Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 12)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
எப்போதுமுண்டாகில் ஜந்ம மரணங்களுண்டாகிறபடி யென்னென்னில்; ஜந்மமாவது – தேஹ ஸம்பந்தம்; மரணமாவது – தேஹ வியோகம்.
– ஏதத் விரோதி சங்கையை யநுவதித்துப் பரிஹரிக்கிறார் “எப்போதுமுண் டாகில்” என்று தொடங்கி.
“ஆத்மா நித்யமானது” என்ற ஞானத்திற்கு விரோதியாக உள்ள சந்தேகத்தைத் தானே எழும்பிக் கொண்டு, அதற்கான விடையை அருளிச்செய்கிறார்.
– அதாவது ஆத்மா ஸர்வகால வர்த்தியாயிருக்குமாகில் “ப்ரஜாபதி: ப்ரஜா அஸ்ருஜத”, “ஸந்மூலாஸ் ஸோம்யேமாஸ் ஸர்வா: ப்ரஜா:”, “யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே”, “யத: ப்ரஸூதா ஜகத: ப்ரஸூதீ தோயேந ஜீவாந் வ்யஸஸர்ஜ பூம்யாம்” இத்யாதி ச்ருதி வாக்யங்களால் ஆத்மாவுக்குச் சொல்லப்படுகிற ஜந்ம மரணங்களுண்டாகிறபடி யென்னென்னில், அவற்றிற் சொல்லுகிற ஜந்மமாவது தேஹ ஸமபந்தம், மரணமாவது தேஹ வியோகமென்கை. நித்யனாகில் ஸ்ருஷ்டிக்கு முன்பு ஏகத்வாவதாரணம் கூடாதென்னில், ஏகத்வமாவது நாமரூப விபாகாபாவமாகையாலே கூடும். ஸம்ஹார தசையில ஆத்மாவில்லையாகில, ஈச்வரனுக்கு உபாதாந்தவங்கூடாது, அக்ருதாபயாகமக்ருத விப்ரணாசங்களும் வரும், ஆகையால் ஆத்ம நித்யத்வம் கொள்ளவேணும். “ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்”, “ஜ்ஞாஜ்ஞௌ த்வாவஜாவீசநீசௌ”, “நித்யோ நித்யாநாம்”, “ப்ரக்ருதிம் புருஷம்சைவ வித்யநாதீ உபாவபி”, “ந ஜாயதே ம்ரியதேவா கதாசிந்நாயம் பூத்வா பவிதா வா ந பூய:, அஜோ நித்யச் சாச்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே சரீரே” என்று ஆத்ம நித்யத்வ ப்ரதிபாதகங்களான ச்ருதி ஸ்ம்ருதிகள் அநேகங்களிறே.
“ஆத்மா அனைத்து காலங்களிலும் உள்ளதாகும்” என்று கூறியதால், ப்ரஜாபதி: ப்ரஜா அஸ்ருஜத - நான்முகன் உயிர்களைப் படைத்தான் - என்றும், ஸந்மூலாஸ் ஸோம்யேமாஸ் ஸர்வா: ப்ரஜா: - அனைத்தும் ஸத் என்ற ப்ரஹ்மத்தையே காரணமாகக் கொண்டவை ஆகும் – என்றும், யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே - அனைத்தும் எதனிடமிருந்து உற்பத்தி ஆனதோ – என்றும், யத: ப்ரஸூதா ஜகத: ப்ரஸூதீ தோயேந ஜீவாந் வ்யஸஸர்ஜ பூம்யாம் – ப்ரக்ருதியானது எந்த ப்ரஹ்மத்திடமிருந்து தோன்றியதோ, அத்தகைய ப்ரஹ்மமானது நீர் முதலாவற்றுடன் ஆத்மாவையும் படைத்தது – என்றும் உள்ள ச்ருதி வாக்கியங்கள் முலம், ஆத்மாவிற்கு உரைக்கப்படும் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவை எப்படி ஏற்கப்படும் என்ற சந்தேகம் எழலாம். இதற்கு விடை அளிக்கிறார். அவற்றில் கூறப்படும் பிறப்பு என்பது சரீரத்துடன் ஆத்மாவிற்கு ஏற்படும் ஸம்பந்தம், இறப்பு என்பது சரீரத்தை விட்டுப் பிரிதல் என்பது ஆகும். ஆனால் “ஆத்மா எப்போதும் உள்ளதாகும்”, என்று கூறினால், “ஸ்ருஷ்டிக்கு முன்பு ப்ரஹ்மம் மட்டுமே இருந்தது” என்று கூறுவது பொருந்தாது அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார். “ஒன்றாகவே இருந்தது” என்றால் அனைத்து ஒரு ப்ரஹ்மமாக, பெயர் மற்றும் ரூபம் என்ற வேறுபாடுகள் இன்றி உள்ளதால் பொருந்தும். ப்ரளய காலத்தில் ஆத்மா இல்லையென்றால், ஈச்வரனுக்கு உபாதானக்காரணமாக உள்ள நிலையானது பொருந்தாது; மேலும் காரணம் இன்றி கர்மபயன்கள் எற்படுகின்றன என்ற தோஷமும் ஏற்படும். எனவே ஆத்மாக்கள் நித்யமே ஆகும் என்றே கொள்ளவேண்டும். கட. (2-18) – ந ஜாயதே ந ம்ரியதே வா விபச்சித் - அவன் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை – என்றும், ச்வே. (1-19) - ஜ்ஞா ஜ்ஞௌ த்வா அஜௌ ஈச அநீசௌ - அறிந்தவன், அறியாதவன் என்று இரண்டு பிறப்பற்றவர்கள் ஈசன், அநீசன் என்று கூறப்படுகிறார்கள் – என்றும், ச்வே. (6-13) - நித்யோ நித்யாநாம் - நித்யர்களுக்குள் நித்யனாக உள்ளவனும் – என்றும், கீதை (13-19) - ப்ரக்ருதிம் புருஷம் ச ஏவ வித்த்யநாதீ உபாவபி - ப்ரக்ருதி, புருஷன் என்ற ஜீவாத்மா ஆகிய இரண்டும் எப்போதும் சேர்ந்தே எல்லையற்ற காலமாக உள்ளன – என்றும், கீதை (2-20) - ந ஜாயதே ம்ரியதேவா கதாசிந்நாயம் பூத்வா பவிதா வா ந பூய:, அஜோ நித்யச் சாச்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே சரீரே – ஆத்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை; முன்பு உண்டாகி பின்பு இல்லை என்பதும் இல்லை; ஆத்மா பிறப்பற்றவன்; நித்யமானவன்; அனைத்து காலங்களிலும் உள்ளவன்; பழமையானவன்; சரீரம் கொல்லப்பட்டாலும் ஆத்மா கொல்லப்படாதவன் - என்றும் உள்ள பல ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்கள், ஆத்மாவின் நித்யமாக உள்ள தன்மையை வெளிப்படுத்துகின்றன.