Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 4)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஆத்மஸவரூபம் “சென்று சென்று பரம்பரமாய்" என்கிறபடியே தேஹேந்த்ரிய மந: ப்ராண புத்தி விலக்ஷணமாய், அஜடமாய், ஆநந்தருபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யகதமாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞாநாச்ரயமாய், ஈச்வரனுக்கு நியாமயமாய் தார்யமாய் சேஷமாயிருக்கும்.
இனி, இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபமிருக்கும்படி எங்ஙனே? என்கிற சங்கையிலே, ஆத்ம ஸ்வரூப லக்ஷணத்தை அருளிச்செய்கிறார் “ஆத்ம ஸ்வருபம் சென்று சென்று பரம்பரமாய்” என்று தொடங்கி.
அடுத்து, “இவ்விதமாக உள்ள ஆத்மாவின் ஸ்வரூபம் எவ்விதம் உள்ளது?”, என்ற சந்தேகம் எழலாம். இதனை நீக்கும்விதமாக, ஆத்மாவின் இலக்கணத்தை அருளிச்செய்கிறார்.
ச்ருதி ஸ்ம்ருத்யாதிகளிலே ஒன்றைச சொல்லலாயிருக்க, இப்போது ஆழ்வாரருளிச் செய்த சந்தையை எடுத்தது, தத்வ ப்ரதிபாதகங்களான ச்ருத்யாதிகளிலும் காட்டில் தத்வதர்களில் ப்ரதாநரான ஆழ்வாருடைய வசநமே தத்வ நிர்ணயத்துக்கு முக்க்ய ப்ரமாணமென்று தோற்றுகைக்காக. “விதயச்ச வைதிகாஸ் த்வதீயகம்யீர மநோநுஸாரிண:” என்றிறே பரமாசார்யருமருளிச் செய்தது. ஸ்வரூபமாவது ஸ்வம்மான ரூபம், அதாவது அஸாதாரணாகாரம். “சென்று சென்று பரம்பரமாய்” என்றது போய்ப்போய் ஒன்றுக்கொன்று மேலாயிருக்கிற அந்தமய ப்ராணமய மநோமயங்களுக்கு அவ்வருகாய் என்றபடி. “தேஹேந்த்ரிய மந: ப்ராண புத்தி விலக்ஷணமாய்” என்கிற இடத்தில், புத்தி சப்தத்தால், மஹதநுக்ருஹீதமான அந்த:கரணத்தைச் சொல்லுகிறதோ? ஜ்ஞாநத்தைச் சொல்லுகிறதோ? என்னில்; இவருக்கு இங்கு விவக்ஷிதம் ஜ்ஞாநமாக வேணும்; தத்வசேகரத்தில் தேஹாதி வைலக்ஷண்யமருளிச் செய்கிறவிடத்தில் அப்படியருளிச் செய்கையாலே; “தேஹேந்த்ரிய மந: ப்ராண தீப்யோந்ய:” என்றிறே ஆளவந்தாரும் அருளிச் செய்தது.
ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து ஆத்ம ஸ்வரூபம் இன்னது என்று ப்ரமாணம் கூறாமல், ஆழ்வார் அருளிச்செய்ததான “சென்று சென்று பரம்பரமாய்” என்பதை இங்கு ஏன் எடுத்தார்? ஏனென்றால், தத்வத்தை வெளிப்படுத்தக் கூடிய ச்ருதி முதலானவற்றைக் காட்டிலும், அத்தகைய தத்துவத்தை நேரடியாக அறிந்தவர்களில் முதன்மையாக உள்ளவராகிய ஆழ்வாருடைய சொற்களே தத்வத்தை நிர்ணயம் செய்வதற்கான முக்கியமான ப்ரமாணமாக இருக்கமுடியும் என்று வெளிப்படுத்தவே இவ்விதம் செய்கிறார். ஸ்தோத்ரரத்னத்தில் (20) - விதயச்ச வைதிகாஸ் த்வதீயகம்யீர மநோநுஸாரிண: – வேத விதிகள் கூட உனது அடியார்கள் செலுத்தியபடி உள்ள கம்பீரமான திருவுள்ளத்தைப் பின்பற்றி அல்லவோ செல்கின்றன - என்று உயர்ந்த ஆசார்யராகிய ஸ்வாமி ஆளவந்தார் அருளிச்செய்தார். ஸ்வரூபம் என்றால் தன்மை, அதாவது ஆத்மாவிற்கே உரிய ரூபம். “சென்று சென்று பரம்பரமாய்” என்றால், ஒன்றுக்கொன்று மேலாக உள்ளதான அன்னமயம், ப்ராணமயம், மநோமயம் ஆகியவற்றைக் காட்டிலும் வேறாக உள்ள ஆத்மா என்று கருத்து. சூர்ணையின் உள்ள “தேஹேந்த்ரிய மந: ப்ராண புத்தி விலக்ஷணமாய்” என்ற இடத்தில், “புத்தி” என்பதன் மூலம் “மஹாந்” என்று தத்வத்தால் நிலைநாட்டப்படும் அந்தகரணம் கூறப்படுகிறதா அல்லது ஞானம் கூறப்படுகிறதா என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அளிக்கிறார். இங்கு ஞானம் என்பதே இவருடைய திருவுள்ளமாக இருத்தல் வேண்டும்; ஏனென்றால் தத்வசேகரம் என்று நூலில், சரீரம் முதலானவற்றுக்கு உள்ள வேறுபாட்டை அருளிச்செய்யும்போது இவ்விதமே உரைத்தார் மேலும் ஆத்மஸித்தியில் - தேஹேந்த்ரிய மந: ப்ராண தீப்யோந்ய: – சரீரம், இந்த்ரியம், மனம், ப்ராணன், ஞானம் ஆகியவற்றைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டது – என்று ஆளவந்தார் அருளிச்செய்தார்.