Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 31)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
சிலர், குணங்களுக்கே கர்த்ருத்வமுள்ளது, ஆத்மாவுக்கில்லையென்றார்கள்.
இப்படி ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமாயிருந்துள்ள கர்த்ருத்வத்தை இல்லையென்று, ப்ரக்ருதிக்கே கர்த்ருத்வத்தைக் கொள்ளுகிற ஸாங்க்யரை நிராகரிக்கிறார் (சிலர்) என்று தொடங்கி.
இப்படியாக ஆத்மாவிற்கு இயல்பாகவே செயலாற்றும் தன்மை உள்ளதை மறுத்து, ப்ரக்ருதிக்கே செயல் புரியும் தன்மை உள்ளது என்று கூறும் ஸாங்கியர்களைத் தள்ளுகிறார்.
சிலரென்று அவர்கள் பக்கல் தமக்குண்டான அநாதரம் தோற்ற அருளிச் செயகிறார். (குணங்களுக்கே கர்த்ருத்வமுள்ளது ஆத்மாவுக்கு இல்லையென்றார்கள்) குணங்களென்றும் ப்ரக்ருதியென்றும் பேதமில்லையிறே இவர்களுக்கு; ஆகையாலே ப்ரக்ருதிக்கே என்கிற ஸ்தாநத்திலே (குணங்களுக்கே) எனகிறார். “மூலப்ரக்ருதிர் நாம ஸுகதுக்க மோஹாத்மகாநி லாகவ ப்ரகாசசலநோபஷ்டம்பந கௌரவாவரண கார்யாணி, அத்யந்தாதீந்த்ரியாணி, கார்யைக நிரூபண விவேகாநி, அந்யூநாநதிரேகாணி ஸமதாமுபேதாநி ஸத்வ ரஜஸ் தமாம்ஸி த்ரவ்யாணி” என்றிறே அவர்களுடைய ஸித்தாந்தம். ஆகையால் ப்ரக்ருதிக்கே கர்த்ருத்வமுள்ளது ஆத்மாவுக்கில்லையெனறபடி. அதாவது கடவல்லியிலே, “ந ஜாயதே ம்ரியதே” இத்யாதியாலே ஆத்மாவுக்கு ஜந்ம மரணாதிகளான ப்ரக்ருதி தர்மங்களையெல்லாம ப்ரதிஷேதித்து, “ஹந்தா சேந் மந்யதே ஹந்தும் ஹதச்சேந் மந்யதே ஹதம் உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே” என்று ஹநநாதி க்ரியைகளில் கர்த்ருத்வத்தையும் நிஷேதிக்கையாலும், ஸ்ரீகீதையிலே ஸர்வேச்வரன் தானே, “நாந்யம் குணேப்ய: கர்த்தாரம் யதா த்ரஷ்டாநு பச்யதி”, “கார்யகாரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதி ருச்யதே புருஷஸ் ஸுகதுக்காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே” என்று சொல்லுகையாலும் இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே ஆத்மாவுக்கு அகத்ருத்வத்தையும் குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே கர்த்ருத்வமுள்ளது ப்ரக்ருதிக்கே; ஆத்மாவுக்கு கர்த்ருத்வமில்லை போக்த்ருத்வ மாத்ரமே உள்ளதென்றாய்த்து அவர்கள் சொல்லுவது.
இங்கு “சிலர்” என்பதன் மூலம் அவர்களுடைய பெயர்களைக் கூட உச்சரிக்கத் தனக்கு விருப்பம் இல்லை என்பதை உணர்த்துகிறார். குணங்கள் மற்றும் ப்ரக்ருதி ஆகிய இரண்டிற்கும் இடையே இவர்கள் வேறுபாடு காண்பதில்லை. எனவே “ப்ரக்ருதிக்கே” என்னும்போது “குணங்களுக்கே” என்று படிக்கிறார். அவர்களுடைய கருத்தானது, “மூலப்ரக்ருதிர் நாம ஸுகதுக்க மோஹாத்மகாநி லாகவ ப்ரகாசசலநோபஷ்டம்பந கௌரவாவரண கார்யாணி, அத்யந்தாதீந்த்ரியாணி, கார்யைக நிரூபண விவேகாநி, அந்யூநாநதிரேகாணி ஸமதாமுபேதாநி ஸத்வ ரஜஸ் தமாம்ஸி த்ரவ்யாணி - மூலப்ரக்ருதி என்பது ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று திரவியங்களைக் கொண்டதாகும்; இவை மூன்றும் சரிசமமான நிலையில் (ஒன்றை ஒன்று விஞ்சாத விதத்தில்) உள்ளன. இவற்றின் இயல்பான தன்மைகள் முறையே ஸுகம், துக்கம் மற்றும் மயக்கம் (மோகம்) என்பதாகும். ஸத்வம் அதிகமாகும்போது ஸுகம் ஏற்படும், சரீரம் எடை குறைவாக இருப்பதாகத் தோன்றும், இந்த்ரியங்கள் நன்கு இயங்கும் (இதனை லாகவ ப்ரகாசங்கள் என்பர்). ரஜஸ் அதிகமாகும்போது துக்கம் ஏற்படும், அசைவு மற்றும் இந்த்ரியங்கள் செயலாற்றுவதும் நிகழும் (சலநம் – சஞ்சலமான இயல்பு கொண்டபடியும், உஷ்டம்பநம் – யாரையேனும் வாக்குவாதத்திற்கு இழுத்தபடியும் இருப்பர்). தமஸ் அதிகமாகும்போது மயக்கம் ஏற்படும், சரீரம் பளுவாக உணரப்படும், இந்தியங்கள் மறைக்கப்படும் (கௌரவம், ஆவரணம்). இப்படிப்பட்ட குணங்களானவை இந்த்ரியங்களால் உணர இயலாதபடி உள்ளதாகும். அவற்றின் கார்யத்தைக் கொண்டே உணரவல்லதாக (அல்லது நிரூபிக்கும்படியாக) இருப்பதாகும். ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்றையும் சமநிலையில் கொண்டதான மூலப்ரக்ருதியானது அசேதனமாக உள்ளபோதிலும், எண்ணற்ற சேதநர்களுடைய இன்பத்திற்கும், மோக்ஷத்திற்கும் உதவுவதாக உள்ளது [ஸ்ரீபாஷ்யம் 2-2-1]” என்பதாகும். எனவே ப்ரக்ருதிக்கே செயாற்றுதல் உள்ளது, ஆத்மாவிற்கு இல்லை என்பது அவர்கள் கருத்து. அதாவது கட. (2-18) - ந ஜாயதே ம்ரியதே - பிறப்புமில்லை இறப்புமில்லை - என்பது போன்றவை மூலம், ஆத்மாவிற்கு பிறப்பு மற்றும் மரணம் என்பது போன்ற உலகியல் தர்மங்களை மறந்து, கட. (2-19) – ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹதஶ்சேத் மந்யதே ஹதம் | உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே – கொல்பவன் “நான் இவனைக் கொல்கிறேன்” என்று எண்ணினாலும், கொல்லப்படுபவன் “நான் கொல்லப்பட்டேன்” என்று எண்ணினாலும், இருவரும் உண்மையை அறியவில்லை; காரணம் அவன் கொல்வதும் இல்லை, இவன் கொல்லப்படவும் இல்லை - என்பதன் மூலம் கொலை போன்ற செயல்களில் ஈடுபடுதல் போன்றவையும் மறுக்கப்படுவதாலும், கீதை (14-49) - நாந்யம் குணேப்ய கர்த்தாரம் யதா த்ரஷ்டாநுபஶ்யதி – குணங்களைக் காட்டிலும் வேறு கர்த்தா இல்லை என்று எப்போது காண்கிறானோ - என்றும், கீதை (3-20) – கார்ய காரண கர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிர் உச்யதே | புருஷ: ஸுகதுக்காநாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே – சரீரத்தின் இந்த்ரியங்கள் செயலாற்றுவதில் ப்ரக்ருதியே காரணம் என்றும், சுகதுக்கங்களை அனுபவிப்பதில் புருஷனே காரணம் என்றும் கூறப்படுகின்றன - என்றும் ஸர்வேச்வரன் தானே உரைப்பதாலும், இவ்விதம் அனைத்து சாஸ்த்ரங்களிலும் “ஆத்மாவிற்கு செயலாற்றும் தன்மை இல்லை, குணங்களுக்கே அந்தத் தன்மை உள்ளது” என்று கூறுவதால், “ப்ரக்ருதிக்கே செயலாற்றும் தன்மை உள்ளதே அல்லாமல் ஆத்மாவிற்கு இல்லை. அனுபவிக்கும் தன்மை மட்டுமே ஆத்மாவிற்கு உள்ளது” என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.