Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 23)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஆர்ஹதர் ஆத்மாவை தேஹபரிமாணன் என்றார்கள்.
இப்படி, நிர்விகாரமான ஆத்மவஸ்துவுக்கு பரிணாமித்வம் கொள்ளுகிற ஆர்ஹதமதம் அயுக்தமென்னுமிடத்தை தர்சிப்பிக்கிறார் மேல்.
இப்படியாக எந்தவிதமான மாற்றங்களையும் அடையாத ஆத்மாவிற்கு அளவைக் கூறுகின்ற ஜைனமதமானது யுக்திக்கு ஏற்றது அல்ல என்கிறார்.
ஆர்ஹதராகிறார் ஜைநந். அவர்கள் “பாதே மே வேதநா” இத்யாதி ப்ரகாரேண ஆபாதசூடம் தேஹத்திலுண்டான துக்காத்யநுபவம், ஆத்மா தேஹ பரிமாணனல்லாதபோது கூடாது; ஆகையால், ஆத்மா ஸ்வகர்மாநுகுணமாகப் பரிக்ரஹிக்கும் கஜ பிபீலிகாதி சரீரங்களுக்கு அநுகூலமாகப் பரிணமித்து, தத் தத் தேஹ பரிமாணனாயிருக்குமென்றிறே சொல்லுவது. அத்தை அருளிச் செய்கிறார் (தேஹ பரிமாணனென்றார்கள்) என்று.
ஆர்ஹதர் என்பது ஜைனர்களைக் குறிப்பதாகும். “அவர்கள், பாதே மே வேதநா - எனது கால்கள் வேதனை அளிக்கிறது - என்பது போன்றவற்றால் கால்கள் தொடக்கமாக சரீரத்தில் ஏற்படும் அனைத்து துன்ப அனுபவங்களும், ஆத்மாவானது சரீரத்தின் அளவு கொண்டவனக இல்லையென்றால் ஏற்படாது. ஆகவே ஆத்மாவானது தனது கர்மங்களுக்கு ஏற்ப எடுக்கின்ற யானை, எறும்பு முதலான சரீரங்களுடைய அளவுக்கு ஏற்றதான அளவை எடுத்து, அவற்றுக்குள் புகுந்து, அந்தந்த சரீரங்களுக்கு ஏற்றபடியான அளவுடன் இருக்கும்” என்கிறார்கள். இதனையே இங்கு கூறினார்.