Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 3)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

சித்தென்கிறது - ஆத்மாவை.

– உத்தேச க்ரமத்திலே, தத்வத்ரயத்தினுடையவும் ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை உபபாதிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, ப்ரதமம் சித் தத்வத்தை உபபாதிக்க உபக்ரமிக்கிறார், “சித்தென்கிறது ஆத்மாவை” என்று.

இவற்றைக் குறித்து வரிசையாக விளக்கும்விதமாக, இந்த மூன்று தத்வங்களுடைய இயல்பு மற்றும் தன்மைகளுடைய சிறப்புகளை வெளியிடத் திருவுள்ளம் கொண்டவர், அவற்றில் முதலில் சித் தத்வத்தை விளக்கும் பொருட்டுத் தொடங்குகிறார்.

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரும், ஆச்சான் பிள்ளையும் முதலான ஆசார்யர்கள தத்வத்ரயமருளிச் செய்கிறவிடத்தில், அசிதுபக்ரமமாக அருளிச் செய்தார்கள். இவர் சிதுபக்ரமமாக அருளிச்செய்தார். இதுக்குக் கருத்து, அசித் தத்வம் ஹேயதயா ஜ்ஞாதவ்யமாகையாலும், ஈச்வரன் உபாதேயதயா ஜ்ஞாதவ்யனாகையாலும், இப்படி இரண்டு தத்வத்தையும் அறிகைக்கு அதிகாரியான சேதநனுடைய ஸ்வரூபந் தன்னை முதலிலே அறிந்து கொள்ள வேணுமிறேயென்று. அவர்கள் தானப்படியருளிச் செய்வானென்? என்னில்; ஆத்மாவினுடைய ப்ரக்ருதே: பரத்வ ஜ்ஞாநம் ப்ரக்ருதியை அறியாதபோது கூடாமையாலே, முந்துற ப்ரக்ருதி தத்வத்தையறிந்து, அநந்தரம் தத்வ்யதிரிக்தனாய் ததந்தர்வர்த்தியான ஆத்மாவை அறிந்து, அநந்தரம் ஆத்மாவுக்கு அந்தர்யாமியாய் சரீரத்துககு ஆத்மாவைப் போலே உபயத்துக்கும் அபிமாநியாயிருக்கிற பரமாத்மாவினுடைய ஸ்வரூபத்தை அறிகை புத்த்யாரோஹ க்ரமமாகையாலே அருளிச்செய்தார்கள். அசிதுபக்ரமமாகச் சொல்லுகிறவிது, “அந்நமயம்” தொடங்கி, “ஆநந்தமய”னளவும் ஆரோஹித்த ச்ருதி மர்யாதைக்குச் சேரும். சிதுபக்ரமமாகச் சொல்லுகிறவிது, “போக்தா போக்யம் ப்ரேரிதாரம்” இத்யாதி ச்ருதிக்குச் சேரும்; ஆகையால் இரண்டு க்ரமமும் வேதாந்த ஸித்தம். “சிதசிதீச்வர தத் ஸ்வபாவ” என்று ஆளவந்தாரும், “அசேஷ சிதசித வஸ்து சேஷிணே” எனறு பாஷ்யகாரருமருளிச் செய்த வசநங்கள் உபய கோடியிலும் சேரும். எங்ஙனேயென்னில்; சிதுபக்ரம யோஜநைக்குத் தானே ஸ்வரஸமாயிருந்ததிறே. அசிதுபக்ரம யோஜநையில் வந்தால் க்ரம விவக்ஷயா அன்று அவர்களப்படியருளிச் செய்தது; ஸமஸ்த பதமாக அருளிச்செய்கையாலே ஸமாஸத்தில் அப்யர்ஹிதமாதல், அல்பாச்தரமாதல் முற்படக் கடவதென்கிற ந்யாயத்தைப் பற்ற அல்பாச்தரமான சிச்சப்தம் முன்னாக அருளிச்செய்தார்களித்தனை அப்யர்ஹிதனான ஈச்வரன்றன்னை முதலிலெடாதே, சிச்சப்தததாலே சேதநனைச் சொல்லிற்று “அல்பாச்தரம் பூர்வம்” என்கிற அநுசாஸந பலத்தாலே. இப்படி இரண்டு க்ரமமும் வேத வைதிக பரிக்ருஹீதமாகையாலே இரண்டும் முக்யமென்று கொள்ளக் குறையில்லை. சிச்சப்தம், “ப்ரேக்ஷோபலப்திச் சித் ஸம்வித ப்ரதிபத் ஜ்ஞப்தி சேதநா” என்று, ஜ்ஞாநவாசி சப்தங்களோடே ஸஹபடிதமாகையாலும், ஜ்ஞாநாச்ரய வஸ்துவில் இதுக்கு ப்ரஸித்தி ப்ராசுர்யமில்லாமையாலும், “க்ஷர ஆத்மாநௌ ஈசதே தேவ ஏக:”, “ய ஆத்மாநமந்தரோ யமயதி யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம்”, “ஆத்மா ஜ்ஞாநமயோமல:” என்று, இப்படி ச்ருதி ஸ்ம்ருதிகளிலே பலவிடங்களிலும் சொல்லுகையாலே, ஆத்மசப்தத்துக்கு ஜீவவிஷயத்தில ப்ரஸித்தி ப்ராசுர்ய முண்டாகையாலும் “சித்தென்கிறது ஆத்மாவை” என்று ஸ்புடமாக அருளிச்செய்கிறார்.

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் மற்றும் ஆச்சான்பிள்ளை முதலான ஆசார்யர்கள், தத்வத்ரயம் குறித்த விளக்கம் அளித்தபோது, அசித் தத்வம் தொடக்கமாக அருளிச்செய்தார்கள். ஆனால் இவர் சித் தத்வம் தொடங்கி அருளிச்செய்கிறார். இதன் காரணம் என்ன? அசித் தத்வமாவது தாழ்ந்தது என்பதால் கைவிடத்தக்கது என்று அறியப்படுவதாலும், ஈச்வரனே கைக்கொள்ளத்தக்கவன் ஆவான் என்று அறியப்படுவதாலும், இவ்விதம் உள்ள இரண்டு தத்வங்களையும் அறிவதற்குத் தகுதி கொண்டவனாக உள்ள சேதநனுடைய ஸ்வரூபத்தை முதலில் அறியவேண்டும் அல்லவோ? அதனால் இவ்விதம் சித் தத்வத்தை முதலில் உரைத்தார். ஆனால் மற்ற சில ஆசார்யர்கள் அசித் தத்வத்தை ஏன் முதலில் அருளிச்செய்தார்கள்? ஆத்மவானது சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்ற அறிவானது சரீரம் குறித்து அறியாமல் ஏற்படாது என்பதால், முதலில் சரீரம் குறித்து அறிந்து கொண்டு, அதன் பின்னர் அத்தகைய சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாகவும் அந்தச் சரீரத்தில் உள்ளவனும் ஆகிய ஆத்மாவை அறிந்து கொண்டு, அதன் பின்னர் ஆத்மாவிற்கு அந்தர்யாமியாகவும், சரீரத்திற்கு ஆத்மாவைப் போன்று சித் மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் தேவதையாக உள்ள பரமாத்மாவின் ஸ்வரூபத்தை அறிதல் என்பது கீழிருந்து மேலே அறிவது போன்று உள்ளதால், இவ்விதமாக அசித்தை முதலில் அருளிச்செய்தனர். அசித் தொடக்கமாக உள்ள கருத்தானது “அந்நமயன்” என்று தொடங்கி, “ஆநந்தமயன்” என்று ச்ருதி முடிக்கின்ற வரிசையை ஏற்பது போன்றதாகும். சித் தொடக்கமாக உள்ள கருத்தானது, “போக்த போக்யம் ப்ரேரிதாரம்” என்று ச்ருதி கூறுவதை ஏற்பது போன்றதாகும். ஆகவே இந்த இரண்டு வரிசைகளுமே வேதாந்தந்தின்படி பொருத்தமே ஆகும். ஸ்தோத்ரரத்நத்தில் (4) - சித் அசித் ஈச்வர தத் ஸ்வபாவ - என்று ஸ்வாமி ஆளவந்தார் அருளிச்செய்த கருத்தும், வேதார்த்த ஸங்க்ரஹத்தில் - அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே - என்று பாஷ்யகாரர் அருளிச் செய்த கருத்தும், இந்த இரண்டு வரிசைகளிலுமே சேரும். எப்படி? சித்தை முதலில் உரைத்தல் என்பது இயல்பாகவே பொருத்தமாக உள்ளது. அசித்தை முதலில் கூறியது என்பது வரிசையைக் கருத்தில் கொண்டு அல்ல; உம்மைத் தொகை கொண்டு பல சொற்களைச் சேர்க்க முற்படும்போது (உதாரணமாக “யானையும் குதிரையும்” என்பது காணலாம்), அவற்றில் சிறந்த பொருளை முதலில் கூறுதல் அல்லது குறைந்த எழுத்துக்கள் கொண்ட பொருளை முதலில் கூறுதல் என்னும் ந்யாயத்தின்படி, குறைந்த எழுத்துக்கள் கொண்டதான சித் என்பதை முதலில் கூறினர். இங்கு சிறந்த வஸ்துவாகிய ஈச்வரனை முதலில் உரைக்காமல், சித் என்ற சொல்லால் ஆத்மாவை முதலில் கூறியது ஏனென்றால், அல்பாச்தரம் பூர்வம் - குறைந்த எழுத்துக் கூட்டம் முதலில் வரும் - என்ற கட்டளையின் வலிமை காரணமாக ஆகும். இவ்விதம் இந்த இரண்டு வரிசைகளுமே வேதவைதிகர்களால் ஏற்படுவதால், இரண்டுமே முக்கியமானது என்று ஏற்பதில் தவறில்லை. சித் என்ற சொல்லானது, ப்ரேக்ஷோபலப்திச் சித் ஸம்வித ப்ரதிபத் ஜ்ஞப்தி சேதநா - ப்ரேக்ஷா, உபலப்தி , சித், ஸம்வித், ப்ரதிபத்தி, ஜ்ஞப்தி, சேதந ஆகிய சொற்கள் அனைத்தும் புத்தியைக் குறிக்கின்றன - என்பதற்கு ஏற்ப ஞானத்தைக் கூறும் சொற்களுடன் சேர்த்துப் படிக்கப்பட்டது; மேலும் ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ள வஸ்துவிற்கு ஞானத்தைக் காட்டிலும் சிறப்பு இல்லை; ச்வே. (1-10) – க்ஷர ஆத்மாநௌ ஈசதே தேவ ஏக: - அழியாமல் மரணம் அடையாமல் உள்ளது க்ஷரம் (ஜீவாத்மா), ஒருவனாகிய தேவனே அழியக்கூடிய ப்ரதாநத்தையும், ஆத்மாவையும் ஆள்கிறான் - என்னும், ய ஆத்மாநமந்தரோ யமயதி யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் – யார் ஆத்மாவின் உள்ளில் உள்ளானோ யார் இவ்விதம் உள்ளதை ஆத்மா அறியாதோ - என்றும், ஆத்மா ஜ்நாநம் யோ மல: - ஆத்மா ஞானமயமாகவும் தூய்மையாகவும் உள்ளவன் – என்றும் ச்ருதி ஸ்ம்ருதிகளில் பல இடங்களில் கூறப்பட்டது; ஆகவே, ஆத்மா என்ற சொல்லிற்கு ஜீவ விஷயத்தில் ப்ரஸித்தி உள்ளது; இந்தக் காரணங்களால் “சித் என்பது ஆத்மா” என்று தெளிவாக உரைக்கிறார்.