Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 18)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

அவ்யக்தமாகையாவது, கட பட ரதிகளை க்ரஹிக்கிற சக்ஷராதிகளால் தோற்றாதிருக்கை.

– “சேதநாதி யோக்யாநி கடபடாதீநி வஸ்தூநி யை: ப்ரமாணைர் வ்யஜ்யந்தே, தைரயமாத்மா ந வ்யஜ்யத இத்யவ்யக்த” என்றிறே பாஷ்யகாரரும் அருளிச் செயதது. அப்படியே இவரும் அருளிச்செய்கிறார். இங்ஙனன்றிக்கே, ஒரு ப்ரமாணத்தாலும் தோற்றாதிருக்கை என்னில், துச்சத்வம் வருமிறே. ஆகையால், மாநஸஜ்ஞாந கம்யமித்தனையல்லது ஐந்த்ரியக ஜ்ஞாந கம்யமன்றென்கை அவ்யக்த சப்தார்த்தம், “சென்று சென்று பரம்பரமாய்” என்று தொடங்கி ஆத்மஸ்வரூப வைலக்ஷண்யத்தை அருளிச் செய்கிற ஆழ்வாரும், “ஞானம் கடந்ததே” என்று, ஐந்த்ரிய ஜ்ஞாந அகோசரத்வத்தையிறே அருளிச் செய்தது.

கீதாபாஷ்யத்தில் (2-25) – சேதநாதி யோக்யாநி கடபடாதீநி வஸ்தூநி யை: ப்ரமாணைர் வ்யஜ்யந்தே, தைரயமாத்மா ந வ்யஜ்யத இத்யவ்யக்த – அழிந்து போதல் முதலானவைகளுக்கு ஏற்றதாக உள்ள குடம், துணி போன்றவை எந்த கண் முதலான இந்த்ரியங்களால் அறியப்படுகின்றனவோ, அந்த இந்த்ரியங்களால் ஆத்மா காணப்படாமல் உள்ளதால், அது அவ்யக்தம் எனப்படுகிறது - என்று பாஷ்யகாரர் அருளிச்செய்தார். அது போன்றே இங்கு இவரும் அருளிச்செய்கிறார். இவ்விதம் சொள்ளாமல், “எந்த ஒரு ப்ரமாணத்தாலும் ஆத்மா அறியப்படாமல் உள்ளது” என்று கூறினால் சூந்யம் என்ற தன்மை ஏற்டுகிறது. ஆகவே ஆத்மாவை மனம் மூலம் அறியலாம் அல்லாமல் இந்த்ரியங்களால் அறிய இயலாது என்று கருத்து. “சென்று சென்று பரம்பரமாய்” என்பதாகத் தொடங்கி ஆத்மஸ்வரூபத்தின் மேன்மையை அருளிச்செய்த ஆழ்வார், “ஞானம் கடந்ததே” என்பதாக “ஆத்மாவானது இந்த்ரிய ஞானத்திற்கும் அப்பாற்பட்டது” என்றார் அல்லவோ?