Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 35)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
கர்த்ருத்வந்தான் ஈச்வராதீநம்.
இப்படி ஸாங்க்ய பக்ஷத்தை நிராகரித்து ஆத்மாவுக்கே கர்த்ருத்வத்தை ஸாதித்தார் கீழ்; இந்த கர்த்ருத்வம்தான், ஸ்வாயத்தமோ பராயத்தமோ என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார். இப்படி ஆத்மா ஜ்ஞாநாச்ரயமாயிருக்குமாகில், “யோ விஜ்ஞாநே திஷ்ட்டந்”, “விஜ்ஞாநமய:”, “விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே” என்றும், “ஜ்ஞாந ஸ்வரூபமத்யந்த நிர்மலம் பரமார்த்தத:”, “ஜ்ஞாந ஸ்வரூபமகிலம் ஜகதேததபுத்தய:”, “விஜ்ஞாநம் பரமார்த்தோ ஹி த்வைதி நோதத்யதர்சிந:” என்றும் சாஸ்த்ரங்களிலே இவனை ஜ்ஞாநமென்று சொல்லுவானேன்? என்கிற ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தை அநுவதிக்கிறார்.
இப்படியாக ஸாங்க்யர்களுடைய கருத்தைத் தள்ளி, ஆத்மாவிற்குச் செயல் புரிதல் என்ற தன்மை உள்ளதை நிரூபித்தார். அடுத்து, இத்தகைய செயலாற்றுதல் என்பது ஆத்மாவிற்கு ஸ்வயமாகவே கிட்டியதா அல்லது மற்றவர்கள் வசப்பட்டதா என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். இவ்விதம் ஆத்மாவானது ஞானத்திற்கு இருப்பிடம் என்று கூறும்போது, ப்ரு. (3-7-22) - யோ விஜ்ஞாநே திஷ்டந் – விஜ்ஞாநத்தில் உறைபவன் யாரோ – என்றும், தைத். (2-4-1) - விஜ்ஞாநமய: - ஞானமயமாக உள்ளவனும் – என்றும், தை. (2-5) - விஜ்ஞாநம் யஜ்ஞம் ததுதே - ஜ்ஞானம் யஜ்ஞத்தை இயற்றுகிறது – என்றும், ஸ்ரீவிபு. (1-2-6) – ஜ்ஞாந ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத: – ஞானமயமானவனும், அனைத்து குணங்களும் நீங்கப் பெற்றவனும், இதனால் தூய்மையாக உள்ளவனும் – என்றும், ஸ்ரீவிபு. (1-4-40) - ஜ்ஞாந ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏதத் அபுத்தய: - இந்த உலகம் ஞானஸ்வரூபமாகவே உள்ளது – என்றும், ஸ்ரீவிபு. (2-14 -31) - விஜ்ஞாநம் பரமார்த்தோ ஹி த்வைதிநோ அதத்ய தர்சிந: - ஞானமயமான ப்ரஹ்மத்தை இவ்விதம் அறிவதே உண்மையானது; இரண்டு என்று எண்ணியபடி உள்ளவர்கள் உண்மை அறியாதவர் ஆவர் – என்றும் பலவிதமாகச் சாஸ்த்ரங்களில் ஆத்மாவை ஞானம் என்று ஏன் கூற வேண்டும் என்று அறிய விரும்புபவர்களுடைய கேள்வியை உரைக்கிறார்.
(கர்த்ருத்வந்தான் ஈச்வராதீநம்) என்று, அதாவது இவ்வாத்மாவினுடைய கர்த்ருத்வந்தான் ஸ்வாதீனமன்றிக்கே, ஈச்வராதீனமாயிருக்குமென்றபடி. “பராத்து தச்ச்ருதே” என்று வேதாந்த ஸூத்ரத்தாலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பராயத்தமென்று ஸித்தமாகச் சொல்லப்பட்டதிறே. சாஸ்த்ரார்த்தவத்வாத்துக்காக கர்த்ருத்வம் ஆத்ம தர்மமென்று கொள்ளவேணும். அந்த கர்தாவுக்கு தர்மமான ஜ்ஞாந இச்சா ப்ரயத்நங்கள் பகவத் அதீநங்களாயிருக்கையாலும், அந்த ஜ்ஞாநாதிகள் பகவத் அநுமதியொழிய க்ரியா ஹேதுவாக மாட்டாமையாலும், இவனுடைய கர்த்ருத்வம் ஈச்வராதீநம் என்கிறது. இவனுடைய புத்தி மூலமான ப்ரயத்நத்தை அபேக்ஷித்து ஈச்வரன் அநுமதி தாநம் பண்ணுகையாலே, அந்த க்ரியா நிபந்தநமான புண்யபாபங்களும் சேதநனுக்கே ஆகிறது என்று விவரணத்திலே ஆச்சான்பிள்ளையும்; “இப்படி கர்த்ருத்வம் பரமாத்மாயத்தமானாலும், விதி நிஷேத வாக்யங்களுக்கும் வையர்த்யம் வாராது”, “க்ருத ப்ரயத்நாபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்தா வையர்த்தியாதிப்ய:” என்று பரிஹரிக்கப்படுகையாலே. அதாவது விஹித ப்ரதிஷித்தங்களுக்கு வையர்த்யாதிகள் வாராமைக்காக இச்சேதநன் பணணின ப்ரதம ப்ரயத்நத்தை அபேக்ஷித்துக் கொண்டு ஈச்வரன் ப்ரவர்த்திப்பிக்குமென்றபடி, எங்ஙனேயென்னில்; எல்லா சேதநருக்கும் ஜ்ஞாத்ருத்வம் ஸ்வபாவமாகையாலே ஸாமாந்யேந ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி யோக்யத்வமுண்டாயே யிருக்கும்; இப்படியான ஸ்வரூபத்தை நிர்வஹிக்கைக்காக, ஈச்வரன் அந்தராத்மாவாய்க் கொண்டு நில்லா நிற்கும்; அவனாலே உண்டாக்கப்பட்ட ஸ்வரூப சக்தியை உடையனான சேதநன் அவ்வோ பதார்த்தங்களிலே உந்பந்ந ஜ்ஞாந சிகீர்ஷா ப்ரயத்நனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்; அவ்விடத்தில் மத்யஸ்தனாகையாலே உதாஸீநரைப் போலேயிருககிற பரமாத்மாவானவன் அந்த சேதநனுடைய பூர்வ வாஸநாநுரூபமான விதி நிஷேத ப்ரவருத்தியிலே அநுமதியையும் அநாதரத்தையுங் உடையவனாய்க் கொண்டு, விஹிதங்களிலே அநுக்ரஹத்தையும் நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணாநிற்பானாய், அநுக்ரஹாத்மகமான புண்யத்துக்கு பலமான ஸுகத்தையும் நிக்ரஹாத்மகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும அவ்வோ சேதநர்க்குக் கொடா நிற்கும். – இது தன்னை அபியுக்தரும் சொன்னார். “ஆதாவீஸ்வரதத்தயைவ புருஷஸ் ஸ்வாதந்த்ரிய சக்தயா ஸ்வயம் தத்தத் ஜ்ஞாந சிகீர்ஷண ப்ரயத்நாந் உத்பாதயந் வர்ததே தத்ர உபேக்ஷ்ய தத் அநுமத்ய விததத் தந்நிக்ரஹாநுக்ரஹௌ தத்தத் கர்மபலம் ப்ரயச்சதி ததஸ் ஸர்வஸ்ய பும்ஸோ ஹரி:” என்று அடியிலே ஸர்வநியந்தாவாய ஸர்வாந்தராத்மாவான ஸர்வேர்வரன் தனக்குண்டாக்கிக் கொடுத்த ஜ்ஞாத்ருத்வ ரூபமான ஸ்வாதந்த்ரிய சக்தியாலே இப் புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞாந சிகீர்ஷா ப்ரயத்நங்களை யுண்டாக்கிக் கொணடு வர்த்தியா நிற்கும்; அவ்விடத்திலே அசாஸ்த்ரீயங்களிலே உபேக்ஷித்தும் சாஸ்த்ரீயங்களிலே அநுமதி பண்ணியும் அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹாநுக்ரஹங்களைப் பண்ணா நின்றுகொண்டு, அவ்வோ கர்மபலத்தையும் ஸர்வேச்வரன் கொடா நிற்குமென்றார்கள், “இப்படி ஸர்வ ப்ரவருத்திகளிலும் சேதநனுடைய ப்ரதம ப்ரயத்நத்தை அபேக்ஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்ததிப்பியா நிற்குமென்றதாய்த்து” என்று தீபப்ரகாசத்திலே ஜீயரும் அருளிச்செய்த அர்த்தங்கள் இவவிடத்திலே அநுஸந்தேயங்கள். – ஆனால், “ஏஷ ஹ்யேவஸாது கர்ம காரயதி, தம் யமேப்யோ லோகேப்ய உநநிநீஷதி, ஏஷ ஏவாஸாது கர்ம காரயதி, தம் யமதோ நிநீஷதி” என்று உநநிநீஷையாலும், அதோநிநீஷையாலும் ஸர்வேச்வரன் தானே ஸாத்வஸாது கர்மங்களைப் பண்ணுவியாநிற்குமென்கிற இது சேரும்படி என்? என்னில், இது ஸர்வஸாதாரணமன்று; யாவனொருவன் பகவத் விஷயத்தில் அதிமாத்ரமான ஆநுகூல்யத்திலே வ்யவஸிதனாய்க்கொண்டு ப்ரவர்த்தியா நிற்கும் அவனை அநுக்ரஹியா நின்றுகொண்டு பகவான் தானே ஸ்வப்ராப்தயுபாயங்களாய், அதிகல்யாணங்களான கர்மங்களிலே ருசியை ஜநிப்பிக்கும்; யாவனொருவன் அதிமாத்ர ப்ராதிகூல்யத்திலே வ்யவஸிதனாய்க் கொண்டு ப்ரவர்த்தியா நிற்கும அவனை ஸ்வப்ராப்தி விரோதிகளாய், அதோகதி ஸாதநங்களான கர்மங்களிலே ஸங்கிப்பிக்கும் என்று இந்த ச்ருதி வாக்யங்களுக்கு அர்த்தமாகையாலே, இது தன்னை ஸர்வேச்வரன் தானே அருளிச்செய்தானிறே, “அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ்ஸர்வம் ப்ரவர்த்ததே இதி மத்வா பஜந்தே மாம் புதாபாவஸமந்விதா:” என்று தொடங்கி, “தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் பரீதிபூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே; தேஷாமேவாநுகம்பார்த்தம் அஹமஜ்ஞாநஜம் தம: நாசயாம்யாத்மபாவஸ்த்தோ ஜ்ஞாந தீபேந பாஸ்வதா” என்றும், “அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஸுர நீச்வரம்” என்று தொடங்கி “மாமாத்ம பரதேஹேஷு ப்ரதவிஷந் தோப்யஸூயகா:” என்னுமதளவாக அவர்களுடைய ப்ராதிகூல்யாதிசயத்தைச் சொல்லி, “தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாம்யஜஸ்ரமசுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு” என்றும் அருளிச் செய்கையாலே. ஆகையால், அநுமந்த்ருத்வமே ஸர்வஸாதாரணம்; ப்ரயோஜகத்வம் விசேஷ விஷயமென்று கொள்ளவேணும். “க்ருத ப்ரயத்நாபேக்ஷஸ்து” என்கிற ஸூத்ரத்திலே இதெல்லாம் பாஷ்யகாரர் தாமே அருளிச்செய்தார். இவை எல்லாவற்றையும் திருவுள்ளம் பற்றியிறே “கர்த்ருத்வம்தான் ஈச்வராதீநம்” என்று அருளிச்செய்தது. – ஆக, கீழ்ச் செய்ததாயிற்றது : “ஜ்ஞாநாச்ரயமாகையாவது ஜ்ஞாநத்துக்கு இருப்பிடமாயிருக்கை” என்று ப்ரதமத்திலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லி, ஜ்ஞாந மாத்ரமென்பாரை நிராகரித்துக்கொண்டு, ஜ்ஞாத்ருத்வ கதநாநந்தரம் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்லவேண்டுகையாலே அவை இரண்டும் ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே தன்னடையே வருமென்னுமிடத்தை தர்சிப்பித்து, குணங்களுக்கே கர்த்ருத்வமுள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு, ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து, அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப ப்ரயுக்தமல்லாத அம்சத்தையும், அதுதானிவனுக்கு வருகைக்கடியையும் சொல்லி, இப்படி ஆத்மாவுக்குண்டான கர்த்ருத்வம்தான் ஸர்வாவஸ்தையிலும் ஈச்வராதீநமா யிருககுமென்று நிகமித்தாராயிற்று. இதெல்லாம் ஆத்மாவினுடைய ஜ்ஞாநாச்ரயத்வ கதநமடியாக வந்ததிறே.
ப்ர. ஸூ. (2-3-40) - பராத் து தத் ச்ருதே: – ஜீவாத்மாவுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவால் உண்டாகிறது, ச்ருதி கூறுவதால் - என்ற வேதாந்தஸூத்ரத்தில், “ஆத்மாவின் செயலாற்றுதல் என்பது ஈச்வரனுக்கு வசப்பட்டதே ஆகும்” என்று அருளிச்செய்யப்பட்டது. சாஸ்திரங்கள் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்றால், ஆத்மாவிற்குச் செயலாற்றும் தன்மை உள்ளதை ஏற்கவேண்டும். ஆத்மாவிற்கு உள்ள பண்புகளான ஞானம், இச்சை, முயற்சி போன்ற பலவும் பகவானுடைய வசப்பட்டதாக உள்ளதாலும், ஞானம் போன்றவை பகவானின் அனுமதி இன்றி செயல் புரிவதற்குக் காரணமாக இருக்காது என்பதாலும், இவனுடைய செயலாற்றுதல் என்பது ஈச்வரனுடைய வசப்பட்டது என்றாகிறது. “இவனுடைய புத்தி மூலமான முயற்சியை எதிர்பார்த்து ஸர்வேச்வரன் அனுமதி அளிப்பதால், அந்தச் செயல்களின் விளைவாக ஏற்படும் புண்ணிய பாபங்கள் அனைத்து அந்த ஆத்மாவிற்கே சேர்கின்றன” என்று தத்வ விவரணத்தில் ஸ்வாமி ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தார்; “இவ்விதம் செயலாற்றுதல் என்பது ஸர்வேச்வரன் வசப்பட்டுள்ளபோதிலும், விதித்தல் மற்றும் தள்ளுதல் ஆகியவற்றை உரைக்கும் சாஸ்த்ர வாக்கியங்களுக்கு வீணாகுதல் என்ற நிலை ஏற்படாது”; “ஏனென்றால், ப்ர. ஸூ. (3-2-40) - பூர்வம் து பாதராயண: ஹேது வ்யபதேசாத் - பலனை அளிப்பதால் முந்தையதே என்று பாதராயணர் கூறுகிறார் - என்று பரிகாரம் கூறப்படுவதால் ஆகும்”. அதாவது, சாஸ்த்ரங்களில் கூறப்பட்டதான, “இதனைச் செய், அதனைச் செய்யாதே” என்ற விதிமுறைகளுக்கு வீணாதல் என்று நிலை ஏற்படாமல் இருப்பதற்காக, சேதநன் செய்கின்ற முதல் முயற்சிற்கு ஸர்வேச்வரன் அனுமதி அளித்து, அவனைச் செயல்பட வைக்கிறான் என்று கருத்து. எப்படி என்றால், அனைத்து சேதநர்களுக்கும் “ஞானத்துடன் இருத்தல்“ என்பது பொதுவாகவே உள்ளது; ஆகவே செயல்களில் ஈடுபடுதல் மற்றும் தவிர்த்தல் ஆகியவை எப்போதுமே உள்ளதாகவே இருக்கும்; இவ்விதமாக உள்ள ஜீவாத்மாவின் தன்மையை நிர்வாகம் செய்வதற்காக ஸர்வேச்வரன் அவர்களுடைய அந்தர்யாமியாக நிற்கிறான்; ஸர்வேச்வரனால் உண்டாக்கப்பட்டதான, “செயலாற்றும் தன்மை” என்பதைக் கொண்டவனாகிய ஆத்மா, அந்தந்த பொருள்களில் ஏற்படுகின்ற ஞானம், ஆசை மற்றும் முயற்சி ஆகியவற்றைக் கொண்டவனாக உள்ளான்; அங்கு நடுநிலைமையில் உள்ளதால், எதிலும் பட்டும் படாமலும் உள்ளவனாகிய பரமாத்மா, அந்தச் சேதநனுடைய பூர்வ வாசனைக்கு ஏற்ப, செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்பவற்றில் ஜீவாத்மாவிற்கு அனுமதியையும் உதாஸீனத்தையும் கொண்டவனாக, செய்ய வேண்டிவற்றுக்கு அநுக்ரஹமும் செய்யக்கூடாதவற்றுக்கு தண்டனையையும் அளித்தபடி உள்ளான். தனது அனுக்ரஹத்தை உள்ளடக்கியதான புண்ணியத்திற்குப் பலனாக சுகத்தையும், தண்டனையை உள்ளடக்கியதான பாபத்திற்குத் துக்கத்தையும் அந்தச் சேதநர்களுக்கு அளிக்கிறான். இந்தக் கருத்தை, நம்பிக்கைக்கு உரியவராகிய ஸ்வாமி நடாதுரம்மாளும் தத்வஸாரத்தில் (46) - ஆதாவீஸ்வரதத்தயைவ புருஷஸ் ஸ்வாதந்த்ரிய சக்தயா ஸ்வயம் தத்தத் ஜ்ஞாந சிகீர்ஷண ப்ரயத்நாந் உத்பாதயந் வர்ததே தத்ர உபேக்ஷ்ய தத் அநுமத்ய விததத் தந்நிக்ரஹாநுக்ரஹௌ தத்தத் கர்மபலம் ப்ரயச்சதி ததஸ் ஸர்வஸ்ய பும்ஸோ ஹரி: - ஆத்மாவிற்கு வழங்கப்படுவதான முதல் அனுமதி என்ற சுதந்திரமாகிய சக்தி காரணமாக, ஆத்மாவானவன் தானாகவே அந்தந்த விஷயங்ளில் செயலாற்றுவதற்கான ஆசை மற்றும் முயற்சிகளை ஏற்படுத்துகிறான்; அவற்றில் செய்யக்கூடாதவற்றில் உதாசீனமும், செய்யக்கூடியவற்றில் அனுமதியும் அளித்தபடி உள்ள ஈச்வரன், அவற்றுக்குத் தண்டணை அளித்தல் மற்றும் அனுக்ரஹம் புரிதல் ஆகியவற்றைச் செய்கிறான்; இதன் மூலம், அனைவருடைய கர்மபலனை ஸ்ரீஹரி அளித்தபடி உள்ளான் - என்றார். அதாவது அனைத்தையும் நியமிப்பவனாகவும், அனைத்திற்கும் அந்தர்யாமியாகவும் உள்ள ஸர்வேச்வரன், ஜீவாத்மாவாகிய தனக்கு ஏற்படுத்திக் கொடுத்த செயலாற்றுதல் என்ற வடிவத்தில் உள்ளதான சுதந்திரம் என்ற சக்தியால், தானாகவே அந்தந்த விஷயங்களில் ஞானம், ஆசை மற்றும் முயற்சி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்கிறான்; அந்தந்த விஷயங்களில், சாஸ்த்ரத்திற்கு விரோதமாக உள்ள செயல்களில் ஈச்வரன் தனது வெறுப்பையும், சாஸ்த்ரங்களுக்கு ஏற்ப உள்ள செயல்களில் தனது அனுமதியையும் அளிக்கிறான்; இதன் மூலம் அந்தந்த விஷயங்களுக்கான தண்டனை மற்றும் அனுக்ரஹம் ஆகியவற்றை அளிக்கிறான்; இதன் விளைவாக அந்தந்த கர்மங்களுக்கான பலன்களை அளித்தபடியும் ஈச்வரன் உள்ளான். “இப்படியாக அனைத்து விஷயங்களிலும் ஜீவாத்மாவின் முதல் முயற்சியை எதிர்பார்த்தபடி பரமாத்மா தூண்டியபடி நிற்கிறான்” என்று தீபப்ரகாசத்தில் ஸ்வாமி வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச்செய்தார். இந்தக் கருத்துக்களை இங்கு எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆனால், கௌஷீதகீ உபநிஷத்தில் - ஏஷ ஹ்யேவஸாது கர்ம காரயதி, தம் யமேப்யோ லோகேப்ய உநநிநீஷதி, ஏஷ ஏவாஸாது கர்ம காரயதி, தம் யமதோ நிநீஷதி - எந்த ஒரு ஆத்மாவை இந்த லோகத்திலிருந்து உயர்ந்த ஸர்வேச்வரன் எண்ணுகிறானோ, அந்த ஆத்மாவையே நல்ல செயல்கள் புரியும்படிச் செய்கிறான்; எந்த ஆத்மாவை நரகத்தில் ஆழ்த்த எண்ணுகிறானோ, அந்த ஆத்மாவைத் தீய செயல்கள் செய்யும்படியாகத் தூண்டுகிறான் - என்று கூறுவதற்கு ஏற்ப, உயர்ந்த இடம் மற்றும் தாழ்ந்த இடம் ஆகிய இடங்களை அடையச் செய்யும்விதமாக, ஸர்வேச்வரன் தானாகவே ஆத்மாவை நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் செய்யும்படியாகச் செய்யும்போது, மேலே கூறப்பட்ட கருத்துக்கள் எப்படிப் பொருந்தும்? இதற்கு விடை அளிக்கிறார். இது அனைவருக்கும் பொதுவானது அல்ல. யார் ஒருவன் பகவத் விஷயத்தில் எல்லையற்ற ஈடுபாடுடன் உள்ளானோ, அவனைப் பகவான் அனுக்ரஹிக்கத் தொடங்குகிறான், அவன் தன்னை அடைவதற்கான உபாயமாகப் பகவான் தானே நிற்கிறான், மிகுந்த மங்களகரமான கர்மங்களில் அவனுக்கு ஆசையை ஏற்படுத்துகிறான். ஆனால் ஒருவன், பகவானுக்கு விருப்பம் இல்லாத செயல்களைச் செய்ய முயன்றபடி இருப்பான்; அவன், பகவானாகிய தன்னை அடைவதற்கான தடைகளைப் பகவானே ஏற்படுத்தி, மேலும் தாழ்ந்த நிலைக்குச் செல்லக் கூடிய கர்மங்களை அவன் செய்யும்படியாக பகவானே தூண்டுகிறான். இதுவே மேலே உள்ள ச்ருதி வாக்கியத்தின் பொருள் என்பதால், இதனை ஸர்வேச்வரன் தானே கீதையில் (10-8) – அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்த்ததே | இதி மத்வா பஜந்தே தம் புதா பாவஸமந்விதா – “நானே அனைத்தும் தோன்றுவதற்கான காரணம் ஆவேன், அனைத்தும் என்னால் செய்யப்படுகிறது” என்று அறிந்து கொள்ளும் அறிஞர்களாகிய பக்தர்கள் என்னை இடைவிடாது உபாஸிக்கிறார்கள் - என்று கூறத் தொடங்கி, கீதை (10-10) - தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேந மாம் உபயாந்தி தே - எப்போதும் என்னுடன் சேர்ந்திருக்கவேண்டும் என்னும் ஆசை கொண்டவர்களாக, என்னை மிகுந்த அன்புடன் உபாஸிப்பவர்களுக்கு, என்னை அடைவதற்கான புத்தியோகத்தை நான் அளிக்கிறேன் - என்றும், கீதை (10-11) – தேஷாம் ஏவ அநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞாநஜம் தம: | நாசயாமி ஆத்ம பாவஸ்தோஜ்ஞாந தீபேந பாஸ்வதா - அப்படிப்பட்டவர்களை அனுக்ரஹிக்கும்விதமாக நான் அவர்களுடைய உள்ளத்தில் நிலைத்து நின்று, அறியாமையால் ஏற்படும் இருளை, என்னைக் குறித்த ஞானம் என்ற ஒளியால் அழிக்கிறேன் - என்றும் கூறியதைக் காணலாம். இதனைப் போன்றே கீதையில் (16-8) – அஸத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகதாஹு: அநீச்வரம் – அவர்கள், “இந்த உலகம் ஸத்யம் அற்றது, பரமாத்மாவை ஆதாரமாகக் கொண்டது அல்ல, என்னால் நியமிக்கப்படுவது அல்ல” என்று கூறுகிறார்கள் – என்று தொடங்கி, கீதை (16-18) - மாமாத்ம பரதேஹேஷு ப்ரத்விஷந்தோ அப்யஸுயகா: - தங்கள் உடலிலும் மற்றவர்கள் உடலிலும் அந்தர்யாமியாக உள்ள என்னை வெறுத்து, என்னைக் குறித்து பொறாமை அடைகிறார்கள் - என்று முடித்தான். இதனைத் தொடர்ந்து கீதையில் (16-19) – தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் | க்ஷிபாமி அஜஸ்ரம் அஶுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு - இப்படியாக யார் என்னை வெறுக்கிறார்களோ, பாபம் செய்கிறார்களோ, கொடியவர்களோ, அப்படிப்பட்டவர்களை நான் இந்த ஸம்ஸாரச் சூழற்சியில் தொடர்ந்து உழலும்படியாக அஸுரப் பிறவிகளில் தள்ளுகிறேன் - என்றது காண்க. ஆகவே கர்மங்களுக்கான அனுமதி அளித்தல் என்பது அனைவருக்கும் பொதுவானதே ஆகும். சிறந்த கர்மங்களைச் செய்யவைத்தல் என்பது மட்டுமே சிறப்பித்துக் கூறப்பட்டதாகக் கொள்ளவேண்டும். ப்ர. ஸூ. (3-2-40) - பூர்வம் து பாதராயண: ஹேதுவ்யபதேசாத் - பலனை அளிப்பதால் முந்தையதே என்று பாதராயணர் கூறுகிறார் - என்பதில் இவை அனைத்தையும் பாஷ்யகாரர் தானே அருளிச்செய்தார். இவை அனைத்தையும் திருவுள்ளம் பற்றியே சூர்ணையில் “கர்த்ருத்வம்தான் ஈச்வராதீநம்” என்று அருளிச்செய்தார். ஆகவே இதுவரை கூறப்பட்டது என்ன? “ஜ்ஞாநாச்ரயமாகையாவது ஜ்ஞாநத்துக்கு இருப்பிடமாயிருக்கை” என்று தொடக்கத்தில், ஆத்மாவின் “அறிபவனாக உள்ள தன்மை” என்பதை உரைத்தார்; ஆத்மாவானது ஞானம் மட்டுமே ஆவான் என்று கூறும் கருத்தைத் தள்ளினார்; அறிபவனாக உளள தன்மை என்பதைக் கூறியதைத் தொடர்ந்து, செயல் புரிபவனாக இருத்தல் மற்றும் அனுபவிப்பனாக இருத்தல் ஆகிய இரண்டையும் கூறவேண்டும் என்பதால், அவை இரண்டும், அறிபவனாக உள்ள தன்மை என்பதைத் தொடர்ந்து தாங்களாகவே வெளிப்படும் என்று உணர்த்தினார்; தொடர்ந்து, “குணங்களுக்கே செயல் புரியும் தன்மை உள்ளது, ஆத்மாவிற்கு அல்ல” என்று கூறும் வாதத்தை தள்ளினார்; ஆத்மாவின் செயல் புரியும் தன்மை என்பதை நிலை நாட்டினார்; அத்தகைய செயலாற்றும் தன்மை என்பது ஆத்மாவிற்கு ஸ்வரூபத்திலேயே உள்ளதல்ல என்றும், அது அவனுக்கு வந்து சேர்கின்ற ஒன்றாகும் என்றும் உரைத்தார். இப்படியாக ஆத்மாவுக்கு உள்ள செயலாற்றும் தன்மை என்பதும், அனைத்து நிலைகளிலும் ஈச்வரனுக்கு வசப்பட்டே உள்ளதாகும் என்றூம் கூறி நிறைவு செய்தார்.