Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 39)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
தார்யமாகையாவது அவனுடைய ஸ்வரூப ஸங்கல்பங்களை ஒழிந்தபோது தன் ஸத்தை இல்லையாம்படியிருக்கை.
– அதாவது, “ஏஷ ஸேதுர் விதரண:”, “ஏதத் ஸர்வம் ப்ரஜ்ஞாநே ப்ரதிஷ்ட்டிதம்”, “ஏவமேவ சாஸ்மிந்நாத்மநி ஸர்வாணி பூதாநி ஸர்வ ஏவாத்மாநஸ் ஸமர்பிதா”, “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசாஸநே கார்கி ஸூர்யா சந்தரமஸௌ வித்ருதௌதிஷ்டத:” என்று இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே, ஈச்வரன் ஸகல சேதநாசேதநங்களையும் பறறி நியமேந தாரகனாகையாலே, இவ்வாத்ம வஸ்து தார்யமாகையாவது தனக்கு நியமேந தாரகமாய்க் கொண்டு தன் ஸத்தா ஹேதுவாயிருக்கிற அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் இந்த ஸ்வரூபாச்ரிதத்வத்துக்கும் ஸத்தாநுவ்ருத்தி ரூபையான ஸ்திதிக்கும் ஹேதுவாயிருந்துள்ள அவனுடைய நித்யேச்சாகார்ய ஸங்கல்பத்தையும் ஒழிந்தபோது தன் ஸத்தாஹாநி பிறக்கும்படியிருக்கை என்றபடி. இப்படி தார்ய வஸ்துக்களை ஸ்வரூப ஸங்கல்பங்களிரண்டாலும் தரிக்குமென்னுமிடம் அபியுக்தராலே விஸ்தரேண ப்ரதிபாதிக்கப்பட்டது. எங்ஙனே என்னில்; ஈச்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும் நிரூபிதஸ்வ ரூப விசேஷணங்களான குணங்களுக்கும் போலே ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவ்யவஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாயிருக்கும் அவ்வோ த்ரவயங்களை ஆச்ரயித் திருக்கும் குணாதிகளுக்கு அவ்வோ த்ரவ்யத்வாரா ஆதாரமாயிருக்கும் ஜீவர்களாலே தரிக்கப்படுகிற சரீரங்களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாயிருக்குமென்று சிலர் சொல்லுவர்கள். ஜீவனை த்வாரமாகக் கொண்டு ஸ்வரூபத்தாலும் ஆதாரமாமென்று சில ஆசார்யர்கள் சொல்லுவர்கள். இப்படி ஸர்வமும் ஆச்ரயத்தைப் பற்ற அப்ருதக் ஸித்த விசேஷணமாகையாலே இவற்றின் ஸத்தாதிகள் ஆச்ரய ஸத்தாதீநங்கள். ஸர்வ வஸ்துக்களினுடையவும் ஸத்தை ஸங்கல்பாதீநையாகையாவது அநிதயங்கள் அநிதயேச்சையாலே உத்பந்நங்களாயும் நித்யங்கள் நித்யேச்சாஸித்தங்களாயுமிருக்கை. இவ்வர்த்தத்தை “இச்சாத் ஏவ தவ விச்வபதார்த்த ஸத்தா” என்கிற ச்லோகத்தாலே அபியுகதர் விவேகித்தார். இத்தாலே ஸர்வத்தினுடையவும் ஸத்தாநுவ்ருத்தி ரூபையான ஸ்திதியும் ஈச்வரேச்சாதீநையானபடியாலே ஸர்வமும் ஈச்வர ஸங்கல்பாச்ரித மென்று சொல்லுகிறது. குரு த்ரவ்யங்கள் ஸங்கல்பத்தாலே த்ருதங்களென்று சாஸ்த்ரங்கள் சொல்லுமது “த்யௌஸ்ஸசந்தரார்க்க நக்ஷத்ராகம் திசோபூர் மஹோததி: வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந:” என்கிறபடியே ஓரோ தேச விசேஷங்களிலே விழாதபடி நிறுத்துகையைப் பற்ற இப்படி இச்சாதீந ஸத்தாஸ்திதி ப்ரவ்ருத்திகளான வஸ்துக்களுக்கு பரமாத்ம ஸ்வரூபமென் செய்கிறது? என்னில்; பரமாத்மாவினுடைய இச்சை இவ்வஸ்துக்களை பரமாத்மாவின் ஸ்வருபாச்ரிதங்களாக வகுத்து வைக்கும். இப்படி, ஸர்வ வஸ்துவும் ஈச்வர ஸ்வரூபாதீநமுமாய் ஈச்வரேச்சாதீநமுமாயிருக்கும். லோகத்திலும் சரீரம் சரீரியினுடைய ஸ்வரூபாச்ரயமுமாய் ஸங்கல்பாச்ரயமுமாயிருக்கக் காணா நின்றோம்; இவனிருந்தகாலமிருந்து, இவன் விட்டபோதொழிகையாலே ஸ்வரூபாச்ரிதம், இவ்வாத்ம ஸங்கல்பமில்லாத ஸுஷுப்த்யாத்யவஸ்தைகளிலே தெளிவது. ஜாக்ராதி தசைகளில் ஸங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும்போது ஸங்கல்பாச்ரிதம் என்னக் கடவது என்று இப்படி ரஹஸ்யத்ரயஸாரத்திலே ப்ரதிபாதிக்கையாலே.
தார்யம் ஆவது என்றால், ஈச்வரனுடைய ஸ்வரூபம் மற்றும் ஸங்கல்பம் ஆகியவற்றை விலக்கினால் ஆத்மாவின் இருப்பு என்பது இல்லை என்பதாகும். அதாவது ப்ரு. (4-4-22) - ஏஷ ஸேது: விதரண: - ஸம்ஸாரத்தைக் கடக்க உதவும் பாலம் இவனே – என்றும், ஏதத் ஸர்வம் ப்ரஜ்ஞாநே ப்ரதிஷ்ட்டிதம் – இந்த அனைத்தும் உயர்ந்த அந்த ஆத்மாவிடமே நிலைபெற்று நிற்கின்றன - என்றும், ஏவமேவ சாஸ்மிந்நாத்மநி ஸர்வாணி பூதாநி ஸர்வ ஏவாத்மாநஸ் ஸமர்பிதா – இந்த அனைத்தும் உயர்ந்த அந்த ஆத்மாவிடமே நன்கு காக்கப்பட்டு நிற்கின்றன - என்றும், ப்ரு. (3-8-9) - ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசாஸநே கார்க்கி ஸூர்யா சந்த்ரமஸௌ வித்ருதௌ திஷ்டத: - கார்க்கி! இந்த அக்ஷரத்தின் கட்டளையால் சூரியனும் சந்த்ரனும் நிலைக்கிறார்கள் – என்றும் உள்ளது போன்ற வாக்கியங்களில் கூறப்பட்டபடி, ஈச்வரன் அனைத்து சேதந அசேதனங்களையும் தனது நியமனம் என்ற செயல் மூலம் தாங்குகிறான் என்றாகிறது; ஆகவே இந்த ஆத்மாவிற்குத் தார்யம் ஆவது என்பது: தன்னை நியமனம் செய்வது மூலம் தன்னைத் தாங்கியபடி உள்ளதன் விளைவாக தனது இருப்பு என்பதற்கு ஈச்வரனே காரணமாக உள்ள திவ்யாத்ம ஸ்வரூபத்தையும், அந்த ஸ்வரூபத்தைச் சார்ந்துள்ள தன்மையையும், தனது இருப்பு என்பது தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணமாக உள்ளதான “எப்போதும் ஆத்மாக்களைக் குறித்த விருப்பத்துடன் இருத்தல்” என்ற ஸங்கல்பத்தையும் நீக்கும்போது தனது இருப்பிற்குத் தாழ்வு ஏற்படுதல் என்பதாகும். இவ்விதம் ஈச்வரன், தன்னால் தாங்கப்படும் அனைத்து வஸ்துக்களையும், தனது ஸ்வரூபம் மற்றும் ஸங்கல்பம் ஆகியவற்றால் தாக்குகிறான் என்பதைச் சான்றோர்கள் மிகவும் விரிவாக அருளிச்செய்தனர். எவ்விதம்? ஈச்வரன் தனது ஸ்வரூபத்தை மற்றவர்களுக்கு உணர்த்தவல்ல தர்மங்கள் மற்றும் அவற்றால் நிரூபிக்கபட்ட ஸ்வரூபத்துடன் கூடியுள்ள குணங்கள் ஆகியவற்றுக்குப் போன்றே, தன்னைத் தவிர்ந்துள்ள மற்ற அனைத்து வஸ்துக்களுக்கும் வேறு எதன் மூலமும் அல்லாமல் தனது ஸ்வரூபம் கொண்டே தாங்கும்படி செய்கிறான். அந்தந்த வஸ்துக்களைச் சார்ந்துள்ள குணங்கள் போன்றவற்றுக்கு, அந்தந்த வஸ்துக்களையே ஆதாரமாக்குகிறான். ஜீவாத்மாவால் தாங்கப்படும் சரீரங்களுக்கு ஜீவாத்மாக்களையே ஆதாரமாக்குகிறான். அல்லது ஜீவாத்மாக்கள் மூலமாக ஈச்வரன் தனது ஸ்வரூபம் கொண்டு தாங்குவதாகவும் சிலர் கூறுவர். இவ்விதம் அனைத்து வஸ்துக்களும் ஈச்வரனுடைய ஆதாரத்தைப் பெறுவதற்காக, அவனை விட்டுப் பிரியாதபடி ஒரு சேர்த்தி கொண்டவையாக உள்ளன; எனவே இவற்றின் இருப்பு போன்றவை, ஈச்வரனுடைய இருப்பிற்கு அடங்கியவையே ஆகும்; அனைத்து வஸ்துக்களுடைய இருப்பு என்பது ஈச்வரனுடைய ஸங்கல்பத்திற்கு வசப்பட்டே உள்ளது; இது என்றபடி என்றால், “நிலை மாறியபடி உள்ள வஸ்துக்கள் அனைத்தும், மாறியபடி உள்ள இச்சை காரணமாக உண்டாகின்றன” என்பதாலும், “நித்யமான வஸ்துக்கள் அனைத்தும் நித்யமான இச்சையால் ஏற்படுகின்றன” என்பதாலும் ஆகும். இந்தக் கருத்தானது ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் – இச்சாத் ஏவ தவ விச்வபதார்த்த ஸத்தா - உலகில் உள்ள அனைத்து வஸ்துக்களும் அவனுடைய இச்சையால் ஏற்பட்டன – என்று கூறப்பட்டது. இதன் மூலம் அனைத்து வஸ்துக்களுடைய இருப்பின் தொடர்ச்சி வடிவத்தில் உள்ளதான நிலைபெறுதல் என்பதும் ஈச்வரனுடைய இச்சைக்கு வசப்பட்டே உள்ளதால், அனைத்தும் ஈச்வரனுடைய ஸங்கல்பத்திற்கு அடங்கியே உள்ளன என்று கூறப்பட்டது. மிகவும் வலுவான வஸ்துக்கள் அனைத்தும் ஈச்வரனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்படுகின்றன என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன; ஏனென்றால், த்யௌஸ்ஸ சந்தரார்க்க நக்ஷத்ராகம் திசோபூர் மஹோததி: வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந: - சந்த்ரன், சூரியன், நக்ஷத்ரங்கள் ஆகியவற்றுடன் கூடிய ஆகாயம்; திசைகள், பூமி, ஸமுத்ரங்கள் போன்ற பலவும் வாஸுதேவனுடைய வீர்யத்தால் நிலையாக உள்ளன என்று மஹாத்மாக்கள் கூறுகிறார்கள் – என்பதற்கு ஏற்ப, அவற்றை அந்தந்த குறிப்பிட்ட இடங்களில் விழாமல் நிறுத்துவதால் ஆகும். இவ்விதமாக ஈச்வரனுடைய விருப்பத்திற்கு ஏற்ப தங்களுடைய இருப்பு மற்றும் செயல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள வஸ்துக்களுக்குப் பரமாத்மாவின் ஸ்வரூபம் என்ன செய்கிறது? விடை அளிப்போம். பரமாத்மாவின் இச்சையானது அந்த வஸ்துக்களை பரமாத்மாவின் ஸ்வரூபத்தை அண்டி நிற்பதற்கு வழி செய்கிறது. இப்படியாக அனைத்து வஸ்துக்களும் ஈச்வரனுடைய ஸ்வரூபத்திற்கு அடங்கியும், ஈச்வரனுடைய இச்சைக்கு அடங்கியும் உள்ளன. இந்த லோகத்தில் கூட சரீரமானது ஆத்மாவின் ஸ்வரூபம் மற்றும் விருப்பத்திற்கு அடங்கி நிற்பதை நாம் காண்கிறோம்; ஒருவன் இந்த உலகில் வாழும் காலம் முடிய இருந்து, உயிரை விடும்போது ஒழிவதால் ஆத்மஸ்வருபத்திற்கு அடக்கமே ஆகிறான். இந்தக் கருத்தானது ஆத்மாவிற்கு சுயநினைவு இல்லாத உறக்கம் போன்ற நிலைகளில் உள்ளதைக் காணலாம். விழிப்பு போன்ற நிலைகளில், ஸங்கல்பத்தால் விழாதபடி தாங்கும்போது, ஸங்கல்பத்திற்கு அடங்கியவன் என்று கூறலாம். இப்படியாகவே ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் கூறப்பட்டது.