Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 44)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
முக்தரென்கிறது ஸம்ஸார ஸம்பந்தமற்றவர்களை.
இனி முக்தரென்கிறது ஆரையென்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (முக்தரென்கிறது ஸம்ஸார ஸம்பந்தமற்றவர்களை) என்று.
அடுத்து முக்தர் என்பது யாரைக் குறிக்கும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அவர்களாகிறார், அநாதிகர்ம ப்ரவாஹ ப்ரயுக்தமான ஸம்ஸார ஸம்பந்தம் நடவாநிற்கச் செய்தே, மோக்ஷ ருசிக்கு ப்ரதிபந்தகமான கர்ம விசேஷம் அநுபவத்தாலேயாதல், ஸாமாந்யேந அநுஷ்டிக்கும் ப்ராயச்சித்த கர்மங்களாலேயாதல், அநபிஸம்ஹித பலமாய் அத்யுத்கடமான ப்ராமாதிக புண்யங்களாலேயாதல் க்ஷயித்து, அதடியாக ஜாயமாநதசையில பகவத் கடாக்ஷத்தாலுண்டான ஸத்வோத்ரேகத்தாலே மோக்ஷ ருசி பிறந்து, ஸத்குரு ஸமாச்ரயண ஸம்ப்ராப்த வேதாந்த வேத்ய பரபரஹ்ம ஜ்ஞாநராய், தத் ப்ராப்தி ரூப மோக்ஷ ஸித்தயர்த்தமாக ஸ்வவர்ண ஸ்வாச்ரமோசிதமான காமங்களை பல ஸங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக அநுஷ்டித்து, “தர்மேண பாபமபநுததி” என்றும், “கஷாயே கர்மபி: பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரவர்ததே” என்றும் சொல்லுகிறபடியே, அந்த ஸத் கர்மாநுஷ்டாநத்தாலே ஜ்ஞாநோத்பத்தி விரோதி ப்ராசீந கர்மம் க்ஷயித்தவாறே அந்த:கரணம் நிர்மலமாய், பகவதேகாவலம்பியான ஸம்யக் ஜ்ஞாநமுதித்து, அநந்தரம், “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி: நராணாம் க்ஷீண பாபாநாம், க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்கிறபடியே, இப்படி பஹுதர ஜந்ம ஸாத்யமான கர்ம ஜ்ஞாநங்களாலே பிறந்த தைலதாராவதவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தாநரூப பக்தி மூலமாக வரும் பகவத ப்ரஸாதத்தாலேயாதல். அன்றிக்கே தன்னுடைய நிர்ஹேதுக ஸௌஹார்த விசேஷத்தாலே யாத்ருச்சிகாதி ஸுக்ருத பரம்பரைகளைக் கல்பித்து அதடியாக விசேஷ கடாக்ஷத்தைப் பணணி, அநந்தரம் அத்வேஷத்தை ஜநிப்பித்து, ஆபிமுக்கியத்தை உண்டாக்கி, ஸாத்விக ஸம்பாஷணத்தை விளைத்து, அவ்வழியாலே ஸதாசார்ய ஸமாச்ரயணததிலே மூட்டி, ததுபதேசமுகேந தத்வஜ்ஞாநத்தைப் பிறப்பித்தல், தன்னுடைய விசேஷ கடாக்ஷம் தன்னாலே தத்வஜ்ஞாநத்தைப் பிறப்பித்தல் செய்து, மஹாவிச்வாஸ பூர்வகமாகத் தன் திருவடிகளே உபாயமென்று நிற்கும்படி பண்ணும் பகவதாகஸ்மிக க்ருபையாலே உபாயாந்தர விஷயத்தில் பிறந்த துஷ்கரத்வாதி புத்தி மூலமாக வரும் ப்ரபதந மூலமான பகவத் ப்ரஸாதத்தாலேயாதல், ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களும் கழிந்து ஆவிர்ப்பூத ஸ்வரூபராய் பகவதநுபவ கைங்கர்யைக போகரானவர்கள். அவிசேஷேண (முக்தரென்கிறது ஸம்ஸார ஸம்பந்தமற்றவர்களை) என்கையாலே, பகவதநுபவத்தில் ருசியின்றிக்கே தத் ஸமாச்ரயணத்தைப் பண்ணி ஸம்ஸார நிவ்ருத்தியை உண்டாக்கிக் கொண்டு தேசவிசேஷத்திலே போய் ஸ்வஸ்வரூபாநுபவம் பண்ணியிருக்கும் கேவலரையும் சொல்லிற்றாயிற்று.
எல்லையற்ற காலமாக இயற்றியபடி உள்ள கர்மவினைகள் என்ற ப்ரவாஹத்தின் விளைவாக ஏற்படும் ஸம்ஸாரபந்தம் என்பது தொடர்ந்தபடி உள்ளது; ஆனாலும், மோக்ஷத்தில் ஏற்படும் விருப்பத்திற்கு தடை ஏற்படுத்துகின்ற கர்மங்களுடைய அனுபவம், சாதாரணமாகச் செய்யப்படும் ப்ராயச்சித்த கர்மங்கள், பயனை எண்ணாமல் மிகவும் உயர்ந்த சிந்தனை ஏதும் இன்றி செய்யப்படும் அதிகமான புண்ணியங்கள் ஆகியவை அனைத்தும் அழியப் பெற்று, அதன் விளைவாக நல்ல ஒரு ஆசார்யனை அடைந்து, அவருடைய உபதேசம் மூலமாக, வேதாந்தத்தால் மட்டுமே அறியப்படுவதான பரப்ரஹ்மத்தைக் குறித்து அறிகின்றனர்; அப்படிப்பட்ட பரப்ரஹ்மத்தை அடைதல் என்பதான மோக்ஷத்தை அடையும்விதமாக தங்களுடைய வர்ணாச்ரமத்திற்கு ஏற்றபடியான கர்மங்களை, எந்தவிதமான பயனையும் கருதாமல் இயற்றியபடி உள்ளனர்; தைத். (2-6) - தர்மேண பாபமபநுததி – தர்மங்களால் பாபத்தை விலக்குகிறான் - என்றும், கஷாயே கர்மபி: பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரவர்ததே – புண்ணியங்களால், ஞானம் ஏற்படுவதற்குத் தடையாக உள்ள வினைகள் அழிந்த பின்னர், ஞானம் பிறக்கிறது - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அத்தகைய சிறந்த கர்மங்கள் காரணமாக, ஞானம் ஏற்படுவதற்கு விரோதியாக உள்ள பூர்வவினைகள் அனைத்தும் அழிகின்றன; இதனால் அந்தகரணம் தூய்மை அடைகிறது; பகவானைக் குறித்து மட்டுமே எண்ணியபடி உள்ள ஞானம் ஏற்படுகிறது; அதன் பின்னர், ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி: நராணாம் க்ஷீண பாபாநாம், க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே - ஆயிரம் பிறவிகளில் செய்யப்படும் தவம், த்யானம், ஸமாதிநிலை ஆகியவை மூலம் பாபங்கள் அனைத்தும் அழிந்து, ஒருவனுக்கு க்ருஷ்ணனிடம் பக்தி ஏற்படுகிறது - என்பதற்கு ஏற்ப, எண்ணற்ற பிறவிகளின் பின்னர் கைகூடுகிண்ற கர்மங்கள் மற்றும் ஞானம் ஆகியவற்றால் ஏற்படுவதாகிய, எண்ணெய் வழிவது போன்று இடைவெளி இன்றி உள்ளதான “ஸர்வேச்வரனைக் குறித்து சிந்தனை” என்ற வடிவில் உள்ள பக்தி மூலமாக பகவானுடைய கடாக்ஷம் பிறக்கிறது. அல்லது, பகவான் எந்தவிதமான காரணமும் இன்றி, நல்ல எண்ணம் மட்டுமே காரணமாகக் கொண்டு, எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் சில நற்பண்புகளை உண்டாக்கி, அதன் காரணமாகச் சிறப்பான கடாக்ஷங்களைச் செய்து, அதன் பின்னர் தன்னிடம் வெறுப்பு இன்மை என்பதை ஏற்படுத்தி, தன்னை மிகவும் விருப்பத்துடன் வணங்குதல் என்னும் நிலையை உண்டாக்கி, பாகவதர்களுடன் உரையாடல்களை உண்டாக்கி, அதன் மூலம் சிறந்த ஒரு ஆசார்யனை அண்டுதல் என்பதை ஏற்படுத்தி, அவருடைய உபதேசம் மூலமாக தத்வஞானத்தை ஏற்படுத்துகிறான்; தனது திருவடிகளே உபாயம் என்று நிற்கும்படிச் செய்கிறான்; இப்படியாக எதனையும் எதிர்பாராமல் செய்வதான பகவத் கருணை மூலமாக, “மற்ற விஷயங்களில் அல்லது மற்ற உபாயங்களில், இவை கைக்கொள்வதற்கு அரியவை ஆகும்”, என்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு, அதன் விளைவாக ஏற்படும் பகவத் கருணையால், சரணாகதி செய்தல் (அல்லது சரணாகதி மூலமாக ஏற்படும் பகவத் கருணை எனலாம்); ஸம்ஸாரத்தில் ஏற்படும் அனைத்து துக்கங்களும் விலகி, இதன் மூலமாக ஆத்மஸ்வரூபம் கைக்கூடப் பெற்று, பகவத் அனுபவ கைங்கர்யம் என்பதை அனுபவித்தபடி உள்ளவர்கள் ஆவர். எந்தவிதமான அடைமொழியும் இல்லாமல், “முக்தரென்கிறது ஸம்ஸார ஸம்பந்தமற்றவர்களை” என்று கூறுவதால், பகவத் அனுபவத்தில் எந்தவிதமான ருசியும் இன்றி, ஆனாலும் அவனை வணங்கி நின்றி ஸம்ஸாரத்திலிருந்தும் வெளியேறி, பரமபதம் சென்று தங்களுடைய ஆத்மாவை மட்டுமே அனுபவித்தபடி உள்ள கைவல்ய நிஷ்டர்களையும் இங்கு கூறினார்.