Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 32)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

அப்போது இவனுக்கு சாஸ்த்ர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும்.

அத்தை நிராகரிக்கிறார் (அப்போது) என்று தொடங்கி.

கடந்த சூர்ணையில் கூறப்பட்டவற்றை நிராகரிக்கிறார்.

அதாவது ப்ரக்ருதிக்கே கர்த்ருத்வமாய் ஆத்மாவுக்கு கர்த்ருத்வமில்லையானபோது இவனுக்கு விதி நிஷேத ரூபமான சாஸ்த்ரத்துக்குத் தான் அதிகாரியாய்க் கொண்டு அதின் வசத்திலே நடக்கவேண்டுகையும் விஹித நிஷித்த கரண ப்ரயுக்த ஸுகதுக்கரூப பலபோக்த்ருத்வமும் சேராதென்கை. சேதனன் கர்த்தாவாகாதபோது சாஸ்த்ரத்துக்கு வையர்த்த்யம் ப்ரஸங்கிக்கும். “சாஸ்த்ர பலம் ப்ரயோக்தரி”, “கர்த்தா சாஸ்த்ரார்த்த்வத்வாத்” என்னக் கடவதிறே. இனித் தான், “ஸ்வர்ககாமோ யஜேத”, “முமுக்ஷுர் ப்ரஹ்மோபாஸீத” என்று ஸ்வர்க மோக்ஷாதி பல போக்தாவையிறே கர்த்தாவாக சாஸ்த்ரம் நியோகிக்கிறதும்; ஆகையாலே பலபோக்தாவே கர்த்தாவாகவும் வேணுமிறே. அசேதநத்துக்கு கர்த்ருத்வமாகில் சேதநனைக் குறித்து விதிக்கவும கூடாது. “சாஸநாச் சாஸ்த்ரம்” என்னக் கடவதிறே. சாஸநமாவது ப்ரவந்த்தநம். சாஸ்த்ரத்துக்கு ப்ரவர்த்தகத்வம் போத ஜநந த்வாரத்தாலே. அசேதநமான ப்ரதாநத்துக்கு போதத்தை விளைக்கப் போகாதிறே. ஆகையால் சாஸ்த்ரம் அர்த்தவத்தாம்போது, போக்தாவான சேதநனுக்கே கர்த்ருத்வமாக வேணும் இதெல்லாவற்றையும் திருவுள்ளம் பற்றியிறே “அப்போது இவனுக்கு சாஸ்த்ர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும்” என்று அருளிச்செய்தது.

“ப்ரக்ருதிக்கே செயல்புரிதல் என்னும் தன்மை உள்ளது, ஆத்மாவிற்கு இல்லை” என்று உரைத்தால், “இவனால் தள்ளப்பட வேண்டியது மற்றும் ஏற்கப்பட வேண்டியது” என்பதை உரைக்கும் வடிவில் உள்ளதான சாஸ்த்ரத்திற்குத் தான் அதிகாரியாக இருந்தபடி அதில் கூறப்பட்டவற்றை ஏற்று நடத்தல் என்பதும், தள்ள வேண்டியவை மற்றும் ஏற்க வேண்டியவை என்பதைச் செய்வதால் வரும் இன்ப துன்ப பலன்களை அனுபவித்தல் என்பதும் சேராமல் போகும். மேலும் சேதநன் கர்த்தா அல்லன் என்று கூறினால், சாஸ்த்ரங்கள் அனைத்தும் வீணாகப்போகும் நிலை ஏற்படும். பூர்வமீமாம்ஸையில் - சாஸ்த்ர பலம் ப்ரயோக்தரி – கர்த்தாவானால் சாஸ்த்ரம் பயன் அளிப்பதாகும் - என்றும், ப்ர. ஸூ. (2-3-33) கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்வாத் - சாஸ்த்ரம் பயனுள்ளது என்றாகவேண்டும் என்றால், ஜீவாத்மா கர்த்தாவாகிறான் – என்றும் கூறப்பட்டது காணலாம். மேலும் “ஸ்வர்ககாமோ யஜேத - ஸ்வர்கத்தை விரும்புபவன் யஜ்ஞம் இயற்றக் கடவன்” என்றும், “முமுக்ஷுர் ப்ரஹ்மோபாஸீத – மோக்ஷத்தை விரும்புபவன் ப்ரஹ்மத்தை உபாசிப்பானாக” என்றும் உள்ள வாக்கியங்களின்படி, ஸ்வர்கம் மற்றும் மோக்ஷம் ஆகிய பலன்களை அனுபவிப்பவனை அல்லவோ சாஸ்த்ரங்கள் கர்த்தாவாக விதிக்கின்றன? ஆகவே பலனை அனுபவிப்பவனே கர்த்தா ஆகிறான். அசேதநத்திற்கு செயலாற்றும் தன்மை உள்ளது என்னும்போது சேதநனுக்கு அவற்றை விதிக்கக்கூடாது அல்லவோ? “சாஸநாச் சாஸ்த்ரம் – சாஸ்த்ரங்கள் என்பவை சாஸநங்கள் ஆகும்”, என்று கூறப்பட்டது. சாஸநம் என்பது கட்டளை இடுதல் ஆகும். சாஸ்த்ரமானது “அதனைச் செய், இதனைச் செய்யாதே” என்று கட்டளை இடுதல் என்பது அறிவை ஏற்படுத்துதல் மூலமே ஆகும். அசேதநத்திற்கு அறிவை ஏற்படுத்த இயலாது அல்லவோ? எனவே சாஸ்த்ரங்கள் பொருளுடன் கூடியவை என்று கூறவேண்டுமானால், அனுபவிப்பனாக உள்ள சேதநனுக்கே செயல் புரியும் தன்மை உள்ளது என்றாகிறது. இவை அனைத்தையும் திருவுள்ளத்தில் கொண்டு இந்தச் சூர்ணையை அருளிச்செய்தார்.