Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 28)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
நான் அறிவு என்று சொல்லவேணும், நான் அறியா நின்றேனென்னக் கூடாது.
–”அஹமிதம் ஜாநாமி” என்கிற ப்ரத்யக்ஷத்தாலே அத்தை நிராகரிக்கிறார் (நானறிவு) என்று தொடங்கி.
(கடந்த சூர்ணையில் எழுந்த ஆக்ஷேபத்தை) “அஹம் இதம் ஜாநாமி - நான் இதனை அறிகிறேன்” என்ற ப்ரத்யக்ஷம் மூலம் தள்ளுகிறார்.
– அதாவது, ஆத்மாவுக்கு ஜ்ஞாநாச்ரயத்வமன்றிக்கே கேவலம் ஜ்ஞாநமாயிருக்குமளவே உள்ளதாகில், “நானறிவு” என்று தன்னை ஜ்ஞாநமாத்ரமாகச் சொல்லுகையொழிய, “நான் இத்தை அறியா நின்றேன்” என்று தன்னை ஜ்ஞாதாவாகச் சொல்லக்கூடாது என்கை. “இவ்வர்த்தத்தை நானறியா நின்றேன்” என்கையாலே, விஷயக்ராஹியானதொரு ஜ்ஞாநத்துக்குத் தான் ஆச்ரயம் என்னுமிடம்தோற்றா நின்றதிறே; இப்படி ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ப்ரத்யக்ஷ ஸித்தமாகையாலே அபாதிதமென்று கருத்து. “இதம் அபிவேத்மி இதி ஆத்ம வித்த்யோ: விபேதே ஸ்புரதி யதி தத் ஐக்யம் பாஹ்யம் அபி ஏகம் அஸ்து” என்று பட்டரும் இப்படியிறே பௌத்தமத நிராகரணம பண்ணுகிறவிடத்தில் அருளிச்செய்தது.
ஆத்மாவிற்கு “ஞானத்தின் இருப்பிடம்” என்ற தன்மை இன்றி, “ஞானம் மட்டுமே” என்ற தன்மையே உள்ளது என்றால், “நான் அறிவு” என்று மட்டுமே கூறப்படும் அல்லாமல், “நான் இதனை அறியா நின்றேன்” என்று தன்னை அறிபவனாகவும் கூற இயலாது அல்லவோ? “இந்த அர்த்தத்தை நான் அறியா நின்றேன்” என்று கூறுவதால், விஷயத்தை அறியக்கூடியதான ஒரு ஞானத்திற்கு ஆத்மா இருப்பிடமாக உள்ள தன்மையானது வெளிப்படுகிறது அல்லவோ? இவ்விதம் ஆத்மாவிற்கு “ஞானத்தின் இருப்பிடம்” என்ற தன்மை ப்ரத்யக்ஷமாகப் புலப்படுவதால், இந்தக் கருத்தை வேறு எதனாலும் தள்ள இயலாது. ஸ்ரீரங்கராஜஸ்த்வத்தில் (2-10) - அஹம் இதம் அபிவேத்மி இதி ஆத்ம வித்த்யோ: விபேதே ஸ்புரதி யதி தத் ஐக்யம் பாஹ்யம் அபி ஏகம் அஸ்து - “நான் இதனை அறிந்துகொள்கிறேன்” என்ற சிந்தனையின் மூலமே ஆத்மாவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வேற்றுமை தெளிவாகிறது. இவை இரண்டும் ஒன்றே என வாதம் செய்யும்போது, இவை இரண்டின் மூலம் அறியப்படும் விஷயம் மட்டும் ஏன் விலக்கப்படவேண்டும், மூன்றும் ஒன்றே எனக் கூற வேண்டியதுதானே – என்று ஸ்வாமி பராசரபட்டரும் பௌத்தர்களுடைய கொள்கையை மறுக்கும் இடத்தில் அருளிச்செய்தார்.