Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 2)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
தத்வ த்ரயமாவது – சித்தும், அசித்தும், ஈச்வரனும்.
தத்வத்ரயந்தான் ஏதென்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் “தத்வ த்ரயமாவது சித்தும் அசித்தும ஈச்வரனும்” என்று.
“மூன்று தத்வங்கள் என்பவை எவை?”, என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
சித்தாவது சைதந்யாதாரமான வஸ்து. அசித்தாவது சைதந்ய அநாதாரமான வஸ்து. ஈச்வரனாகிறான் யோக வைசேஷிகாதி தந்தரத்திலுள்ளார் சொல்லுகிற கணக்கிலே ஒரு புருஷ விசேஷமன்றிககே, வேதாந்திகள் சொல்லுகிற சிதசிந்தி யந்தா. “க்ஷரம் ப்ரதாநமம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மாநாவீசதே தேவ ஏக:”, “ப்ரதாந க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச:” என்னக் கடவதிறே.
சித் என்பது ஞானத்தை ஆதாரமாகக் கொண்ட வஸ்து, அசித் என்பது ஞானம் அற்ற வஸ்து ஆகும். ஈச்வரன் என்பவன் யோகசாரர் மற்றும் வைசேஷிகர்கள் கூறுவது போன்று ஒரு சாதாரண புருஷன் அல்லன்; வேதாந்திகள் கூறுவது போன்று சித் மற்றும் அசித் ஆகியவற்றை நியமிப்பவன் ஆகிறான். ச்வே. (1-10) - க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர: க்ஷராத்மாநாவிசதே தேவ ஏக: - ப்ரதானம் என்பது க்ஷரம் (அழியக்கூடியது) எனப்படும். இதனைத் தனது இன்பத்திற்காக கொள்பவன் அக்ஷரம் (ஜீவாத்மா, அழிவற்றவன்) ஆவான். ஒரே தேவன் இந்த இரண்டையும் நியமித்தபடி உள்ளான் – என்றும், ச்வே. (6-16) - ப்ரதாந க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச: - ப்ரதானத்திற்கும் க்ஷேத்ரஜ்ஞனுக்கும் (ஜீவாத்மா) அவனே தலைவன், அவனே குணங்களை நியமிப்பவன் ஆவான் – என்றும் கூறுவது காண்க.