Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 8)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

அஜடமாகையாவது ஜ்ஞாநத்தையொழியவும் தானே தோற்றுகை.

அஜடத்வமாவது-அந்நயாதீந ப்ரகாசத்வம், ஸ்வயம்ப்ரகாசத்வ மென்றபடி. ஸ்வயம்ப்ரகாசத்வமாகையாவது, தீபம் தீபாந்தர நிரபேக்ஷமாக ஸ்வவ்யவஹாரத்துக்கு ஹேதுவாகிறவோபாதி ப்ரகாசாந்தர நிரபேக்ஷமாக ஸ்வவ்யவஹாரத்துக்கு ஹேதுவாகை. அத்தையருளிச் செய்கிறார் “ஜ்ஞாநத்தையொழியவும் தானே தோற்றுகை” என்று. “ஹ்ருத்யந்தர் ஜ்யோதி: புருஷ:”, “அத்ராயம் புருஷஸ் ஸ்வயம் ஜ்யோதிர் பவதி”, “விஜ்ஞாநகந:”, “ஆத்மா ஜ்ஞாநமய:”, “தச்ச ஜ்ஞாநமயம் வ்யாபி ஸ்வஸம்வேத்ய மநூபமம்”, “ஆத்ம ஸம்வேதயம் தத் ஜ்ஞாநம்” என்னக்கடவதிறே.

அஜடமாக உள்ள தன்மை என்றால், மற்றவற்றின் உதவி இன்றி தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை ஆகும். இதனை ஸ்வயம்ப்ரகாசம் எனலாம். ஆத்மாவின் ஸ்வயம்ப்ரகாசம் என்றால்: ஒரு தீபமானது தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு வேறு ஒரு தீபத்தை எதிர்பாராமல் இருந்தபடி தானாகவே தன்னை வெளிப்படுத்துவது போன்று, ஆத்மாவும் தனது இருப்பை வெளிப்படுத்த வேறு எதனையும் எதிர்பாராமல் தானாகவே தன்னை வெளிப்படுத்தவல்லதாகும். இதனையே “ஜ்ஞாநத்தையொழியவும் தானே தோற்றுகை” என்று அருளிச்செய்கிறார். ப்ரு. (6-3-7) ஹ்ருத்யந்தர் ஜ்யோதி: புருஷ: - இதயத்தில் ப்ரகாசித்தபடி உள்ள ஆத்மா - என்றும், ப்ரு. (6 3-9) – அத்ராயம் புருஷஸ் ஸ்வயம் ஜ்யோதிர் பவதி – இங்கு ஆத்மா தானாகவே வெளிப்படுகிறான் - என்றும், ப்ரு. (4-4-12) – விஜ்ஞாநகந: - ஞானமே வடிவமாக உள்ளவன் - என்றும், ஸ்ரீவிபு. (6-7-32) – ஆத்மா ஜ்ஞாநமய: - ஆத்மா ஞானமயமாக உள்ளான் – என்றும், ஸ்ரீவிபு. (1-22-42) - தச்ச ஜ்ஞாநமயம் வ்யாபி ஸ்வஸம்வேத்ய மநூபமம் – அந்த ஆத்மா ஞானமயமாக உள்ளான், அனைத்து இடத்திலும் நிறைந்துள்ளான், தானே தன்னை அறிகிறான், தனக்கு ஒப்புமை இல்லாதவன் – என்றும், ஆத்ம ஸம்வேதயம் தத் ஜ்ஞாநம் - ஆத்மாவைக் குறித்து தானாகவே அறியப்படுகிறது - என்றும் உள்ள வாக்கியங்கள் காண்க.