Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 25)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் வரும்.
ஏதத் விஷயமாக தூஷணாந்தரமும் அருளிச் செய்கிறார்.
மேலே கூறப்பட்ட கருத்திற்கு எழுகின்ற ஒரு ஆக்ஷேபத்தையும் கூறுகிறார்.
(அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸவரூபத்துக்கு சைதில்யமும் வரும்) என்று. அதாவது, தேஹ பரிமாணம் என்னும் பக்ஷத்தில், ஸம்ஸித்தயோகராய், ஸௌபரியைப் போலே ஏக காலத்திலே அநேக தேஹங்களை பரிக்ரஹிக்குமவர்களுக்கு தங்களுடைய ஸ்வரூபத்தை அநேகமாகச் சிந்நமாக்கிக் கொண்டு அவ்வவ தேஹங்களைப் பரிக்ரஹிக்க வேண்டி வருமென்கை. பரகாய ப்ரவேசமுகேந அநேக சரீரங்களைப் பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு, ஸ்தூலமான சரீரத்தை விட்டு ஸூக்ஷ்மமான சரீரத்தைப் பரிக்ரஹிக்குமளவில், இதுக்கெல்லாமது அவகாசம் போராமையாலே சைதில்யம் வருமென்னவுமாம். “ஏவஞ்சாத்மாகார்த்ஸ்ந்யம்” என்கிற ஸூத்ரத்தில் சொல்லுகிறபடியே, அல்ப மஹத் பரிமாணங்களான கஜ பிபீலிகாத சரீரங்களை ஸ்வகர்மாநுகுணமாகப் பரிக்ரஹிக்குமவர்களுக்கு, கஜ சரீரத்தை விட்டு பிபீலிகா சரீரத்தை பரிக்ரஹிக்குமளவில் கஜ சரீர ஸம பரிமாணமாயிருக்குமந்த ஸ்வரூபத்துக்கு, பிபீலிகா சரீரம் அவகாசம் போராமையாலே சைதில்யம் வருமென்று இங்ஙனே இவ்வாக்கியத்துக்கு யோஜித்தாலோவென்னில், (யோகிகள் ஸ்வரூபத்துக்கு) என்கையாலே, அது இவ்விடத்தில் இவர்க்கு விவக்ஷிதமன்று.
சரீரத்தின் அளவே ஆத்மா உள்ளது என்பதை ஏற்றால், சிறந்த யோக ஸித்தர்களான ஸௌபரி போன்றவர்கள் ஒரே நேரத்தில் பல சரீரங்களை எடுத்துக் கொள்ளுதல் என்னும்போது, தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து, அந்தந்த சரீரங்களில் புகும்படியாகச் செய்யவேண்டும் என்றாகிறது. மேலும் “கூடு விட்டு கூடு பாய்தல்” என்பது மூலம் பல சரீரங்களை எடுக்கவல்ல யோகிகளுடைய ஆத்மஸ்வரூபத்திற்கு, ஸ்தூலமான சரீரத்தை விடுத்து ஸூக்ஷ்மமான சரீரத்தை எடுக்கும்போது, அதற்கான இடம் இல்லை என்பதால் ஆத்மா உடையும் நிலை ஏற்படும். ப்ரம்ஹஸூத்ரம் (2-2-32) - ஏவம் ச ஆத்மா அகார்த்ஸ்ந்யம் - ஆத்மாவிற்கு நிறைவு இன்மை ஏற்படுவதால் - என்பதற்கு ஏற்ப, சிறியதும் பெரியதும் ஆகிய யானை மற்றும் எறும்பு போன்ற சரீரங்களைத் தங்களுடைய கர்மவினை காரணமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, யானையின் சரீரத்தை விட்டு எறும்பின் சரீரத்தில் புகுவதற்கு முயலும்போது, யானையின் சரீரம் அளவிற்கு உள்ள ஆத்ம ஸ்வரூபத்தால், எறும்பின் சரீரத்தில் புகுவதற்கு இடம் இருக்காது என்பதால், ஆத்மா உடையும் நிலை ஏற்படும்; இவ்விதம் இந்த இடத்தில் பொருள் கொள்ளலாம் அல்லவோ? அதற்கு விடை அளிக்கிறார்; இத்தகைய கருத்து இந்த இடத்தில் இவரால் சிந்திக்கப்படவில்லை (அதாவது வேறுவிதமான சிந்தனை உள்ளது) என்கிறார்.