Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 10)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
உணர்ந்தவன் ஸுகமாக உறங்கினேனென்கையாலே.
இப்படி ஆத்மஸ்வரூபம் ஸுகரூபமாயிருக்குமென்னுமிதில் ஸுப்த ப்ரபுத்த ப்ரத்யபிஜ்ஞையை ப்ரமாணமாக வருளிச்செய்கிறார் “உணர்ந்தவன்” என்று தொடங்கி.
இவ்விதம் ஆத்ம ஸ்வரூபமானது ஸுகரூபமாக உள்ளது என்பதற்கு, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்த ஒருவன் தனக்கு முன்பு இருந்த நிலையின் ஞாபகம் குறித்து உரைப்பதை ப்ரமாணம் காண்பிக்கிறார்.
– “ஸுகமாக வுறங்கினேனென்கிற ப்ரத்யபிஜ்ஞைதானே இதில் ப்ரமாணம்” என்றிறே தத்வசேகரத்திலும் இவரருளிச் செய்தது. ஸுஷுப்தி தசையில பராகர்த்தாநுபவமில்லாமையாலும், ப்ரத்யகர்த்த ஸ்புரணமுண்டாகையாலும் ஸுப்தோத் திதனாலே பராம்ருஷ்டமான ஸுகம் ஸ்வரூப ஸுகமாக வேணுமிறே. “இப்போது ஸுகம் பிறக்கும்படி யுறங்கினேன்” என்றன்றோ “ஸுகமாக வுறங்கினேன்” என்கிற விதுக்குப் பொருள் என்னவொண்ணாது. ப்ரதிபத்தி சரீரம் அப்படியன்றிக்கே “இனிதாகப் பாடினேன்” என்கிறாப் போலேயிருக்கையாலே. இது தன்னை பாஷ்யத்திலே “ஏவம் ஹி ஸுப்தோத்திதஸ்ய பராமர்ஶ:, “ஸுகம் அஹம் அஸ்வாப்ஸம்” இதி । அநேந ப்ரத்யவமர்ஶேந ததாநீம் அபி அஹம் அர்தஸ்ய ஏவ ஆத்மந: ஸுகித்வம் ஜ்ஞாத்ருத்வம் ச ஜ்ஞாயதே । ந ச வாச்யம் யதேதாநீம் ஸுகம் பவதி ததா ததாநீம் அஸ்வாப்யம் இத்யேஷா ப்ரதிபத்தி: இதி அதத்ரூபத்வாத் ப்ரதிபத்தே:” என்று பாஷ்யகாரரருளிச் செய்தார். ஸ்வரூபமநுகூலமன்றாகில், ப்ரேமாஸ்பதத்வம் கூடாது. “ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேநம்” இத்யாதிகளாலும் இவ்வர்த்தம் ஸித்தம். “ஆர்த்ரம் ஜ்வலதி”, “நிர்வாணமய ஏவாயமாத்மா”, “ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா”, “ஜஞாநாநந்தைக லக்ஷணம்” இத்யாதி ச்ருதி ஸ்ம்ருதிகளாலும் ஆத்மாவினுடைய ஆநந்தரூபத்வம் ஸுஸ்பஷ்டம். ஆக கீழ் ப்ரக்ருதே: பரத்வம் சொல்லுகையாலே, தேஹாத்ம வாதம் நிரஸதமாய்த்து; அஜடத்வாநந்த ரூபத்வங்களைச சொல்லுகையாலே ஜடாத்ம வாதம் நிரஸ்தமாய்த்து.
தத்வசேசரம் என்ற க்ரந்தத்தில், “ஸுகமாக உறங்கினேனென்கிற ப்ரத்யபிஜ்ஞைதானே இதில் ப்ரமாணம்” என்று இவரே அருளிச்செய்தார். ஆழ்ந்த உறக்கத்தின்போது ஆத்மாவிற்கு வெளிவஸ்துக்கள் குறித்த அனுபவம் இல்லை என்பதாலும், தன்னைத்தானே உணர்ந்தபடி உள்ள நிலை உள்ளது என்பதாலும், விழித்து எழுந்த ஒருவனுக்கு, சரீரத்தைக் காட்டிலும் வேறாக நின்று அனுபவித்த சுகம் என்பது, ஆத்மாவின் சுகமாகவே இருத்தல் வேண்டும் அல்லவோ? “விழித்து எழுந்த பின்னர் சுகம் கிட்டும்படியாக நான் உறங்கினேன்” என்பதை “சுகமாக உறங்கினேன்” என்பதற்கு பொருளாக உரைக்கக் கூடாது. முன்பு நடந்த நிகழ்வைக் கூறும்போது சரீரம் தொடர்ந்தபடி உள்ளதன் காரணமாக, “நான் இனிதாகப் பாடினேன்” என்று கடந்த காலமாகக் கூறுவது போன்றே உறக்க விஷயத்திலும் கூறவேண்டும். ஸ்ரீபாஷ்யத்தில்- ஏவம் ஹி ஸுப்தோத்திதஸ்ய பராமர்ஶ:, “ஸுகம் அஹம் அஸ்வாப்ஸம்” இதி । அநேந ப்ரத்யவமர்ஶேந ததாநீம் அபி அஹம் அர்தஸ்ய ஏவ ஆத்மந: ஸுகித்வம் ஜ்ஞாத்ருத்வம் ச ஜ்ஞாயதே । ந ச வாச்யம் யதேதாநீம் ஸுகம் பவதி ததா ததாநீம் அஸ்வாப்யம் இத்யேஷா ப்ரதிபத்தி: இதி அதத்ரூபத்வாத் ப்ரதிபத்தே: - உறக்கத்திலிருந்து எழுகின்ற எந்த ஒருவனும், ““அஹம் = நான்” என்பதிலிருந்து விலகி உள்ளதும், மற்ற அனைத்திற்கும் எதிர்த்தட்டாக உள்ளதும் ஆகிய ஞானமாகிய நான், அஜ்ஞானத்திற்குச் சாட்சியாக இருந்தேன்”, என்று கூறுவதில்லை; மாறாக, “நான் சுகமாக உறங்கினேன்” என்று அல்லவோ உறக்கத்திலிருந்து எழுந்த ஒருவனின் நினைவுகள் உள்ளன - என்று அல்லவோ ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்தார். ஆத்மஸ்வரூபம் ஏற்புடையதாக இல்லை என்றால் அதில் நமக்குப் பற்றுதல் ஏற்படவும் செய்யாது. கீதை (2-29) – ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேநம் - உயர்ந்தவன் மட்டுமே இந்த ஆத்மாவை வியப்புடன் காண்கிறான் - என்பது போன்ற வாக்கியங்களாலும் இந்தக் கருத்து வெளிப்படுகிறது. தை. - ஆர்த்ரம் ஜ்வலதி - ப்ராசித்தபடி உள்ளது - என்றும், நிர்வாணமய ஏவாயமாத்மா - ஆனந்தமயமானவன் – என்றும், ஜ்ஞாந ஆநந்தமய: ஆத்மா - ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ரூபமாக கொண்டவன் - என்றும் உள்ள ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகளால் ஆத்மாவின் ஆனந்தரூபமானது புலப்படுகிறது. எனவே “சரீரத்தைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டது” என்று கூறியுள்ளதால், சரீரமே ஆத்மா என்ற வாதம் தள்ளப்பட்டது. ஆத்மாவிற்கு ஜடமற்ற தன்மை மற்றும் ஆனந்தம் ஆகியவற்றைக் கூறுவதால், ஆத்மா ஜடமானது என்ற வாதம் மறுக்கப்பட்டது.