Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 38)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

நியாம்யமாகையாவது ஈச்வர புத்த்யதீநமாக எல்லா வ்யாபாரங்களும் உண்டாம்படியிருக்கை.

– அதாவது, “ஆத்மநி திஷ்ட்டந்நாத்மநோந்தரோயமாத்மா நவேத யஸ்யாத்மா சரீரம்ய ஆத்மாநமந்தரோ யமயதி ஸத ஆத்மாந்தர்யாம்யம்ருத” என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே, அந்தராத்மதயா நின்று நியமிக்கை ஈச்வரனுக்கு ஸார்வகாலீநமாகையாலே, இவ்வாத்ம வஸ்து அவனுக்கு நியாம்யமாகையாவது சரீரத்தினுடைய ஸகலப்ரவருத்திகளும் சரீரியினுடைய புத்த்யதீநமாக உணடாமாப் போலே சரீரபூதமான இவ்வாத்ம வஸ்துவினுடைய ஸகல வ்யாபாரங்களும் சரீரியான பரமாத்மாவினுடைய புத்த்யதீநமாகவே உணடாம்படி இருக்கையென்றபடி. இப்படி தச்சரீரதயா தததீந ஸகலப்ரவருத்திகனானாலும், அசேதநமான சரீரம்போலே தானாக ஒரு ப்ரவருத்தி பண்ணமாட்டாதபடி இருக்கையன்றிக்கே, ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை ஸ்வாபாவிக தர்மங்களாக உடையனாகையாலே, ஜ்ஞாந சிகீர்ஷா ப்ரயத்ந பூர்வக ப்ரவருத்தி க்ஷமனாயிருக்கையாலும், ஸகல ப்ரவருத்திகளும் இவனுடைய ப்ரதம ப்ரயத்நத்தை அபேக்ஷிததுக் கொணடு ஈச்வரன் அநுமதி தாநம் பண்ணுகையாலும், விதி நிஷேத சாஸ்த்ர வையர்த்தயமுமில்லை. இவனுடைய ப்ரவ்ருத்தி மூலமாக ஈச்வரன் பண்ணும் நிக்ரஹாநுக்ரஹங்களுக்கும் ததநுகுணமான பல ப்ரதாநத்துக்கும் விரோதமில்லை என்னுமிடம் கீழே சொல்லப்பட்டது.

நியாம்யம் என்று ஏன் கூறப்பட்டது என்றால், ஈச்வரனுடைய ஸங்கல்பத்தின்படியே ஆத்மா அனைத்து செயல்களையும் செய்வதால் ஆகும். அதாவது, ப்ரு. (3-7-22) - ய ஆத்மநி திஷ்டந் ஆத்மநோ அந்தர: | யம் ஆத்மா ந வேத | யஸ்ய ஆத்மா சரீரம் | ய ஆத்மாநம் அந்தர: ய ஆத்மாநம் அந்தரோ யமயதி | ஸ தே ஆத்மா அந்தர்யாமி அம்ருத: - யார் ஆத்மாவில் உள்ளானோ, யார் ஆத்மாவில் புகுந்துள்ளானோ, யார் இவ்விதம் உள்ளதை ஆத்மா அறியாதோ, யாருக்கு ஆத்மா சரீரமோ, யார் ஆத்மாவினுள் புகுந்து நியமிக்கிறானோ அவனே உன் ஆத்மா, உனக்கு அந்தர்யாமியாக உள்ள அவன் அழிவற்றவன் - என்பது போன்று வாக்கியங்களில் கூறுவது போன்று, ஆத்மாவின் அந்தராத்மாவாக நின்று நியமத்தல். ஈச்வரன் அனைத்து காலங்களிலும் உள்ளவன் என்பதால், ஆத்மாவானது அவனால் ஏவப்படுவதாக உள்ளது என்பது, “சரீரத்தின் அனைத்து செய்கைகளும் அந்தச் சரீரத்தில் உள்ள புத்தியின் அடிப்படையின் அமைவது போன்று, சரீரத்தின் உள்ளே இருக்கின்ற ஆத்மாவின் அனைத்து செயல்களும் அந்த ஆத்மாவைச் சரீரமாகக் கொண்டுள்ள பரமாத்மாவின் ஸங்கல்பத்திற்கு ஏற்றபடியே உள்ளது”, என்பதாகும். இவ்விதம் ஆத்மாவானது பரமாத்மாவின் சரீரமாக உள்ளதால், பரமாத்மாவின் கட்டுப்பாட்டிற்கு ஏற்பவே தனது செயல்களைச் செய்கிறது; ஆனால் அசேதநமான சரீரம் போன்று தானாகவே எந்த ஒரு செயலையும் செய்ய இயலாமல் இருப்பதில்லை; அறிபவனாக இருத்தல், செயல் புரிபவனாக இருத்தல் மற்றும் அனுபவிப்பவனாக இருத்தல் ஆகிய தன்மைகளை இயல்பாகவே கொண்டதாக ஆத்மா உள்ளதால், “அறிவு, ஆசை, முயற்சி” ஆகியவற்றை முன்னிட்டுக் கொண்டு, செயல் புரிவதில் தகுதி கொண்டவனாகவே ஆத்மா உள்ளான்; மேலும் இவனுடைய முதல் முயற்சியை மட்டுமே எதிர்ப்பார்த்தபடி, ஈச்வரன், இந்த ஆத்மா செயலாற்ற அனுமதி அளிக்கிறான்; இந்தக் காரணங்களால், விதித்தல் மற்றும் தள்ளுதல் ஆகியவற்றைக் கூறும் சாஸ்த்ரங்கள் வீணாகப் போவதில்லை. ஆத்மாவின் செயல்கள் காரணமாக ஈச்வரன் செய்யும் அனுக்ரஹம் மற்றும் அளிக்கும் தண்டனை ஆகியவற்றுக்கும், இவற்றின் மூலம் விளையும் பயன்களுக்கும் விரோதம் இல்லை என்று முன்பே கூறப்பட்டது.