Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 26)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஜ்ஞாநாச்ரயமாகையாவது ஜ்ஞாநத்துக்கிருப்பிடமாயிருக்கை.
(ஜ்ஞாநாச்ரயமாகையாவது ஜ்ஞாநத்துக்கு இருப்பிடமாயிருக்கை) ஜ்ஞாநமாவது, ஸ்வஸத்தாமாத்ரத்தாலே ஸ்வாச்ரயத்தைப் பற்றி ஸ்வ பர வ்யவஹாரத்துக்கு உடலாயிருப்பதொரு ஆத்ம தர்மம். இதுக்கு ஆத்மா ஆச்ரயமாகையாவது தீப ப்ரபைகளிரண்டும் தேஜோ த்ரவ்யமாயிருக்கச் செய்தே தீபம் ப்ரபைக்கு ஆச்ரயமாயிருக்கிறாப்போலே, தானும் ஜ்ஞாந ஸ்வரூபனாயிருக்கச் செய்தே ஸ்வதர்மமான ஜ்ஞாநத்துக்குத தன்னையொழிய ப்ருதக் ஸ்தித்யுபலம்பங்கள் இல்லாதபடி தான் ஆதாரமாயிருக்கை. “அத யோ வேதேதம் ஜிக்ராணீதி ஸ ஆத்மா”, “மநஸைவைதாந் காமாந் பச்யந் ரமதே”, “ந பச்யோ ம்ருத்யும் பச்யதி”, “விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத”, “ஜாநாத்யேவாயம் புருஷ”, “ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ச்ரோதா ரஸயிதா க்ராதா மந்தா போத்தா கர்த்தா விஜ்ஞாநாத்மா புருஷ:”, “ஏவமேவாஸ்ய பரித்ரஷ்டு:” இத்யாதி ச்ருதிகளாலே, ஆத்மாவினுடைய ஜ்ஞாதருத்வம் ஸித்தம்.
ஞானம் என்றால் தனது இருப்பு மூலமாகவே தனது இருப்பிடத்தைப் பற்றி நின்று, தன்னைக் குறித்தும் மற்றவற்றைக் குறித்தும் அனைவரும் அறிவதற்கு உபாயமாக உள்ள ஆத்ம தர்மம் ஆகும். இதற்கு ஆத்மா எவ்விதம் இருப்பிடமாக உள்ளது என்றால் - விளக்கு மற்றும் அதனுடைய ஒளி ஆகிய இரண்டுமே ஒளிர்கின்ற பொருள்களாக உள்ளபோதிலும், விளக்கு என்பதே ஒளியின் இருப்பிடமாக உள்ளது; இது போன்று ஆத்மாவாகிய தானும் ஞான ஸ்வரூபமாக உள்ளபோதிலும், தனது தர்மமாக உள்ள ஞானத்திற்கு (இது தர்மபூத ஞானம் ஆகும்), ஆத்மாவாகிய தன்னை விட்டு அகன்று நிற்பதோ அல்லது அறியப்படுவதோ இயலாதவிதத்தில் தானே அதற்கு இருப்பிடமாக உள்ளது. சாந். (8-12-4) – அத யோ வேதேதம் ஜிக்ராணீதி ஸ ஆத்மா - யார் ஒருவன் “நான் இதனை முகர்கிறேன்” என்று உணர்கிறானோ அவனே ஆத்மா – என்றும், சாந். (8-12-5) –மநஸா ஏதாந் காமாந் பச்யந் ரமதே – மனம் கொண்டு அவன் அனைத்து விருப்பங்களையும் – என்றும், சாந். (7-26-2) – ந பச்யோ ம்ருத்யும் பச்யதி – ப்ரஹ்மத்தைக் கண்டவன் ம்ருத்யு எனப்படும் அவித்யையை அடைவதில்லை – என்றும், ப்ரு. (2-4-44) - விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத் – எதன் உதவியால் ஒருவன் அறிபவனை அறிகிறான் – என்றும், சாந். (7-26-2) - ஜாநாத்யேவாயம் புருஷ: – இந்தப் புருஷன் நிச்சயமாக அறிகிறான் – என்றும், ப்ர. (4-9) – ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ச்ரோதா ரஸயிதா க்ராதா மந்தா போத்தா கர்த்தா விஜ்ஞாநாத்மா புருஷ: - அந்தப் புருஷனே காண்பவன், கேட்பவன், சுவைப்பவன், முகர்பவன், சிந்திப்பவன், அறிபவன், செய்பவன், ஞானமயமாக உள்ளவன் ஆவான் – என்றும், ப்ர. (6-5) – ஏஷமேவாஸய பரித்ரஷ்டு: - இப்படியாகப் பார்ப்பவனுக்கே சொந்தமாக உள்ளவையும் – என்றும் உள்ள ச்ருதி வாக்கியங்கள் மூலம் ஆத்மாவின் அறியும் தன்மை கூறப்பட்டது.