Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 19)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

அசிந்த்யமாகையாவது, அசித்தோடு ஸஜாதீயமென்று நினைக்கவொண்ணாதிருக்கை.

– “யத: சேத்யாதி விஸஜாதீயஸ் தத ஏவ ஸர்வ வஸ்து விஸஜாதீயத்வேந  தத் தத் ஸ்வபாவ யுக்ததயா சிந்தயிதுமபி நார்ஹ:” என்றிறே இதுக்கும் பாஷ்யகாரர் அருளிச் செய்தது. ஆகையாலே இவரும் இப்படி அருளிச் செய்கிறார். இங்ஙனன்றிக்கே, அசிந்த்யத்வமாவது ஒருபடியாலும் சிந்திக்கைக்கு யோக்யமன்றிக்கே இருக்கையென்னில்; ஆத்ம ஸ்வரூப விஷயமான ச்ரவண மநநாதிகளுக்கு வையர்த்யம் ப்ரஸங்கிக்குமிறே. ஆகையால், அசித் ஸஜாதீய புத்த்யநர்ஹத்வமே அசிந்த்ய சப்தார்த்தமாகக் கடவது. ஆக, “அவ்யக்தோயமசிந்த்யோயம்” என்று கீதோபநிஷதாசார்யன் அருளிச் செய்தபடியே, இவரும் ஆத்மஸ்வரூப வைலக்ஷண்ய ப்ரகடநார்த்தமாக இவ்விடத்திலே அருளிச் செய்தாராயிற்று.

கீதா பாஷ்யத்தில் (2-25) – யத: சேத்யாதி விஸஜாதீயஸ் தத ஏவ ஸர்வ வஸ்து விஸஜாதீயத்வேந  தத் தத் ஸ்வபாவ யுக்ததயா சிந்தயிதுமபி நார்ஹ: - எந்த ஒரு காரணத்தால் வெட்டுவதற்கு ஏற்றதாக உள்ள வாள் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளதோ, அந்தக் காரணத்தால் ஆத்மாவானது மற்ற பொருள்களைப் போன்ற தன்மை கொண்டது அல்ல; ஆகவே அந்தப் பொருள்களுடைய இயல்பான தன்மையுடன் ஆத்மா சேர்ந்துள்ளதாக எண்ண இயலாது - என்று பாஷ்யகாரர் அருளிச்செய்தார். இதனைப் போன்றே இவரும் அருளிச்செய்கிறார். இவ்விதம் கொள்ளாமல், “அசிந்த்யம்” என்பதற்கு “எந்தவிதத்தாலும் ஆத்மாவை சிந்திக்க இயலாது” என்று பொருள் உரைத்தால், ஆத்மா விஷயமாகக் கேட்பது மற்றும் மனனம் செய்வது போன்றவற்றை உரைக்கும் வேதாந்த வாக்கியங்கள் அனைத்தும் வீணாகும் அல்லவோ? ஆகவே, “ஆத்மாவை அசித் வஸ்துக்களுக்குச் சமமாக எண்ணக்கூடாது”, என்பதே “அசிந்த்யம்” என்பதாகும். எனவே கீதை (2-25) - அவ்யக்தோயமசிந்த்யோயம் – காண இயலாதவன், அசித்திற்கு சமமாக எண்ண இயலாதவன் - என்று கீதாசார்யன் அருளிச்செய்தபடியே, ஆத்ம ஸ்வரூபத்தின் மேன்மையை இவர் அருளிச்செய்தார்.