Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 41)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
இதுதான் க்ருஹ க்ஷேத்ர புத்ர களத்ராதிகளைப் போலே, ப்ருதக்ஸித்த்யாதிகளுக்கு யோக்யமாம்படியிருக்கையன்றிக்கே, சரீரம்போலே அவற்றுக்கு அயோக்யமாயிருக்கை.
ஒருவனுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளும் சேஷமாய், ஸ்வசரீரமும் சேஷமாயிருக்கச் செய்தே, க்ருஹ க்ஷேத்ராதிகள் ப்ருதக் ஸித்த்யாதிகளுக்கு அர்ஹமாய், சரீரம் அவற்றுக்கு அநர்ஹமாயிருக்கக் காண்கையாலே, இவ்வாத்ம வஸ்து ஈச்வரனுக்கு சேஷமாமிடத்திலிருக்குமபடி எங்ஙனே? என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார் (இதுதான்) என்று தொடங்கி.
ஒருவனுக்கு வீடு, நிலம் போன்றவை அடிமையாக உள்ளது போன்று, அவனுடைய சரீரமும் அவனுக்கு அடிமையாக உள்ளது; ஆனாலும், வீடு நிலம் போன்றவை அவனை விட்டுத் தனியே இருப்பற்குத் தகுதியுடன் உள்ளதாகவும், சரீரமானது அவனை விட்டுப் பிரிந்து இருப்பதற்குத் தகுதி அற்றதாகவும் உள்ளதை நாம் காண்கிறோம். இப்படி உள்ளபோது, இந்த ஜீவாத்மா ஈச்வரனுக்கு அடிமையாக இருத்தல் என்பது எவ்வகைப்பட்டது என்று சந்தேகம் எழலாம். இதற்கு விடை அருளிச் செய்கிறோர்.
இதுதானென்றது இப்படி ஈச்வரசேஷமாகச் சொல்லப்பட்ட ஆத்மவஸ்துதான் என்றபடி. (க்ருஹ க்ஷேத்ர புத்ர களத்ராதிகளைப்போலே) என்கிற விடத்தில் ஆதிசப்தத்தாலே தந தாந்ய ஆராம தாஸ தாஸீ வர்கங்களைச் சொல்லுகிறது. (ப்ருதக்ஸித்த்யாதிகளுக்கு யோக்யமாம்படி இருக்கையன்றிக்கே) என்கிறவிடத்தில், ப்ருதக்ஸித்தியாவது ஸஹோபலம்ப நியமமின்றிக்கே, சேஷியானவனை ஒழியவும் தான் ஸித்திக்கை. ஆதிசப்தத்தாலே அநேக ஸாதாரணத்வத்தைச் சொல்லுகிறது. க்ருஹ க்ஷேத்ர தாஸதாஸீ ப்ரப்ருதிகள், பித்ரு புத்ர ஜ்யேஷ்ட கநிஷ்டாதிகளுக்கு ஸாதாரண சேஷமாயிருக்கும்; புத்ரனும், மாதா பித்ரு பித்ருவ்யாதிகளுக்கு ஸாதாரண சேஷமாயிருக்கும்; களத்ரமும், “ஸோம: ப்ரதமோ விவிதே கநதர்வோ விவித உத்தர: த்ருதீயோக்நிஷ்டேபதிஸ்துரீயஸ்தே மநுஷ்யஜா:” என்று பாணிக்ரஹணாநந்தரம், ஸோமாதிகளுக்கு சேஷமாகச் சொல்லுகையாலே, அநேக ஸாதாரணமாயிருக்கும். இப்படியன்றிக்கே (சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாயிருக்கை)யாவது அப்ருதக்ஸித்தமாய், அநந்ய ஸாதாரணமான சரீரம்போலே, ப்ருதக்ஸித்த்யாதிகளானவற்றுக்குத் தான் அநர்ஹமாயிருக்கை. (ப்ருதக்ஸ்தித்யாதிகளுக்கு) என்று பாடமாகில், ஆதிசப்தத்தாலே ப்ருதகுபலப்தியை சொல்லுகிறது. அப்போதைக்கு இதுதான் க்ருஹ க்ஷேத்ர புத்ர மித்ர களத்ராதிகளைப் போலே பிரிந்து நிற்கைக்கும் பிரிந்து தோற்றுகைக்கும் அர்ஹமாம்படியிருக்கை யன்றிககே, சரீரம்போலே ததுபயாநர்ஹமாயிருக்குமென்று பொருளாகக் கடவது. “அயமேவாத்ம சரீரபாவ ப்ருதக்ஸித்த்யநர்ஹாதாராதேய பாவ, நியந்த்ரு நியாம்ய பாவ, சேஷ சேஷி பாவச்ச” என்றும், “யஸ்ய சேதநஸ்ய யத்த்ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தே நியந்தும் தாரயிதும் ச சக்யம் தச்சேஷதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய சரீரம்” என்றும் வேதார்த்த ஸங்கரஹத்திலும் ஸ்ரீபாஷயத்திலும் ஆத்ம சரீர பாவ லக்ஷணமாக பாஷயகாரர் அருளிச்செய்த நியந்த்ரு நியாமய பாவம், ஆதார ஆதேய பாவம், சேஷசேஷி பாவமாகிற மூன்றும் இவ்விடததிலே சொல்லப்படுகையாலே, “யஸ்யாத்மா சரீரம் யஸ்யாக்ஷரம் சரீரம்” என்று இத்யாதி ச்ருதி ஸித்தமான ஆத்மாவினுடைய பரமாத்ம சரீரத்வம் அர்த்தாத் உக்தமாயிற்று. ஆக, கீழே ஆத்ம ஸ்வரூபத்தினுடைய சோதநம் பண்ணப்பட்டது.
“இதுதான்” என்பதன் மூலம், ஈச்வரனுக்கு அடிமையாக உள்ளது என்று கூறப்படுகின்ற ஆத்மாவானது கூறப்பட்டது. “க்ருஹ க்ஷேத்ர புத்ர களத்ராதிகளைப்போலே” என்பதில் உள்ள” ஆதி” என்பதன் மூலம், “தனம், தானியம், தோட்டம், வேலையாட்கள், பணிப்பெண்கள்” ஆகிய பலவும் கூறப்பட்டன. “ப்ருதக்ஸித்த்யாதிகளுக்கு யோக்யமாம்படி இருக்கையன்றிக்கே” என்பதில் உள்ள “ப்ருதக் ஸித்தி” என்பது, சேர்ந்து இருத்தல் வேண்டும் என்ற விதிமுறை ஏதும் இன்றி, தனக்கு எஜமானனாக உள்ளவனை விட்டுத் தனித்து நிற்பது ஆகும்; இங்குள்ள “ஆதி” என்பதன் மூலம், பல பொதுவான விஷயங்கள் கூறப்படுகின்றன. வீடு, நிலம், வேலையாட்கள், பணிப்பெண்கள் போன்ற பலவும், “தந்தை, புத்திரன், பெரியவன், சிறியவன்” போன்றவர்களுக்குப் பொதுவான அடிமைகளாக இருப்பதாகும். ஒரு புத்திரனானவன் – தனது தாய், தந்தை, உடன் பிறந்தவர்களுக்குப் பொதுவான அடிமையாக இருப்பான். மனைவியானவள், “ஸோம: ப்ரதமோ விவிதே கநதர்வோ விவித உத்தர: த்ருதீயோக்நிஷ்டேபதிஸ்துரீயஸ்தே மநுஷ்யஜா: - சந்த்ரன் முதல் பர்த்தா, கந்தர்வன் அடுத்த பர்த்தா, அக்னி மூன்றாவது பர்த்தா, மனிதன் நான்காவது பர்த்தாவாக அறிவாய்” என்று கூறுவதற்கு ஏற்ப, விவாகத்திற்கு பின் கணவனின் கரத்தைப் பிடிகும் ஒரு மனைவி, சந்த்ரன் போன்ற பலருக்கும் அடிமை என்று கூறப்படுவதால், இவ்விதம் அவர்கள் அனைவருக்கும் பொதுவானவளே ஆகிறாள். இவ்விதம் அல்லாமல், “சரீரம் போன்று அவற்றுக்குத் தகுதியற்றதாக இருத்தல்” என்பது, தனித்து நிற்காமல் வேறு ஒன்றுக்கு உரிமையாக இல்லாத சரீரம் போன்று, தனித்து வெளிப்படுதல் போன்றவற்றுக்குத் தான் தகுதி அற்றதாக இருக்கும் என்று கருத்து. சூர்ணையில் உள்ள “ப்ருதக் ஸித்த்யாதிகளுக்கு” என்பதை “ப்ருதக் ஸ்திதிகளுக்கு” என்றும் சிலர் படிப்பர்; இவ்விதம் கொள்ளும்போது, இங்குள்ள “ஆதி” என்பதன் மூலம் பிரிந்து வெளிப்படுத்தல் கூறப்படுகிறது. அப்போது இவை வீடு, நிலம், புத்திரன், நண்பர்கள், மனைவி என்பவர்கள் போன்று பிரிந்து நிற்பதற்கும், பிரிந்து தோன்றுவதற்கும் தகுதி இல்லாதபடி இருத்தல் என்பது அல்லாமல், சரீரம் போன்று அவை இரண்டிற்கும் தகுதி அற்றதாக உள்ளன என்று கருத்தாகிறது. வேதார்த்த ஸங்க்ரஹத்தில் - அயமேவாத்ம சரீரபாவ ப்ருதக்ஸித்த்யநர்ஹாதாராதேய பாவ, நியந்த்ரு நியாம்ய பாவ, சேஷ சேஷி பாவச்ச – ஆத்மா மற்றும் சரீரம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள ஸம்பந்தம் இதுவே ஆகும்: தனித்தனியே இருக்க இயலாத இவை இரண்டிற்கும் இடையே ஆதாரம் – ஆதேயம் (தாங்குவது – தாங்கப்படுவது), நியந்த்ரு – நியாம்யம் (ஆள்பவன் – ஆளப்படுவது) மற்றும் சேஷி – சேஷன் (எஜமானன் – அடிமை) என்னும் ஸம்பந்தங்கள் உள்ளன - என்றும், வேதார்த்தஸங்க்ஹரத்தில் - யஸ்ய சேதநஸ்ய யத்த்ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தே நியந்தும் தாரயிதும் ச சக்யம் தச்சேஷதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய சரீரம் – எந்த ஒன்று தாங்கப்படுவதாகவும் (இது ஆதேயம் எனப்படும், இதுவே சரீரம் ஆகும்), நியமிக்கப்படுவதாகவும், சேஷனாகவும் (மற்றவற்றின் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொடுக்கும் வஸ்து) உள்ளதோ, அது தன்னைத் தாங்கும் பொருளாகிய ஆத்மாவைக் விட்டு அகன்று தனியாக நிற்க இயலாத ப்ரகாரமாக உள்ளது; இதுவே சரீரம் என்று கூறப்படுகிறது – என்றும், “ஆத்மா- சரீரம்” குறித்த இலக்கணமாக பாஷ்யகாரர் “ஏவுதல் - ஏவப்படுதல்” என்றும், “தாங்கும் வஸ்து - தாங்கப்படும் வஸ்து” என்றும், “எஜமானன் - அடிமை” என்றும் அருளிச்செய்த கருத்துக்கள் உள்ளன. ஆகவே “யஸ்யாத்மா சரீரம் யஸ்யாக்ஷரம் சரீரம் – யாருக்கு ஆத்மா சரீரமோ, யாருக்கு அக்ஷரம் சரீரமோ” என்பது போன்ற ச்ருதிகளில் கூறப்படுவது போன்று, ஆத்மாவானது பரமாத்மாவின் சரீரமாக உள்ள தன்மை வெளிப்படுகிறது. எனவே இந்த ஆத்மாவின் ஸ்வரூபம் குறித்து இதுவரை ஆராயப்பட்டது.