Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 6)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

தேஹாதிகள் “என்னுடைய தேஹாதிகள்” என்று ஆத்மாவில் வேறுபட்டுத்  தோற்றுகையாலும், “இதம்” என்று தோற்றுகையாலும் ஆத்மா நானென்று தோற்றுகையாலும், இவை ஒருக்கால் தோற்றி ஒருக்கால் தோற்றாமையாலும், ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும், இவை பலவாகையாலும், ஆத்மா ஒருவனாகையாலும் ஆத்மா இவற்றில் விலக்ஷணனென்று கொள்ளவேணும்.

இப்படி தனித்தனியே எடுத்துக் கழிக்குமளவில் க்ரந்த விஸ்தரமாமென்று மந்தமதிகளுக்கும் ப்ரதிபத்தி யோக்யமாம்படி தேஹாதிகளை ஸமுச்சித்யோபாதாநம் பண்ணி, அவற்றிற்காட்டில் ஆத்மாவுக்குண்டான வைலக்ஷண்யத்தைச் சில யுக்தி விசேஷங்களாலே ஸுக்ரஹமாக அருளிச்செய்கிறார் (தேஹாதிகள்) என்று தொடங்கி.

இவ்விதம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்து, “இது ஆத்மா அல்ல” என்று தள்ளியபடி இருந்தால், இந்த நூலானது அளவில் மிகவும் பெரிதாகிவிடும் என்று எண்ணினார். ஆகவே குறைந்த அறிவு கொண்டவர்களும் கூட இத்தகைய அசித் தத்வங்களைத் தங்களுடைய நினைவில் வைத்துக் கொள்ளும்விதமாக, சரீரம் முதலானவற்றை ஒன்றாகத் திரட்டி எடுத்துக்கொண்டு, அவற்றைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உள்ள மேன்மையை ஒரு சில யுக்தி விசேஷங்கள் மூலம் மிகவும் தெளிவாக அருளிச்செய்கிறார்.

(தேஹாதிகள் “என்னுடைய தேஹாதிகள்” என்று ஆத்மாவில் வேறுபட்டுத் தோற்றுகையாலும், “இதம்” என்று தோற்றுகையாலும், ஆத்மா நானென்று தோற்றுகையாலும்) அதாவது தேஹாதிகளானவை என்னுடைய தேஹம், என்னுடைய இந்த்ரியம், என்னுடைய மநஸ்ஸு, என்னுடைய ப்ராணன், என்னுடைய புத்தி என்று மமதா புத்திக்கும் மமதா வ்யவஹாரத்துக்கும் விஷயமாய்க் கொண்டு, அஹமர்த்தபூதனான ஆத்மாவுக்கு அந்யமாய்த் தோற்றுகையாலும்; அப்படியே, “இது தேஹம், இது இந்த்ரியம்” என்று இதம் புத்தி வ்யவஹார விஷயமாய்க் கொண்டு அஹமர்த்த வ்யதிரிக்தமாய்த் தோற்றுகையாலும்; அங்ஙனன்றிக்கே ஆத்மா அஹமர்த்த பூதனாய்க் கொண்டு தோற்றுகையாலும் என்றபடி. (இவை ஒருக்கால் தோற்றி ஒருக்கால் தோற்றாமையாலும், ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்) “இவை” என்று தேஹேந்த்ரியாதிகளைப் பராமர்சிக்கிறது. தேஹம் ஒருக்கால் தோற்றி ஒருக்கால் தோற்றாமையாவது, ஜாக்ரத் தசையில் “ஸ்த்தூலோஹம், க்ருசோஹம்” இத்யாதிகளாலே, அஹம் புத்தி வ்யவஹார விஷயமாய்க் கொண்டு ஆத்மத்வேந தோற்றியிருந்ததேயாகிலும், ஸுஷுப்தி தசையில் அப்படி தோற்றாதிருக்கை. ஆத்மா எப்போதும் தோற்றுகையாவது, “உறங்குவதுக்கு முனபு இவையெல்லாம அறிந்திருந்த நான் உறங்குகிறபோது என்னுடம்புமுட்பட அறிந்திலேன்” என்று ப்ரத்யபிஜ்ஞை பண்ணுகையாலே, உபயாவஸ்த்தையிலும் தேஹாதந்யனாயிருப்பானொரு ஆத்மா உண்டென்று தோற்றுகை. அதவா, ஜநம மரண பாக்த்வத்தாலே தேஹம் ஒருக்கால் தோற்றி ஒருக்கால் தோற்றாமையாலும், “நான் ஜந்மாந்தரத்தில் பண்ணினவதினுடைய பலமிது” என்கிற லோக வ்யவஹாரத்தாலே, ஆத்மா ஜநம மரணாதி ரஹிதனாய்க் கொண்டு எப்போதும் தோற்றுகையாலும் என்னவுமாம். அப்படியே, சக்ஷராதி ரூபேண தோற்றியிருக்கிற இந்த்ரியங்கள், அந்தபதிராத்யவஸ்த்தைகளில் தோற்றாமையாலும்; ஸங்கல்பாதி ஹேதுத்வேந தோற்றியிருக்கிற மநஸ்ஸு, ஒரு காலவிசேஷங்களிலே மூடமாய்க் கொண்டு ஒன்றும் தோற்றாமையாலும்; உச்ச்வாஸ நிச்சவாஸாதிகளாலே தோற்றியிருக்கிற ப்ராணன்கள் ஓரோ மோஹ தசைகளிலே நெற்றியைக் கொற்றிப் பார்க்க வேண்டும்படி தோற்றாமையாலும்; விஷய க்ரஹண வேளையில் ப்ரகாசிக்கிற ஜ்ஞாநம் விஷய க்ரஹணாபாவ தசையில் தோற்றாமையாலும்; இப்படியன்றிக்கே, “நான் கண்ணும் செவியும் முன்பு விளங்கியிருந்தேன், இப்போது அந்தனும் பதிரனுமானேன்; முன்பு என்னுடைய மநஸ்ஸு விசதமாயிருககும், இப்போதொன்றும் தெரிகிறதில்லை; நானப்போது நிஷ்ப்ராணனாய்க் கிடந்தேன், இப்போது ஸப்ராணனானேன்; எனக்கப்போது ஜ்ஞாநமுண்டாயிருந்தது, இப்போது நசித்தது” என்று இவை தோற்றினபோதோடு தோற்றாதபோதோடு வாசியற ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும், இவை பலவாகையாலும், ஆத்மா ஒருவனாகையாலும் மீண்டும் இவையென்று தேஹாதிகளைப் பராமர்சிக்கிறது. தேஹத்துக்குப் பன்மை அநேகாவயவ ஸங்காதாத்மகமாகையாலே, இந்த்ரியங்களுக்குப் பன்மை சக்ஷுச்ச்ரோத்ராதி வ்யக்தி பேதத்தாலே. மநஸ்ஸுக்குப் பன்மை மநோ புத்தி சித்தாஹங்காரரூபமான பேதத்தாலே. ப்ராணனுக்குப் பன்மை, ப்ராணாபாநாதி பேதத்தாலே. புத்திக்குப் பன்மை, கட ஜ்ஞாந பட ஜ்ஞாநாதி பேதத்தாலே. இப்படி, தேஹாதிகளோரொன்றே பலவாகையரலும், இங்ஙனன்றிக்கே அஹம் புத்தி வ்யவஹாரார்ஹனான ஆத்மா ஒருவனாகையாலும் ஆத்மா இவற்றில் விலக்ஷணனென்று கொள்ளவேணும். அதாவது இப்படி தேஹாதி ப்ரகாரத்தையும், ஆத்மாவினுடைய ப்ரகாரத்தையும் நிரூபித்தால் ஆத்மா தேஹாதிகளானவற்றில் வேறுபட்டிருப்பா னொருவனென்று அவச்யமங்கீகரிக்க வேணுமென்கை.

(தேஹாதிகள் “என்னுடைய தேஹாதிகள்” என்று ஆத்மாவில் வேறுபட்டுத் தோற்றுகையாலும், “இதம்” என்று தோற்றுகையாலும், ஆத்மா நானென்று தோற்றுகையாலும்) - சரீரம் போன்றவைகள், “என்னுடைய சரீரம், என்னுடைய இந்த்ரியம், என்னுடைய மனம், என்னுடைய ப்ராணன், என்னுடைய புத்தி” என்று “நான், என்னுடையது” என்பதான சிந்தனைகளுக்கு அடிப்படியாக இருப்பதால், “அஹம் - நான்” என்று சொல்லக்கூடியதான ஆத்மாவைக் காட்டிலும் வேறாக வெளிப்படுவதாலும்; அது போன்றே “இது சரீரம், இது இந்த்ரியம்” என்று உரைக்கும் கூற்றுகளில், “இது” என்பறு உரைப்பதன் மூலம் சிந்தனைக்கும் அடிப்படையாக உள்ள காரணத்தால், “நான்” என்பதைக் காட்டிலும் வேறாகப் புலப்படுவதாலும்; அவ்விதம் அல்லாமல் ஆத்மாவை “நான்” என்று உரைப்பதற்கு ஏற்றபடியாகக் கொண்டு புலப்படுவதாலும். (இவை ஒருக்கால் தோற்றி ஒருக்கால் தோற்றாமையாலும், ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்) – “இவை” என்பதன் மூலம் சரீரம் மற்றும் இந்த்ரியங்களைக் கூறுகிறார். சரீரம் “ஒரு சில நேரம் புலப்பட்டு, ஒரு சில நேரம் புலப்படாமல் இருத்தல்” என்பது என்னவென்றால், விழிப்பு நிலையில் உள்ளபோது “ஸ்தூலோஹம் க்ருசோஹம் – நான் பருத்தவன், நான் மெலிந்தவன்” என்பது போன்றதாக, “நான்” என்று உரைப்பதற்குக் காரணமாக உள்ள ஆத்மாவுடன் சேர்ந்து சரீரமும் புலப்பட்டபடி உள்ளது; ஆனால் உறங்கும்போது அவ்விதம் புலப்படாமல் உள்ளது. “ஆத்மா எப்போதும் புலப்பட்டபடி உள்ளது” என்றால், “உறங்கும் முன்பாக இவை அனைத்தையும் அறிந்தபடி உள்ள நான், உறங்கும்போது சரீரம் உட்பட எதனையும் அறியவில்லை”, என்று ஞாபகப்படுத்தி உரைப்பதால், விழிப்பு மற்றும் உறக்கம் ஆகிய இரண்டு நிலைகளிலும் சரீரத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா என்று ஒருவன் உள்ளதாகப் புலப்படுதல் ஆகும். அல்லது பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய தருணங்களில் சரீரம் ஒரு சில நேரம் புலப்பட்டு, ஒரு சில நேரம் புலப்படாமல் உள்ளது; “நான் முந்தைய பிறவிகளில் செய்தவற்றின் பலன் இது” என்று இந்த உலகில் உள்ளவர்கள் கூறுவதால், பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவை அற்றவனாகிய ஆத்மா எப்போதும் புலப்பட்டபடியே உள்ளது என்றும் கூறலாம். இதனைப் போன்றே, கண் முதலான இந்த்ரியங்களானவை குருடன் மற்றும் செவிடன் என்னும் நிலைகளில் வெளிப்படாமல் இருத்தல்; ஸங்கல்பம் போன்றவற்றுக்கு ஆதாரமாக உள்ள மனமானது, மயக்கம் போன்ற நிலையில் வெளிப்படாமல் உள்ளது; மூச்சை உள்ளிழுத்தல் மற்றும் விடுதல் என்பதான செயல்களில் வெளிப்பட்டபடி உள்ள ப்ராணனானது, ஒரு சில மயக்க நிலைகளில், சரீரத்தில் ப்ராணன் உள்ளது என்று நெற்றியைத் தட்டிப் பாந்த்து அறியவேண்டும்படியாக உள்ளது; ஒரு பொருளை அறியும்போது வெளிப்படும் ஞானமானது, பொருள்களை அறியாமல் உள்ளபோது வெளிப்படாமல் உள்ளது. இவற்றை வேறுவிதமாகவும் உரைக்கலாம். “நான் முன்பு கண்களும் காதுகளும் நன்கு இயங்கும்படி இருந்தேன், இப்போது குருடனும் செவிடனும் என்றானேன். நான் முன்பு ப்ராணன் அடங்கிக் கிடந்தேன், இப்போது ப்ராணனுடன் உள்ளேன். எனக்கு அப்போது ஞானம் இருந்தது, இப்போது எனது ஞானம் அழிந்தது”, என்பது போன்ற விஷயங்கள் தோன்றும்போதும் தோன்றாதபோதும், ஆத்மா எந்தவிதமான வேறுபாடும் இன்றி புலப்பட்டபடியே உள்ளது; இவை பலவாக உள்ளபோதிலும் ஆத்மா ஒருவனே என்பதால், மீண்டும் “இவை” என்பதன் மூலம் சரீரம் முதலானவையே கூறப்பட்டதாகிறது. சரீரத்திற்குப் பன்மை என்பது பல அவயவங்களுடன் சேர்ந்துள்ள தன்மையால் ஆகும். இந்த்ரியங்களுக்குப் பன்மையாவது கண், காது என்ற பல வேறுபாடுகளால் ஆகும். மனதிற்குப் பன்மையாவது மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹங்காரம் என்பது போன்ற வேறுபாடுகளால் ஆகும். ப்ராணனுக்குப் பன்மையாவது ப்ராணன், அபாநன் முதலிய பேதங்களால் ஆகும். புத்திக்குப் பன்மையாவது “இது குடம், இது துணி” என்பது போன்ற வேறுபாடுகளை அறிவதால் ஆகும். இப்படியாகச் சரீரம் முதலானவை ஒவ்வொன்றே பலவாகப் புலப்படுவதாலும், இவை போன்றல்லாமல் “நான்” என்று அறியத்தக்கவனாகிய ஆத்மா ஒருவனே என்பதாலும், ஆத்மா இவற்றைக் காட்டிலும் வேறுபட்டவன் என்று அறியவேண்டும். அதாவது, சரீரம் முதலானவற்றின் தன்மைகள் மற்றும் ஆத்மாவின் தன்மைகள் ஆகியவற்றை நிரூபித்தால், ஆத்மாவானது சரீரம் முதலானவற்றைக் காட்டிலும் வேறுபட்டது என்பதை அவசியம் அறியவேண்டும் என்று கருத்து.