Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 30)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞாநாவஸ்தா விசேஷங்களாகையாலே.

இப்படி ப்ரதிஜ்ஞா மாத்ரத்தால் போராதென்று அதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார், (கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞாநாவஸ்தா விசேஷங்களாகையாலே) என்று.

இவ்விதம் ப்ரதிஜ்ஞையால் மட்டுமே உரைத்தால் போதுமானது அல்ல என்று எண்ணியவராக, காரணத்தையும் அருளிச்செய்கிறார்.

– “ஹேயோபாதேயதாஜ்ஞாநமூலம் ஜ்ஞாத்ருத்வமாத்மந:, தத்தத் ப்ரஹாணோபாதாந சிகீர்ஷாகர்த்ருதாச்ரயா” என்கிறபடியே, ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ஹேயோபாதேய ப்ரதிபத்திக்கு ஹேதுவாயிருக்கும்; அவ்வோ ஹேயங்களை விடுகையிலும், உபாதேயங்களைப் பற்றுகையிலும் உண்டான சிகீர்ஷை கர்த்ருத்வமடியாயிருக்கும்; கர்த்தாவுக்கேயிறே சிகீர்ஷையுள்ளது; அந்த சிகீர்ஷைதான் ஜ்ஞாநாவஸ்தா விசேஷமிறே; அத்தோடு கர்த்ருத்வத்துக்கு உண்டான ப்ரத்யா ஸத்தியைக் கடாக்ஷித்து கர்த்ருத்வத்தை ஜ்ஞாநாவஸ்தா விசேஷமெனறு உபசரித்து அருளிச் செய்கிறார். அல்லது, கர்த்ருத்வமாவது க்ரியாச்ரயத்வமாகையாலே அத்தை, ஜ்ஞாநாவஸ்தா விசேஷமெனறு முக்க்யமாகச் சொல்லப்போகாதிறே. – க்ரியையாவது, “ஜாநாதி, இச்சதி, ப்ரயததே, கரோதி” என்று ஜ்ஞாந சிகீர்ஷா ப்ரயத்நாநந்தர பாவியான ப்ரவருத்தியாகையாலும், ததாச்ரயத்வம் கர்த்ருத்வமாகையாலும் அத்தை ஜ்ஞாநாவஸ்தா விசேஷமென்றது உபசார ப்ரயோகமென்றே கொள்ளவேணும். இனி போக்த்ருத்வமாவது, போகாச்ரயத்வம். போகமாவது ஸுகதுக்க ரூபமானவநுபவ ஜ்ஞாநம். அது ஜ்ஞாநாவஸ்தா விசேஷமிறே; ததாச்ரயத்வத்தை ஜ்ஞாநாவஸ்தா விசேஷமென்று சொல்லுகையாலே இதுவும் ஒளபசாரிகம். இப்படி ஜ்ஞாத்ருத்வத்துக்கும் இவற்றுக்கும் உண்டான ப்ரத்யா ஸத்த்யதிசயத்தாலே ததைக்ய கதநம் பண்ணலாம்படி இருக்கையாலே, ஜ்ஞாத்ருத்வம் சொன்னபோதே கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்லிற்றாய்த்தென்னத் தட்டில்லையிறே.

ஹேய உபாதேயதா ஜ்ஞாந மூலம் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மந:, தத் தத் ப்ரஹாண உபாதாந சிகீர்ஷா கர்த்ருதாச்ரயா – ஆத்மாவின் “ஞானத்துடன் கூடிய தன்மை” என்பது நன்மை மற்றும் தீமை ஆகியவற்றை அறிவதற்கு ஆதாரமாக உள்ளது; அவற்றை விடுதல் மற்றும் கைக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஏற்படும் ஆசை என்பதே செயலாற்றக் காரணமாகிறது - என்று கூறுவதற்கு ஏற்ப, ஆத்மாவின் “அறிபவனாக உள்ள தன்மை” என்பது தாழ்ந்தவை மற்றும் உயர்ந்தவை ஆகியவற்றை விடுதற்கும் ஏற்பதற்குக் காரணமாக உள்ளது. இவ்விதமாக உள்ள “தீயவற்றை விடுதல் மற்றும் நன்மைகளைக் கைப்பற்றுதல்” ஆகியவற்றில் உண்டாகும் ஆசை என்பதே செயல் புரிவதற்குக் காரணமாகிறது. செயலாற்றுகின்ற ஆத்மாவிற்கு அல்லவோ ஆசை உள்ளது? அத்தகைய ஆசையானது ஞானத்தின் ஒரு நிலை அல்லவோ? அதனுடன் செயலாற்றும் தன்மையைச் சேர்த்து “ஞான நிலையின் சிறப்பு” என்று அருளிச்செய்கிறார். அல்லது செயல் புரிதல் என்பது ஒரு செயலை அண்டி நிற்பதால் அதனை “ஞான நிலையின் சிறப்பு” என்று முக்கியமாக உரைக்க இயலாது அல்லவா? க்ரியை என்பது “ஜாநாதி, இச்சதி, ப்ரயததே, கரோதி – அறிகிறான், விரும்புகிறான், முயல்கிறான், செய்கிறான்” என்றுள்ள “ஞானம், ஆசை, முயற்சி மற்றும் ஆகியவற்றைத் தொடர்ந்து ஏற்படும் செயலாற்றுதல்” என்பதாகும்; அது செயலாற்றுதல் என்பதை அண்டி உள்ளதாகும்; ஆகவே அதனை “ஞான நிலையின் சிறப்பு” என்று உரைத்தலானது ஒரு உபசாரத்திற்காகவே ஆகும் என்று கொள்ளவேண்டும். அடுத்து “போக்த்ருத்வம்” என்றால் அனுபவத்திற்கு இருப்பிடமாக உள்ள தன்மை. போகம் என்றால் இன்பம் மற்றும் துன்பங்க்ளுடைய அனுபவம் என்ற வடிவில் உள்ள ஞானம் ஆகும். அது “ஞான நிலையின் சிறப்பு” ஆகும். இப்படியாக “ஞானத்துடன் இருத்தல், செயல் புரிதல், அனுபவித்தல்” ஆகிய மூன்றுக்கும் உள்ளதான ஒன்றுடன் ஒன்று அண்மையாக இருத்தல் என்ற காரணத்தால், இவை அனைத்தும் ஒன்றே ஆகும் என்று கூறும்படியாக உள்ளன; இதனால்தான் “அறியும் தன்மை” என்று கூறியபோதே, செயலாற்றும் தன்மை மற்றும் அனுபவிக்கும் தன்மை ஆகிய இரண்டுமே கூறப்பட்டதாகிறது என்று கருத்து.