவம் (74) – வநாத்ரி நாதஸ்ய ஸுஸுந்தரஸ்ய வை ப்ரபுக்த சிஷ்டாச்யத ஸைந்ய ஸத்பதி: - மிகவும் அழகாக உள்ளவனும், திருமாலிருஞ்சோலையில் உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரன் அமுது செய்து மீதம் உள்ளதை ஏற்கும் சேனைமுதலியார் - என்று கூரத்தாழ்வானும் அருளிச்செய்தார். சூர்ணையில் உள்ள “சேஷ சோஷஸநாதிகளை” என்பதில் காணப்படும் “ஆதி” என்பதன் மூலம், கத்யத்தில் - சேஷசேஷாசந கருட ப்ரமுக நாநாவிதாநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித சரண யுகள – ஆதிசேஷன், சேனைமுதலியார் , கருடன் போன்றவர்கள் தொடக்கமாக உள்ள பலவிதமான கைங்கர்யம் செய்பவர்கள், கைங்கர்யம் செய்யும் தேவலோகப் பெண்கள், இவர்களால் கைங்கர்யம் செய்யப்படும் திருவடிகள் கொண்டவனே - என்பதற்கு ஏற்ப, பகவத் கைங்கர்யம் என்பதிலேயே இன்பம் அடைந்தபடி உள்ள கருடன் முதலான நித்யர்கள் கூறப்படுகிறார்கள்.