Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 22)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
இப்படியிருக்கையாலே சஸ்த்ரம், அக்னி, ஜலம், வாதம், ஆதபம் தொடக்கமானவற்றால் சேதித்தல், தஹித்தல், நனைத்தல், சோஷிப்பித்தல் செய்கைக்கு அயோக்யமாயிருக்கும்.
– ஏவம் ப்ரகாரமாகையாலே, ச்சேத்யாதி விஸஜாதீயமாயிருக்கும் என்கிறார் மேல், (இப்படி) என்று தொடங்கி.
இப்படியாக ஆத்மா உள்ளதால், ஆத்மாவானது மாறுபாடுகள் அடையத்தக்க வஸ்துக்களைக் காட்டிலும் வேறுபட்டதாக இருப்பதாகும் என்கிறார்.
– “இப்படி” என்று அவ்யக்தத்வாதிகள் நாலையும் அநுபாஷிக்கிறதாதல், நிர்விகாரத்வமாத்ரத்தையாதல். (சஸ்த்ரம், அக்நி) இத்யாதி. அதாவது சஸ்தராக்ந்யாதிகள் ச்சேதந தஹநாதிகளைப் பண்ணும்போது தத் தத் வஸ்துக்களிலே வ்யாபித்துச் செய்ய வேண்டுகையாலும், ஆத்மா ஸர்வாசித் தத்வ வ்யாபகனாகையாலே, அவற்றிற்காட்டில் அத்யந்த ஸூக்ஷ்மபூதனாகையாலும்; வ்யாப்யமாய் ஸ்தூலமாயிருக்கிற இவை வ்யாபகமாய் ஸூக்ஷ்மமான ஆத்ம வஸ்துவை வ்யாபித்து விகரிப்பிக்க மாட்டாமையாலே, சஸ்த்ராக்நி ஜல வாதாதபாதிகளாலே வரும் ச்சேதந தஹந க்லேதந சோஷணங்களுக்கு அநந்ஹமாயிருக்குமென்கை. “நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: | ந சைநம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத:”, “அச்சேத்ய: அயமதாஹய: அயம் அக்லேதய: அசோஷ்ய ஏவ ச | நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசலோயம் ஸநாதந:” என்று அருளிச் செய்தானிறே.
“இப்படி” என்று அவ்யக்தம், அசிந்த்யம், நிரவயவம், நிர்விகாரம் ஆகிய நான்கையும் விளக்குகிறார். அம்பு, அக்னி போன்றவை அந்தந்த பொருள்களை அழிக்கும்போது, அந்தந்த பொருள்களில் புகுவதால் மட்டுமே அழியும்படியாகச் செய்ய இயலும். ஆத்மா அனைத்து அசித் வஸ்துகளில் புகுந்தபடி உள்ளதால் அவற்றைக் காட்டிலும் மிகுந்த ஸூக்ஷ்மமாக உள்ளவன் ஆவான். அம்புகள், அக்னி, நீர், காற்று போன்றவை ஆத்மாவால் நிரப்பப்பட்டதாலும், ஸ்தூலமாக உள்ளதாலும், இவை தங்களுக்குள் பரவி உள்ள ஸூக்ஷ்மமான ஆத்மாவை உட்புகுந்து மாற்றம் அடையச் செய்ய இயலாது; ஆகவே அவற்றால் ஏற்படுகின்ற வெட்டுதல், எரித்தல், நனைத்தல், உலர்த்தல் போன்றவற்றுக்கு ஆத்மா ஏற்றவன் அல்லன். இதனைக் கீதையில் (2-23) – நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: | ந சைநம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத: - இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை, அக்னி எரிப்பதில்லை, தண்ணீர் நனைப்பதில்லை, காற்று உலர வைப்பதில்லை – என்றும், கீதை (2-24) - அச்சேத்ய: அயமதாஹய: அயம் அக்லேதய: அசோஷ்ய ஏவ ச | நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசலோயம் ஸநாதந: - இந்த ஆத்மா வெட்டப்பட இயலாதவன், எரிக்கப்பட இயலாதவன், நனைக்கப்பட இயலாதவன், உலர்த்தப்பட இயலாதவன், நித்யமானவன், எங்கும் நிறைந்துள்ளவன், நிலையாக உள்ளவன், சாச்வதமானவன் - என்றும் கூறினான் அல்லவோ?