Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 40)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
சேஷமாகையாவது சந்தந குஸும தாம்பூலாதிகளைப் போலே, அவனுக்கு இஷ்ட விநியோகார்ஹமாயிருக்கை.
(சேஷமாகையாவது சந்தந குஸும தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்ட விநியோகார்ஹமாயிருக்கை) அதாவது, சந்தந குஸுமாதி பதார்த்தங்கள் தனக்கென்ன இருப்பதோராகாரமின்றிக்கே பூசுமவனுக்கும் சூடுமவனுக்கும் உறுப்பாய், விநியோகம் கொள்ளுமவனுக்குத்தானும் விநியோகம் கொண்டு, தானுகந்த விஷயங்களுக்கும் கொடுக்கலாம்படி இஷ்ட விநியோகார்ஹமாயிருக்குமாப்போலே சேதந வஸ்துவாயிருக்க ஸ்வப்ரயோஜந கந்தமின்றிக்கே தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாவ வைலக்ஷண்யமெல்லாவற்றாலும் சேஷிக்கு அதிசயகரமாய், விநியோக தசையில் அவனுக்குத் தானும் விநியோகம் கொண்டு “அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்” என்கிறபடியே தானுகந்தவர்களுக்கும் உறுப்பாக்கலாம்படி வேண்டின விநியோகத்துக்கு யோக்யமாயிருக்கை என்றபடி. சித் த்ரவயத்துக்கு அசித் த்ரவயங்களை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிற்று பாரதந்த்ரியாதிசயம் சொல்லுகைக்காகவிறே ஆத்மஸ்வரூப யாதாத்ம்யம் இதுவாகையாலேயிறே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற தசையிலே “தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே” என்று ஆழ்வார் அருளிச்செய்தது. – “பரகதாதிசயாதாநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம், ஸ சேஷ: பரச்சேஷீ” என்று சேஷசேஷித்வ லக்ஷணம் பாஷ்யகாரராலே அருளிச்செயயப்பட்டது. இந்த லக்ஷண வாக்யார்த்தத்தை அநுஸரித்துக் கொண்டு, “இச்சயா யது பாதேயம் யஸ்யாதிசய ஸித்தயே உபயாநுபயைகைகஜுஷாதௌ சேஷசேஷிணௌ” என்று சேஷசேஷித்வ லக்ஷணத்தை அபியுக்தரானவர்களும் சொல்லி வைத்தார்கள். – “யதேஷ்ட விநியோகார்ஹம் சேஷ சப்தேந கத்த்யதே, ஈச்வரேண ஜகத் ஸர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே” என்று சொல்லுகையாலே, சேஷத்வமாவது இஷ்ட விநியோகார்ஹத்வம் என்னுமிடம் சாஸ்த்ரஸித்தம். இப்படி ஈச்வர விஷயத்தில் ஆத்மாவுக்குண்டான சேஷத்வம்தான், “யஸ்யாஸ்யாமி ந தமந்தரேமி”, “பரவாநஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே”, “தாஸபூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:, நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக்ஷே ததைவ ச”, “ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி, ஆத்மதாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர” என்று ச்ருதி ஸ்ம்ருத்யாதிகளிலே சொல்லப்படா நின்றதிறே.
சந்தனம், மலர்கள் போன்ற பொருள்கள் பலவும் தங்களுக்கு என்று இருக்கின்ற நிலை ஏதும் இல்லாமல், தங்களைப் பூசிக் கொள்பவர்கள் மற்றும் சூட்டிக் கொள்பவர்களுக்கு அவை உபயோகமாக உள்ளன; அந்த மனிதர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு அவற்றை அளிப்பதற்கு ஏற்றவையாகவும் அவை உள்ளன. இதனைப் போன்று சேதந வஸ்துக்களாக உள்ளவை “தனது பயனுக்காக” என்ற சுயநல தோஷம் இல்லாமல், தங்களுடைய “ஸ்வரூபம், ஸ்வபாவம், மேன்மை” போன்ற பலவற்றாலும் தங்களுடைய எஜமானனாகிய ஸர்வேச்வரனுக்கு அதிசயத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவும், அவனுக்குப் பயன்படும் நேரங்களில் பயன்படும்விதமாக உள்ளவையாகவும், அமலனாதிபிரான் (1) - அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் - என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனாகிய அவன் யாரை விரும்புகிறனோ அவர்களுக்கும் அடிமையாக்கலாம்படி இருப்பவையாகவும் உள்ள தகுதியுடன் இருத்தல் வேண்டும். இங்கு அசேதந வஸ்துக்களை உதாரணமாகக் காண்பித்து சேதந வஸ்துக்கள் ஏன் உணர்த்தப்பட்டன என்றால், மற்றவர்கள் வசப்பட்டிருத்தல் என்பதைக் கூறவே ஆகும். ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபம் இதுவே ஆகும் என்பதால் அல்லவோ, அடையப்படும் இலக்கு குறித்து உறுதிபட உரைக்கும்போது, திருவாய்மொழி (2-9-4) – தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே – என்று ஆழ்வார் அருளிச்செய்தார். “பரகதாதிசயாதாநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம், ஸ சேஷ: பரச்சேஷீ – பிறருக்கு சந்தோஷத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற எண்ணம் எவைகளுக்குத் தன்மையோ, அவைகள் அனைத்தும் சேஷன் (அடிமை); மகிழ்வை அடைபவன் சேஷி (அடிமைச் செயலை ஏற்பவன்)” என்று இத்தகைய “அடிமை - எஜமானன்” இலக்கணம் குறித்து பாஷ்யகாரரால் அருளிச் செய்யப்பட்டது. இத்தகைய இலக்கணம் கூறும் வாக்கியத்தின் கருத்தை அடியோற்றியே, இச்சயா யது பாதேயம் யஸ்யாதிசய ஸித்தயே உபயாநுபயைகைகஜுஷாதௌ சேஷசேஷிணௌ - எந்த ஒரு தலைவனுக்காக, எந்த ஒரு பொருள், இருவரை அடைதல் அல்லது ஒருவரை மட்டும் அடைதல் என உள்ளதோ (அதாவது தலைவனுடைய விருப்பதிற்கு ஏற்ப), அவர்கள் அடிமை மற்றும் எஜமானன் ஆவார்கள் - என்று “எஜமானன் – அடிமை” இலக்கணத்தைச் சான்றோர்களும் கூறினார்கள். “யதேஷ்ட விநியோகார்ஹம் சேஷ சப்தேந கத்த்யதே, ஈச்வரேண ஜகத் ஸர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே - ஒருவர் விருப்பத்திற்கு ஏற்ப பயன் கொள்ளத் தகுதியாக உள்ள நிலையே அடிமை என்று கூறப்படுகிறது. ஸர்வேச்வரனால் அனைத்து லோகங்களும் தனது விருப்பப்படி உபயோகப்படுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, அடிமைத்தன்மை என்பது “விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் செய்து கொள்ளத் தகுதியானது” என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்விதம் பகவத் விஷயதில் ஆத்மாவிற்கு உள்ள அடிமைத்தனமானது, யஜுர்வேதம் - யஸ்யாஸ்யாமி ந தமந்தரேமி – யாருக்கு நான் அடிமையாக உள்ளேனோ, அவனை நான் மீறமாட்டேன் – என்றும், ஆரண்யகாண்டம் (15-6) - பரவாநஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே - காகுஸ்த்த வம்சத்தில் வந்தவனே! பல வருடங்கள் நீ உள்ளவரை நான் உனக்கு வசப்பட்டு நிற்பேன் - என்றும், தாஸபூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:, நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக்ஷே ததைவ ச - அனைத்து ஆத்மாக்களுக்கும் ஸர்வேச்வரனுக்கு இயல்பாகவே அடிமையானவர்கள்; இந்த லோகத்திலும் மோக்ஷ நிலையிலும் அவர்களுக்குச் சுதந்திரம் என்னும் இலக்கணம் இல்லை - என்றும், ஸ்ரீவிஷ்ணுதத்வம் - ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி, ஆத்மதாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர - உனக்குக் கரையேறுவதற்கான விருப்பம் இருந்தால் அல்லது அழியாமல் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இயல்பாகவே உள்ள ஆத்மாவின் தன்மையையும், ஸ்ரீஹரியான ஈச்வரனுடைய எஜமானனாக உள்ள தன்மையையும் எப்போதும் சிந்தித்தபடி இருப்பாயாக - என்று ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டது அல்லவா?