Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 1)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

முமுக்ஷுவான சேதநனுக்கு மோக்ஷமுண்டாம்போது தத்வத்ரய ஜ்ஞாநமுண்டாக வேணும்.

“முமுக்ஷுவான சேதநனுக்கு மோக்ஷமுண்டாம்போது தத்வத்ரய ஜ்ஞாந முண்டாகவேணும்”; முமுக்ஷுவாகிறான் மோக்தும் இச்சையுடையவன். ஸம்ஸார விமோசநத்தில் இச்சையுடையவனென்றபடி. “முமுக்ஷுவான” என்கையாலே, ஸம்ஸார நிவ்ருத்தியில் இச்சை ஒருவனுக்குண்டாகையிலுள்ள அருமை தோற்றுகிறது. இந்த இச்சை பிறவாமையிறே அநாதிகாலம் ஸம்ஸரித்தது. உஜ்ஜிஜீவயிஷுவான ஸர்வேச்வரனும் இந்த இச்சை பிறக்குமளவுமிறே பார்த்திருக்கிறது. ஸம்ஸாரத்தைப் பூண்கட்டிக் கொள்ள இச்சிக்கக் கடவ ஆத்மாவுக்கு தந்நிவ்ருத்தியில் இச்சை பிறக்கை துர்லபமிறே. இப்போது இவர், “சேதநன்” என்றதும் ஸாபிப்ராயம். அதாவது, சைதந்ய ப்ரயோஜநமுண்டாகத் தொடங்குகிறதும் இப்போதென்கை. அநாதிகாலம் வ்யர்த்தமே போய்த்ததித்தனையிறே சைதந்யம்; அதாவது, உஜ்ஜீவநத்துக்கு உறுப்பாகாமை. இனித்தான் ஸம்ஸார நிவ்ருத்தியை இச்சிக்கிறது, நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸுக பாவைக லக்ஷணையான பகவத் ப்ராப்திக்கு உறுப்பாகவிறே. தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமதிறே யுணர்வாவது. ஆத்மப்ராப்திக்கு உறுப்பாக ஸம்ஸார நிவ்ருத்தியை இச்சித்தாலும் விபரீத ஜ்ஞாந கார்யமாமித்தனை. ஆகையால், பகவத் ப்ராப்திக்கு விரோதியான ஸம்ஸாரத்தினுடைய விமோசனத்தில் இச்சையுடையவனான அதிகாரிக்கு, அப்படியிருந்துள்ள மோக்ஷமாகிற புருஷார்த்தம் ஸித்திக்கும்போது தத்வ த்ரய ஜ்ஞாநமுண்டாக வேணுமென்கை. தத்வ ஜ்ஞாநோத்பத்திக்கு முன்னே முமுக்ஷை ஜநிக்கக்கூடுமோ வென்னில்; “பரீக்ஷ்ய லோகாந்”, “ஜாயமாநம்” இத்யாதி ச்ருதி ஸ்ம்ருதிகளிற் சொல்லுகிற ப்ரகரியையாலே கூடும். “உண்டாக வேணும்” என்று அவச்யாபேக்ஷிதத்வம் தோற்ற அருளிச்செய்கையாலே, “தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷ லாபம்” என்கிற நியமம் தோற்றுகிறது. “தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷம்” என்கிற இது ஸகல ஸித்தாந்த ஸாதாரணமிறே. மோக்ஷத்திலும் தத்வத்திலுமிறே விப்ரதிபத்தியுள்ளது. ஆனால், “ஜ்ஞாநாந் மோக்ஷம்” என்கிற நியமம் கொள்ளும்போது, “பசுர் மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ச்ரயா:, தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்”, “யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சக்ஷுஷா, ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா” என்று ஜ்ஞாந யோக்யதையில்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும் வைஷ்ணவ ஸம்பந்தத்தாலே மோக்ஷ ஸித்தியைச சொல்லுகிற வசனங்களுக்கு வையர்த்யம் வாராதோவென்னில், வாராது. அவற்றுக்கு முமுக்ஷுத்வம் தானும் இல்லையிறே. இங்கு, முமுக்ஷுவான சேதநனுக்கிறே மோக்ஷ ஸித்திக்கு தத்வ ஜ்ஞாநமுண்டாக வேணுமென்கிறது. அங்குத் தானும் முமுக்ஷுத்வமும் தத்வ ஜ்ஞாநமும் இரண்டும் இவற்றின் பக்கலின்றிக்கேயிருக்கச் செய்தேயும், இவையிரண்டாலும் பூர்ணனாயிருப்பானொரு வைஷ்ணவனுடைய அபிமாநமேயிறே கார்யகரமாகச் சொல்லுகிறது. ஆகையாலே அபிமாநியானவனுடைய ஜ்ஞாந விசேஷத்தைக் கடாக்ஷித்தே, அபிமாநாந்தர்ப்பூதமான விவற்றுக்கும் ஈச்வரன் கார்யம் செய்கையாலே. தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷமென்கிறவிது அவ்விடத்திலும் ஸத்வாரகமாக ஸித்திக்கும். தத்வ ஜ்ஞாநமென்னாதே, தத்வ த்ரய ஜ்ஞானமென்கையாலே தத்வங்களை அதிகமாகவும் ந்யூநமாகவும் கொள்ளுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் அர்த்தாத் ப்ரதிக்ஷிப்தங்கள். இவர் தாம், தத்வ த்ரயமென்று நிர்ணயிக்கைக்கு ப்ரமாணமென? என்னில்; நிர்தோஷ ப்ரமாணமான வேதாந்தம், “போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா” என்று போக்த்ரு சப்தத்தாலும், போக்ய சப்தத்தாலும், ப்ரேரயித்ரு சப்தத்தாலும் சிதசிதீச்வர தத்வங்கள் மூன்றையுமிறே சொல்லுகிறது. ஆகையாலே, வேதாந்த ப்ரதிபாத்யம் தத்வத்ரயமுமே யென்று நிச்சயித்து, “மோக்ஷமுண்டாம்போது தத்வ த்ரய ஜ்ஞாநமுண்டாக வேணும்” என்கிறார். ஆனால், “தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி நாந்ய பந்த்தா அயநாய வித்யதே” என்று வேதாந்தங்கள் பகவத் தத்வ ஜஞாநமொன்றுமே மோக்ஷ ஸாதநமென்னா நிற்க, தத்வாந்தர பரிஜ்ஞாநத்தையும் இவர் மோக்ஷ ஸாதநமாக அருளிச செய்வானென்? என்னில, பகவத் தத்வத்தை அறியும்போது ஸகல சேதநாசேதந விலக்ஷணமாகவும், இவற்றுக்குக் காரணமாகவும், வ்யாபகமாகவும், தாரகமாகவும், நியாமகமாகவும், சேஷியாகவும் அறியவேண்டுகையாலும், தத்வாந்தரங்களை யறியாதபோது இப்படி அறிய விரகில்லாமையாலும் “தத்வ த்ரய ஜ்ஞாநமுண்டாக வேணும்” என்னக் குறையில்லை. “போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா”, “ப்ருதகாத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ் தேநாம்ருதத்வமேதி” என்கிற ச்ருதிக்கும் ஹ்ருதயம் இதுவிறே. இங்ஙனன்றாகில், “தமேவம் வித்வாந்” இத்யாதி ச்ருதியோடு இதற்கு விரோதம் வரும். ஆகையால், இந்த ச்ருதிச்சாயையாலே இவருமருளிச் செய்தாராகையாலே வேதாந்த விரோத ப்ரஸங்கமேயில்லை.

மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவன் முமுக்ஷு எனப்படுகிறான். அதாவது ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை பெறுவதில் ஆசை கொண்டவன் என்று பொருள். முமுக்ஷு என்று கூறுவதன் மூலம், ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆசை ஏற்படுவதில் ஒருவனுக்கு உள்ள கடினம் புலப்படுகிறது. இத்தகைய ஆசை ஏற்படாத காரணத்தால்தான் ஒருவன் எல்லையற்ற காலமாக ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ளான். ஒருவனைக் கரையேற்றுவதில் தனது எண்ணத்தை எப்போதும் கொண்டுள்ள ஸர்வேச்வரன் கூட, இத்தகைய ஆசை ஒருவனுக்குப் பிறக்கவேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறான். ஸம்ஸாரத்தில் மிகவும் விருப்பமாகப் பிடித்தபடி இருப்பதற்கு ஆசை கொள்ளும் ஒருவன், தனது ஆத்மாவை அதிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு விரும்புதல் என்பது மிகவும் அரியதே ஆகும். “சேதநன் - அறிவுள்ளவன்” என்று இங்கு சூர்ணையில் கூறப்பட்டதும் ஒருவிதமான கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டே ஆகும். அது என்ன என்பதைக் கூறுவோம். அதாவது, “அறிவின் பயன் ஏற்படத்தொடங்குதல் என்பது இப்போது”, என்று கருத்து. எல்லையற்ற காலமாக இந்த அறிவு என்பது வீணாகவே கிடந்துள்ளது; அதாவது, ஸம்ஸாரத்திலிருந்து கரையேறுவதற்குப் பயன்படாமல் கிடந்துள்ளது. ஆனால் இப்போதுதான் ஸம்ஸாரம் விலகுதல் என்பதைக் குறித்து விரும்புகிறது; ஏனென்றால், எல்லையற்ற ஸுகத்தை அளிக்கவல்லதான “பகவானை அடைதல்” என்னும் நிலைக்கு அடிப்படையாக உள்ளதால் ஆகும். உண்மையான ஞானம் என்பது, மஹாலக்ஷ்மியின் நாயகனை ஒருவனை மட்டுமே நோக்குவது ஒன்றே ஆகும். ஆத்ம அனுபவம் என்பதான கைவல்யத்தை விரும்புவதால் இந்த ஸம்ஸார விலகுதல் என்பதை எதிர்நோக்குவதும் கூட விபரீதமான ஞானமே ஆகும். எனவே பகவானை அடைதல் என்பதற்குத் தடையாக உள்ள ஸம்ஸாரத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற ஆசை கொண்ட ஒருவனுக்கு, அவ்விதமாகவே அமைந்துள்ள மோக்ஷம் என்ற ஒரு புருஷார்த்தம் கிட்டும்போது தத்வ த்ரயம் குறித்த ஞானம் ஏற்படவேண்டும். ஆனால், “தத்துவங்களைக் குறித்த ஞானம் ஏற்படுவதற்கு முன்பாகவே மோக்ஷம் குறித்த ஆசை ஒருவனுக்கு ஏற்படுமோ?”, என்று கேட்கலாம். இதற்கு விடை அளிப்போம். முண்டக உபநிஷத் (1-2-12) – பரீக்ஷ்ய லோகாந் – புண்ணியம் போன்ற வினைகளால் கிட்டப்படும் உலகம் – என்றும், ஜாயமாநாம் – பிறக்கும்போதே - என்றும் உள்ள ச்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களின்படி இத்தகைய நிலை கைகூடும். சூர்ணையில் “உண்டாக வேணும்” என்று அவசியமாக உள்ள ஒன்றாகக் கூறப்படுவதால், “தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷ லாபம் – தத்வம் குறித்த ஞானத்தால் மோக்ஷம் கிட்டுகிறது” என்னும் விதிமுறை உண்டாகிறது. “தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷம்” என்பது அனைத்து ஸித்தாந்தங்களிலும் பொதுவாகக் காணப்படும் கருத்து அல்லவோ? ஆனால் மோக்ஷம் மற்றும் தத்வம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் மட்டுமே ஸித்தாந்தங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் “ஞானத்தால் மோக்ஷம்” என்று கொள்ளும்போது, பசுர் மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ச்ரயா:, தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் – பசு, மனிதன், பக்ஷி போன்றவைகளாக உள்ளபோதிலும், அவை ஒரு வைஷ்ணவனை அடைந்தால், அந்தத் தொடர்பு காரணமாகவே அவை விஷ்ணுவின் உயர்ந்த இடத்தை அடைகின்றன – என்றும், யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சக்ஷுஷா, ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா - ஒரு வைஷ்ணவன் எவற்றைத் தனது கைகள் கொண்டு தொடுகிறானோ, எவற்றைத் தனது கண்களால் காண்கிறானோ, அவைகள் தாவரங்களாக இருந்தாலும் மோக்ஷம் அடைகின்றன என்னும்போது, மற்ற மனிதர்கள் குறித்து தனித்து மீண்டும் உரைக்கவேண்டுமோ – என்றும் உள்ள வாக்கியங்ஙளில், ஞானம் பெறுவதற்குத் தகுதி அற்றதான விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றுக்கு வைஷ்ணவனுடைய ஸம்பந்தம் காரணமாக மோக்ஷம் உண்டாகிறது என்று கூறும் வாக்கியங்களுக்கு, இவை வீணாகப்போகும் என்ற நிலை ஏற்படாதோ என்று கேட்கலாம். இப்படி ஒரு நிலை ஏற்படாது. ஏனென்றால் அவற்றுக்கு மோக்ஷம் அடைவதில் விருப்பம் என்பது ஏற்படுவது கிடையாது. இங்கு மோக்ஷத்தில் விருப்பம் கொண்ட சேதநன் ஒருவனுக்கே மோக்ஷம் பெறவேண்டும் என்பதற்காக தத்வஞானம் ஏற்படவேண்டும் என்றாகிறது. ஆனால் விலங்குகள் முதலானவை விஷயத்தில், அவற்றுக்கு மோக்ஷம் குறித்த விருப்பம் மற்றும் தத்வஞானம் ஆகிய இரண்டுமே இல்லை என்றாலும், இவை இரண்டும் பூர்ணமாக பெற்றுள்ள ஒரு வைஷ்ணவனுடைய ஸம்பந்தம் என்பதே மோக்ஷத்தை ஏற்படுத்தக் கூடியது என்று அல்லவோ கூறப்பட்டது? எனவே அவை எந்த ஒருவனுடைய ஸம்பந்தம் பெற்றுள்ளனவோ அவனுடைய ஞானத்தின் சிறப்பை நோக்கியே, அந்த ஸம்பந்தம் அடைந்துள்ள இவற்றுக்கு ஈச்வரன் மோக்ஷம் அளித்தல் என்ற செயலைச் செய்கிறான்; எனவே “ஞானத்தால் மோக்ஷம்” என்ற நிலையானது, விலங்குகள் முதலானவற்றின் விஷயத்திலும் ஏற்படுகிறது. ஆனால் “தத்வ ஞானம்” என்று கூறாமல், “தத்வ த்ரய ஞானம்” என்று உரைப்பதால், தத்வங்களை அதிகமாகவும் குறைவாகவும் கைக்கொள்ளுகின்ற வேதபாஹ்ய மதங்கள் அனைத்தும் தள்ளப்பட்டன. ஆனால் இங்கு இவர் தத்வங்கள் என்பது மூன்றுதான் என்று நிர்ணயம் செய்வதற்கான ப்ரமாணம் என்ன என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அளிப்போம். எந்தவிதமான தோஷங்களும் அற்றதான ப்ரமாணமாக வேதாந்தம் உள்ளது. இத்தகைய வேதாந்தத்தில், ச்வே. (1-12) - போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா - அனுபவிக்கும் சேதனன், அனுபவிக்கப்படும் வஸ்து, இதனை அனுபவிக்கும்படியாகச் செய்யும் ஸர்வேச்வரன் ஆகியவற்றை எண்ணியபடி - என்ற வாக்கியத்தில் “போக்த்ரு – அனுபவிப்பவன், போக்யம் – அனுபவிக்கப்படும் வஸ்து, ப்ரேரயித்ரு – அனுபவிக்கும்படிச் செய்பவன்” என்னும் சொற்கள் மூலம் சித், அசித் மற்றும் ஈச்வரன் ஆகிய மூன்றே கூறப்படுவதால் ஆகும். இதனால்தான் வேதாந்தம் மூலம் வெளிப்படுகின்ற தத்வங்கள் மூன்றே ஆகும் எனத் தீர்மானித்து, “மோக்ஷம் உண்டாகும் போது தத்வத்ரயம் குறித்த ஞானம் ஏற்படவேண்டும்”, என்கிறார். ஆனால், தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி நாந்ய பந்த்தா அயநாய வித்யதே – ஸர்வேச்வரனை அறிந்து கொண்டவன் இந்த உலகிலேயே முக்தன் ஆகிறான், மோக்ஷத்திற்கு வேறு பாதை இல்லை - என்ற வாக்கியம் மூலமாக, வேதாந்தங்கள் கூறுவது, “பகவத் தத்வ ஞானம் ஒன்றே மோக்ஷத்திற்கான ஸாதனம்” என்று கூறும்போது, மற்ற தத்வங்கள் குறித்த ஞனத்தையும் மோக்ஷ ஸாதநமாக இவர் ஏன் கூறுகிறார்? இதற்கு விடை அளிப்போம். பகவத் தத்வத்தை அறியும்போது, “அனைத்து சேதநம் மற்றும் அசேதனம் ஆகியவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாகவும், அவற்றுக்குக் காரணமாகவும், அவற்றுள் நிறைந்துள்ளதாகவும், அவற்றைத் தாங்குவதாகவும், அவற்றை நியமிப்பதாகவும், அவற்றின் எஜமானனாகவும் பகவத் தத்வமே உள்ளது” என்று அறியவேண்டும்; மற்ற தத்வங்களான சித் மற்றும் அசித் குறித்து அறியவில்லை என்றால், இவ்விதம் அறிவதற்கான வழியில்லை; இந்தக் காரணத்தினால், “மூன்று தத்வங்கள் குறித்து ஞானம் ஏற்படவேண்டும்”, என்று கூறினார். மேலும் ச்வே. (1-12) - போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா - அனுபவிக்கும் சேதனன், அனுபவிக்கப்படும் வஸ்து, இதனை அனுபவிக்கும்படியாகச் செய்யும் ஸர்வேச்வரன் ஆகியவற்றை எண்ணியபடி -என்றும், ச்வே. (1-6) – ப்ருதகாத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ் தேநாம்ருதத்வமேதி - ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகிய இருவரும் வெவ்வேறு என்று தெளிந்து, அத்தகைய ஞானம் பெற்ற ஒருவனைக் குறித்து பரமாத்மா மகிழ்வதன் விளைவாக, அவனால் அன்புடன் ஏற்கப்படும் ஒருவன் மோக்ஷம் பெறுகிறான் - என்றும் உள்ள ச்ருதி வாக்கியங்களுடைய கருத்தும் இதுவே ஆகிறது. இவ்விதம் பொருள் கொள்ளவில்லையென்றால், “தமேவம் வித்வாந் - இவ்விதம் அறிந்த ஒருவன்” என்பதுடன் முரண்பாடு ஏற்படும். ஆகவே இந்த ச்ருதியின் நிழலிலேயே இவரும் அருளிச்செய்ததால், வேதாந்த விரோதம் ஏற்பட வாய்ப்பே இல்லை.