Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 24)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

அது ச்ருதி விருத்தம்.

அத்தை நிராகரிக்கிறார்.

கடந்த சூர்ணையில் கூறப்பட்ட கருத்தை மறுக்கிறார்.

(அது ச்ருதி விருத்தம்) என்று. இவ்விடத்தில் இவர்க்கு விவக்ஷிதையான ச்ருதியேதென்னில்; “அம்ருதாக்ஷரம் ஹர:” என்று, ஆத்மாவினுடைய நிர்விகாரத்வ ப்ரதிபாதிகையான ச்ருதியாகவேணும்; “தேஹ பரிமாணன் என்கிற பக்ஷம், ஆத்மா நிர்விகாரன் என்கிற ச்ருதியாலே பாதிதம்” என்று இவர் தாமே தத்வசேகரத்திலே அருளிச்செயகையாலே. “ஏஷோணுராத்மா”, “வாலாக்ரசத பாகஸ்ய” இத்யாதி ச்ருதிகளும், தேஹ பரிமாண பக்ஷத்துக்கு பாதிகைகளாகையாலே அவற்றையும் இவ்விடத்திலே சொல்லுவாருமுண்டு.

கடந்த சூர்ணையில் கூறப்பட்ட கருத்தானது ச்ருதிகளுக்கு முரணானது ஆகும் என்கிறார். இவ்விதம் இவர் உரைப்பதற்கு ஆதாரமான ச்ருதி எது என்றால், அம்ருதாக்ஷரம் ஹர: - ஆத்மா மரணம் அற்றவன், மாறுபாடு அற்றவன் – என்று ஆத்மாவின் மாறுபாடு அற்ற தன்மை வெளிப்படுத்துகின்ற ச்ருதியாகவே இருக்க வேண்டும். “ஆத்மா சரீரத்தின் அளவு கொண்டவன் என்ற கருத்தானது, ஆத்மா மாற்றம் அடையாதவன் என்ற ச்ருதியால் தள்ளப்படும்”, என்று இவரே தத்வசேகரத்தில் அருளிச்செய்தார். மேலும், ஏஷோணுராத்மா - இந்த ஆத்மா அணு அளவே உள்ளவன் – என்றும், வாலாக்ரசத பாகஸ்ய – நெல்லின் நுனியை நூறுபாகமாக வெட்டினால் வரும் ஒரு பாகத்தின் அளவு கொண்டவன் - என்றும் உள்ள ச்ருதி வாக்கியங்களையும் இந்த இடத்தில் சிலர் கூறுவார்கள்.