Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 37)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஜ்ஞாநத்தையொழியவும் தன்னையறிகையாலும், ஜ்ஞாநம் ஸாரபூதகுணமாய் நிரூபக தர்மமாயிருக்கையாலும் சொல்லிற்று.
இப்படி சாஸ்த்ரங்கள் சொல்லுகைக்கு மூலம் இன்னதென்கிறார்.
இவ்விதம் சாஸ்த்ரங்கள் கூறுவதற்கான அடிப்படை இன்னது என்று அருளிச்செய்கிறார்.
(ஜ்ஞாநத்தையொழியவும் தன்னையறிகையாலும்) என்று தொடங்கி, அதாவது ஜ்ஞாநம் ஸ்வாச்ரயத்துக்கு ஸ்வயம்ப்ரகாசகமாயிருக்குமோபாதி ஜ்ஞாந நிரபேக்ஷமாகத் தனக்குத்தானே ப்ரகாசிக்கையாலும் ஜ்ஞாநம் இவனுக்கு ஸாரபூத குணமாகையாலே ஸ்வரூபாநுபந்தித்வேந ஸ்வரூப நிரூபக தர்மமாகையாலும் சொல்லிற்றென்கை. – இதுதான், “தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபதேச: ப்ராஜ்ஞவத்”, “யாவதாத்ம பாவிதவாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத்” என்கிற ஸூத்ர த்வயத்தாலும் சொல்லப்பட்டது. “ஜ்ஞாந மாத்ர வ்யபதேசஸ்து ஜ்ஞாநஸ்ய ப்ரதாந குணத்வாத், ஸ்வரூபாநுபந்தித்வேந ஸ்வரூப நிரூபக குணத்வாத் ஆத்ம ஸ்வரூபஸ்ய ஜ்ஞாநவத் ஸ்வப்ரகாசத்வாத்வோபபத்யதே” என்றிறே தீபத்திலே பாஷ்யகாரரும் அருளிச்செய்தது.
ஞானமானது தனது இருப்பிடமாக உள்ள ஆத்மாவிற்குத் தானே தன்னை வெளிப்படுத்துகிறது; அதே போன்று, ஞானத்தை எதிர்பார்க்காமல் ஆத்மாவானது தனக்குத் தானே தன்னை வெளிப்படுத்துகிறது. ஆகவே ஞானமானது ஆத்மாவிற்கு ஸாரமான ஒரு உள்ளது என்றாகிறது. இதன் விளைவாக ஆத்மாவுடன் சேர்ந்து நின்று ஸ்வரூபத்தை நிரூபித்துக் காண்பிக்கும் தர்மமாக உள்ளதால், கடந்த சூர்ணையில் கூறப்பட்டது போன்று உரைக்கப்பட்டது. இந்தக் கருத்தானது, ப்ர. ஸூ. (2-3-29) - தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபதேச: ப்ராஜ்ஞவத் - ஞானம் என்ற குணத்தைச் சாரமாகக் கொண்டுள்ளதால் (சாரம் என்றால் “இன்றியமையாத” என்று பொருள்), ஆத்மாவானது ஞானம் என்று கூறப்படுகிறது. பரமாத்மா (ஆனந்தம் என்று) கூறப்படுவது போன்று – என்றும், ப்ர. ஸூ. (2-3-30) - யாவதாத்ம பாவித்வாத் ச ந தோஷ: தத் தர்சநாத் - ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதாலும், ஆத்மாவை ஞானம் என்று கூறுவதில் தவறில்லை. இது போன்று கூறப்படுவதைக் காணலாம் – என்றும் உள்ள இரண்டும் ஸூத்ரங்களாலும் கூறப்பட்டது. இதனை பாஷ்யகாரரும் வேதாந்ததீபத்தில் - ஜ்ஞாந மாத்ர வ்யபதேசஸ்து ஜ்ஞாநஸ்ய ப்ரதாந குணத்வாத், ஸ்வரூபாநுபந்தித்வேந ஸ்வரூப நிரூபக குணத்வாத் ஆத்ம ஸ்வரூபஸ்ய ஜ்ஞாநவத் ஸ்வப்ரகாசத்வாத்வோபபத்யதே - ஆத்மாவானது ஞானமே ஆகும் என்று உரைக்கும் கருத்தானது, ஞானம் முதன்மையான குணமாக உள்ளதாலும், ஆத்மாவை நிரூபிக்கின்ற குணமாக உள்ளதாலும், ஆத்மஸ்வரூபம் போன்று தானே ப்ரகாசிப்பதாலும் ஆகும் - என்று அருளிச்செய்தார் அல்லவோ?