Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 5)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஆத்ம ஸ்வரூபம் தேஹாதி விலக்ஷணமானபடியென்? என்னில்;
உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்று மூன்று வகைப்பட்டிறே தத்வ நிர்ணய க்ரமமிருப்பது; அதில் “சித்துமசித்துமீச்வரனும்” என்று தத்வ த்ரயத்தையு முத்தேசித்து, உத்தேச க்ரமத்திலே அவற்றினுடைய ஸ்வரூப சோதநம் பண்ணுவதாக நினைத்து, ப்ரதமத்திலே சிச்சப்தோத்திஷ்டனான ஆத்மாவினுடைய ஸ்வரூப சோதநம் பண்ணுவதாக உபக்ரமித்து “தேஹேந்த்ரியமந: ப்ராண புத்தி விலக்ஷணமாய்” என்று தொடங்கி “சேஷமாயிருக்கும்” என்னுமளவாக ஸ்வரூப லக்ஷணத்தை அருளிச்செய்தார். அத்தைப் பரீக்ஷிக்கிறார் மேல். அதில் ப்ரதமத்திலே ஆத்ம ஸ்வரூபத்தினுடைய தேஹாதி வைலக்ஷண்யத்தை சோதிப்பதாக தஜ்ஜிஜ்ஞாஸுக்களுடைய ப்ரச்நத்தை அநுபாஷிக்கிறார்; (ஆத்மஸ்வரூபம் தேஹாதி விலக்ஷணமானபடியென்? என்னில்) என்று.
ஒரு பெயர் மூலம் ஒரு பொருளை உணர்த்தல், இலக்கணம் மூலம் உணர்த்துதல், சோதித்துப் பார்த்து உணர்த்துதல் என மூன்று வகையாக தத்வமானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அவற்றில், “சித், அசித், ஈச்வரன்” என்றுள்ள மூன்று தத்வங்களையும் பெயர் கொண்டு உணர்த்தி, அதே வரிசையில் அவற்றின் ஸ்வரூபம் இன்னது என்று உரைப்பதற்காக, முதலில் சித் என்ற சொல் மூலம் கூறப்படும் ஆத்மாவின் ஸ்வரூபத்தை உரைக்கத் திருவுள்ளம் பற்றினார். ஆகவே கடந்த சூர்ணையில், “தேஹேந்த்ரியமந: ப்ராண புத்தி விலக்ஷணமாய்” என்று தொடங்கி, “சேஷமாய் இருக்கும்” என்று முடித்து, ஆத்மாவின் ஸ்வரூப இலக்கணத்தை உரைத்தார். அதனை மேலும் விரிவாக ஆராய்கிறார். அவற்றில் முதலில் ஆத்மாவின் தன்மையானது சரீரம் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளதை ஆராய்வது என்று திருவுள்ளம் பற்றி, அதனை அறிவதற்கான ஆர்வத்துடன் உள்ளவர்களுக்கு எழக்கூடிய கேள்வியைத் தானே எழுப்புகிறார்.
இது தன்னை தத்வசேகரத்தில் இவர் தாமே விஸ்தரேண அருளிச்செய்தார். “தேஹம் அநேகாவயவ ஸங்காதாத்மக மென்னுமிடம் ஸித்தம்; அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதந்யமுண்டாகில், அநேக சேதநோபலப்தி ப்ரஸங்கிக்கும். அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமமும், அவற்றில் மமதா புத்தியும் மமதா வ்யவஹாரமும் கூடாது. ஓரவயவத்துக்கே சைதந்யங்கொள்ளில், அது விச்சிந்நமானால் அவயவாந்தரம் அது அநுபவித்தத்தை ஸ்மரிக்கக்கூடாது. பின்பு, அஹம் புத்தி வ்யவஹாரங்களும் மமதாபுத்தி வ்யவஹாரங்களும் தவிரவேணும்; ஸர்வ சரீர வ்யாபியான ஸுக துக்காநுபவமும் கூடாது. அவயவ ஸங்காதாத்மகமன்று சரீரம்; அவயவி. அதிலே சைதந்யமென்னவுமொண்ணாது, உபலம்ப அநுபபத்திகள் இல்லாமையாலே அவயவி ஸ்வீகாரம் அநுபபந்நமாகையாலே. “கிஞ்ச, பால தேஹோஹம் மந்த ஜ்ஞாந:, யுவ தேஹோஹம் பஹு ஜ்ஞாந:, மம சரீரம்” என்று, சரீராஹமர்த்தங்களில் பிறக்கிற பேத ப்ரதிபத்தியும், பேத வ்யவஹாரமும் கூடாது; “மமாயமாத்மா” என்கிறவிடத்திற்போலே அமுக்க்யம் என்னவொண்ணாது; முக்க்யே பாதமில்லாமையாலே. அன்றிக்கே, அஹம் புத்திக்கு சரீரம் விஷயமென்று கொண்டாலும், ச்ருதியாலும் ச்ருத்யர்த்தாபத்திகளாலும் தேஹாதிரிக்தனாய, தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா ஸித்தன். பாஹ்யேந்த்ரியங்களும் ஆத்மாவாகமாட்டாது; ஒருவனே ஸர்வேந்த்ரிய விஷயங்களையும் அறிகையால். இப்படிக் கொள்ளாதபோது “யாவனொருவன் நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன்; அந்த நானே ஸ்பர்சியா நின்றேன்” என்கிற ப்ரதிஸந்தாநமும் கூடாது. சக்ஷஸ்ஸே ஆத்மாவாகில், அந்தன் ரூபத்தை ஸ்மரியாதொழிய வேணும். ச்ரோத்ரமே ஆத்மாவாகில், பதிரன் சப்தத்தை ஸ்மரியாதொழிய வேணும். இப்படி மற்றை இந்திரியங்களிலும் கண்டு கொள்வது. அந்த:கரணமும் ஆத்மாவாகமாட்டாது, ஸ்மர்த்தாவினுடைய ஸ்மரணாதி கார்யங்களுக்கு கரணமாக கல்பிதமாகையாலே; இது தானே ஸ்மரிக்கிறது என்னவொண்ணாது; ஸ்மரணத்துக்குக் கரணமில்லாமையாலே. கரணமுமிது தானே என்னவொண்ணாது, விருத்தமாகையாலே வேறேயொன்று கரணமென்னில்; அது பாஹ்யகரணமாகில், அதில்லாதவனுக்கு ஸ்ம்ருதி கூடாது; ஆந்தர கரணமாகில் ஆத்மாவுக்கு மநஸ்ஸென்று பேரிட்டதாய்விடும். ஆந்தர கரணம் அபேக்ஷிதமாகில் இந்த்ரியார்த்த ஸம்பந்தமுண்டான போதெல்லாம ஜ்ஞாநம் பிறக்க வேணும். ஆகையால், மநஸ்ஸும் ஆத்மாவாக மாட்டாது. ப்ராணங்களும் ஆத்மாவாகமாட்டாது; ஸங்காத ரூபங்களாகையாலே, தேஹம் ஆத்மாவென்கிற பக்ஷத்துக்குச் சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம். ஜ்ஞாநமும் ஆத்மாவாகமாட்டாது; “எனக்கு ஜ்ஞாநம் பிறந்தது, நசித்தது” என்று க்ஷணிகமுமாய், ஆத்மதர்மமுமாய்த் தோற்றுகையாலே ஸ்த்திரனாயிருப்பானோராத்மா உண்டென்னு மிடம் “நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன்” என்கிற ப்ரத்யபிஜ்ஞையாலே ஸித்தம்" என்று இப்படி விஸ்தரேண அருளிச்செய்தாரிறே.
இதனை ஸ்வாமி பிள்ளை லோகாசார்யார், தன்னுடைய தத்வசேகரம் என்ற நூலில் விரிவாக அருளிச்செய்தார். அது என்னவென்றால் : சரீரமானது பலவிதமான உறுப்புக்களுடைய கூட்டம் என்பது அறிந்ததே. அதில் உள்ள அனைத்து உறுப்புக்களுக்கும் ஞானம் உண்டு என்று கூறினால், பல சேதநங்கள் ஒரே உடலில் உள்ளன என்றாகிவிடும். அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் விவாதம் ஏற்படும். அவற்றில், “நான், என்னுடையது” என்ற சிந்தனை ஏற்படும். ஏதேனும் ஒரு உறுப்புக்கு மட்டும் ஞானம் உள்ளது என்று கூறினால், அந்த உறுப்பு பாதிக்கப்பட்டால், மற்ற உறுப்புக்கள் அதனை எண்ணுவதை விளக்க இயலாது. மேலும் “நான், எனது” என்ற சிந்தனை ஏற்படக்கூடாது. சரீரத்தில் அனைத்து இடங்களிலும் பரவி நிற்பதான சுகம் மற்றும் துக்கம் ஆகிய அனுபவங்களும் ஏற்படாது. மேலும் உறுப்புக்களின் கூட்டம் என்பது சரீரம் அல்ல, உறுப்புக்களைக் கொண்டது மற்றும் அதில் ஞானம் உள்ளது என்று கூறுவதும் சரியல்ல. உறுப்புக்களைக் காட்டிலும் வேறானதாக உள்ளதும், அந்த உறுப்புகளைக் கொண்டதும் ஆகிய வஸ்துவிற்கு ஞானம் உள்ளதாகக் கூறுதல் கூடாது. இது பொருந்தாது. கிஞ்ச, பால தேஹோஹம் மந்த ஜ்ஞாந:, யுவ தேஹோஹம் பஹு ஜ்ஞாந:, மம சரீரம் - நான் குழந்தைச் சரீரம் கொண்டவன், எனக்கு ஞானம் குறைவாக உள்ளது; நான் வாலிபன் என்பதால் ஞானம் பலவாக உள்ளது; இது எனது சரீரம் – என்பது போன்று “சரீரம், நான்” என்பதில் ஏற்படுகின்ற பேத புத்தியும் கூடாது. மமாயமாத்மா - இது எனது ஆத்மா - என்றுள்ள இடத்தைப் போன்று அமுக்யமானது என்றும் எண்ணக்கூடாது; முக்கியம் என்று கொண்டால் பாதிப்பு ஏற்படாது என்னும் காரணத்தால் ஆகும். அல்லது அஹம் என்ற சிந்தனைக்குச் சரீரம் என்று கொண்டாலும், பொருந்தாது. ஏனென்றால் ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி மூலம் ஏற்படுகின்ற புத்தி ஆகியவற்றின் மூலமாக “சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டவன் உள்ளான். வேறு வேறு சரீரத்தை எடுக்கவல்ல ஒருவன் உள்ளான்”, என்று ஆத்மாவைக் குறித்து உரைப்பதால் ஆகும். வெளி இந்த்ரியங்களும் ஆத்மா அல்ல, காரணம் ஒருவன் மட்டுமே அந்த அனைத்து இந்த்ரியங்களுடைய விஷயங்களை அறிவதால் ஆகும். இதனை ஏற்கவில்லை என்றால், “நான் இந்தப் பொருளைக் கண்டேன். நான் அதனைத் தொடுகிறேன்”, என்று ஒருவன் உரைப்பதாகக் கூறுவது பொருந்தாது. கண் என்பதே ஆத்மா என்றால், கண் தெரியாதவன் உருவத்தை எண்ணாமல் இருத்தல்வேண்டும்; காது என்பதே ஆத்மா என்றால், காது கேட்காதவன் ஓசையை எண்ணாமல் இருத்தல்வேண்டும். இது போன்றே மற்ற இந்த்ரியங்களுக்கும் பொருந்தும். அடுத்து அந்தகரணமும் ஆத்மா அல்ல; காரணம் எண்ணும் ஒருவனுடைய சிந்தனைகளுக்குக் கருவியாக அந்தகரணத்தை ஏற்பதால் ஆகும். இந்த மனம் என்பது தானாகவே எண்ணமுடியாது; அது முரணாகிறது. ஆனால் எண்ணுவதற்கு வேறு இந்த்ரியம் இல்லை என்பதால், இந்த மனத்தையே கருவி என்று கூறமுடியாது; ஏனென்றால் முரண்பாடு ஏற்படும். சிந்தனை என்பது ஒரு வெளி இந்த்ரியந்த்தின் செயல்பாடு என்றால், அது இல்லை என்றால் ஞாபகம் கைகூடாது. அது உள்ளே இருக்கும் இந்த்ரியம் என்றால், ஆத்மாவிற்கு மனம் என்ற பெயர் வைத்ததாகிவிடும். உள் இந்த்ரியம் வேண்டும் என்றால், புலன்கள் மூலம் ஸம்பந்தம் ஏற்படும்போதெல்லாம் ஞானம் ஏற்படவேண்டும். எனவே மனம் என்பது ஆத்மா அல்ல. ப்ராணன்களும் ஆத்மா அல்ல. அவை பலவாக உள்ளதால், “சரீரம் என்பதே ஆத்மா” என்று கூறும்போது ஏற்பட்ட முரண்பாடுகள் அனைத்தும் இங்கும் பொருந்தும். ஞானம் என்பதும் ஆத்மா அலல்; காரணம் “எனக்கு ஞானம் ஏற்பட்டது. எனக்கு ஞானம் அழிந்தது” என்பதாக ஞானமானது க்ஷணிகமாகவும், ஆத்மாவின் பண்பாகவும் உள்ளதால் ஆகும். ஆத்மா நிலையானது என்பது, “நேற்று கண்ட நானே இன்றும் காண்கிறேன்” என்று ஞாபகம் ஏற்படுவதால் ஆகும். இவ்விதமாக ஆத்மா குறித்து தத்வசேகரத்தில் விரிவாக அருளிச்செய்தார்.