Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (Pravesam 1)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
வ்யாக்யான ப்ரவேசம்
தத்வ த்ரய வ்யாக்யான அவதாரிகை
‘‘அநாதிமாயயா ஸுப்த:’’ என்கிறபடியே அநாத்யசித்ஸம்பந்த நிபந்தனமான அஜஞாநாந்தகாரத்தாலே அபிபூதராய், ஆத்ம ஸ்வரூபம் ப்ரக்ருதே பரமாய், ஜ்ஞாநாநந்த மயமாய், பகவதநந்யார்ஹ சேஷமாயிருக்கும்படியை அறியப் பெறாதே, ‘‘தேவோஹம், மநுஷ்யோஹம்’’ என்று ஜடமான தேஹத்திலே அஹம் புத்தியைப் பண்ணியும், தேஹாதிரிக்தாத்ம ஜ்ஞானம் பிறந்ததாகில் ‘‘ஈச்வரோஹமஹம் போகி’’ என்று ஸ்வதந்த்ர புத்தியைப் பண்ணியும், சேஷத்வ ஜஞாநமுண்டாய்த்ததாகில் அப்ராப்த விஷயங்களிலே அத்தை விநியோகித்தும், இப்படி ‘‘யோந்யதா ஸந்தமாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே, கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மா பாப ஹாரிணா’’ என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தில் அந்யதா ப்ரதிபத்தி ரூபமாய், அகில பாப மூலமான ஆத்மாபஹாரத்தைப் பண்ணி, அல்பாஸ்திரதவாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகைக தத்பரராய்; ‘‘விசித்ரா தேஹ ஸம்பத்திரீச்வராய நிவேதிதும், பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா’’ என்கிறபடியே கரணகளேபர விதுரமாய், போக மோக்ஷ சூந்யமாய், அசிதவிசேஷிதமாய்க் கிடக்கிற தசையிலே பரமதயாளுவான ஸர்வேச்வரன், ஸ்வசரணகமல ஸமாச்ரயணோபகரணமாகக் கொடுத்த சரீரத்தைக் கொண்டு தத் ஸமாச்ரயணத்தைப் பண்ணி யுஜ்ஜீவிக்கலாயிருக்க, அத்தைச் செய்யாதே ‘‘அந்நாள நீ தந்தவாக்கையின் வழியுழல்வேன்’’ என்கிறபடியே, அதின் வழியே போய், ஆறு நீஞ்சக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அக்கரையேறலா யிருக்க நீர்வாக்காலே யொழுகிக் கடலிலே புகுவாரைப் போலே, ஸம்ஸார நிஸ்தரணத்துக் குடலானவற்றையும் ஸம்ஸரணத்துக்குடலாக்கி, அநாத்யவித்யா ஸஞ்சித அநந்த புண்ய பாபரூப கர்மாநுகுணமாக “மாறி மாறிப் பல பிறப்பு”ம் பிறந்து, பிறந்த ஜந்மந்தோறும் துரந்த தாபத்ரய தவாநல தஹ்யமாநராய் இப்படி அநாதிகாலம் போரா நிற்கச் செய்தேயும், அதீதாநாகதமறியாமை யாலே, அதிலே ஒரு க்லேசமின்றிக்கே கர்ப்ப ஜந்ம பால்ய யௌவக வார்த்தக மரண நரக ரூபாவஸ்தா ஸப்தகத்தை ப்ராபித்து, து:க்க பரம்பரைகளை யநுபவித்து, இப்படி அநந்த க்லேச பாஜநமான ஸம்ஸார ஸாகரத்திலே அழுந்திக் கிடந்தலைகிற சேதநருடைய அநர்த்த விசேஷத்தை யநுஸந்தித்து, இவர்களுடைய உஜ்ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணிக் கொணடு போருகிற ஸர்வபூத ஸுஹ்ருத்தான ஸர்வேச்வரன், “ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்த்தே ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயகே” என்கிறபடியே, தன்னுடைய திருவுள்ளத்திற் பிறந்த அபாரகாருண்யத்தாலே, “ஜாயமாநம் ஹி புருஷம் யம பச்யேந் மதுஸூதந: ஸாத்விகஸ் ஸ து விஜ்ஞேயஸ் ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:” என்கிறபடியே, ஜாயமாந காலத்திற் பண்ணின விசேஷ கடாக்ஷத்தாலே, நிரஸ்த ரஜஸ் தமஸகனாய், ப்ரவ்ருத்த ஸத்வ குணகனாய் முமுக்ஷுவான சேதநனுக்கு தத்வ ஜ்ஞாநம் பிறந்தாலல்லது மோக்ஷ ஸித்தியில்லாமையாலே, தத்வ ஜ்ஞாநம் ஸம்பாத்யமாமளவில், அது சாஸ்த்ர ஜந்யமாதல், உபதேசகம்யமாதலாக வேண்டுகையாலும்; சாஸ்த்ர ஜந்யமாமளவில் “சாஸ்த்ர ஜ்ஞாநம் பஹுக்லேசம்” என்கிறபடியே, பஹுக்லேச ஸாத்யமாகையாலே துஸ்ஸாதமாகையாலும், வருந்தி ஸாதிக்கப் பார்ததாலும் “அநந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பச்ச காலோ பஹுவச்ச விக்நா:” என்கிறபடியே, சேதநர் மந்தமதிகளுமாய், மந்தாயுஸ்ஸுக்களுமாய், அதுக்கு மேலே விக்நங்களும் அநந்தங்களாயிருக்கையாலே எல்லார்க்குமொக்க ஸித்திக்கை யரிதாகையாலும்; இனித்தான சாஸ்த்ராப்யாஸத்துக்கு அநதிகாரிகளான ஸ்த்ரீ சூத்ராதிகளுக்கு முமுக்ஷுத்வமுண்டானாலும் நிஷ்ப்ரயோஜநமாம்படி யிருக்கையாலும்; உபதேசகம்யமாமளவில, உக்த தோஷமொன்று மில்லாமையாலும்; இந்த விசேஷத்தைத் திருவுள்ளம்பற்றி, ஸகல சாஸ்த்ர நிபுணராய் ஸகல சேதநோஜ் ஜீவநகாமராய், பரமகாருணிகரான பிள்ளை லோகாசார்யர், ச்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளிலே துரவகாஹமாம்படி பரக்கச் சொல்லப்படுகிற சிதசிதீச்வர தத்வங் களினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை, அகில சேதநர்க்கும ஸுக்ரஹமாகவும் ஸுவ்யக்தமாகவும் இப்ப்ரபந்தமுகேந வருளிச் செய்கிறார். நடுவில்திருவீதிப்பிள்ளை பட்டர், ஆச்சான்பிள்ளை முதலான பூர்வாசார்யர்களுடைய ப்ரபந்த நிர்மாணத்துக்கும் கருத்திதுவிறே. நிரஹங்காரராய், பரஸம்ருத்தி ப்ரியராய், க்யாதிலாபாதி நிரபேக்ஷராயிருக்கிறவர்கள் பலரும் ப்ரபந்தமிட வேண்டுவானென்? ஒருவரிட்ட ப்ரபந்தத்தை மற்றுமுள்ளவர்கள் பரிபாலநம் பண்ண வமையாதோ? என்னில்; ஆழ்வார்கள் பலரும் ஏககண்ட்டராயருளிச் செய்கையாலே அர்த்தத்துக்கு ஆப்ததை ஸித்தித்தாப்போலே, ஆசார்யர்கள் பலரும் ஏககண்டமாக அருளிச்செய்த அர்த்தமென்று மந்தமதிகளும் விச்வஸிக்கைக்காக. இன்னமும் ஓரொன்றில் அவிசதமான அர்த்த விசேஷங்கள் ஓரொன்றிலே விசதமாயிருக்கும்; அதுக்கடி ஸூக்தி விசேஷங்களும், ஸங்கோச விஸ்தரங்களும். இது ஏக கர்த்ருகங்களான ப்ரபந்த விசேஷங்களுக்குமொக்கும்.
மாண்டுக்ய உபநிஷத் (2-2) - அநாதிமாயயா ஸுப்த: - எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து வரும் மாயை என்பதான ப்ரக்ருதியின் தொடர்பு காரணமாக ஜீவாத்மா உறங்கிய நிலையிலேயே உள்ளான் - என்பதற்கு ஏற்ப எல்லையற்ற காலமாக உள்ள அசித் வஸ்துக்களுடைய ஸம்பந்தத்தின் விளைவாக அறியாமை என்ற இருளில் ஈடுபட்டவர்களாக, ‘‘ஆத்மாவின் ஸ்வரூபம் என்பது இந்த அசித் வஸ்துக்களைக் காட்டிலும் வேறுபட்டது. அது ஞானம் மற்றும் ஆனந்தமயமாக உள்தாகும். அது பகவானுக்கு மட்டுமே வசப்பட்டது. அது அவனுக்கு மட்டுமே அடிமையானது’’ என்பது போன்ற விவரங்கள் ஏதும் அறியாதவர்களாக இந்த உலகினர் உள்ளனர். மேலும், ‘‘தேவோஹம் மநுஷ்யோஹம் - நான் தேவன், நான் மனிதன்‘’’ என்பதாக, ஜடப்பொருளாக உள்ள இந்தச் சரீரத்தை, ‘‘நான்’’ என்பதான ஆத்மாவாக உணர்கிறார்கள். ஒரு சிலருக்கு ஆத்மாவானது சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்று ஞானம் ஏற்பட்டாலும், ‘‘ஈச்வரோ அஹம் போகி - நானே ஈச்வரன், நானே இன்பத்தில் உள்ளவன்’’ என்று தங்களைக் குறித்து சுதந்திரமானவர்கள் என்ற எண்ணம் கொள்கிறார்கள். ஒரு சிலருக்குத் தாங்கள் சுதந்திரமானவர்கள் அல்லர் என்றும், பகவானுக்கே அடிமைப்பட்டவர்கள் என்றும் உள்ளதான ஞானம் ஏற்பட்டாலும், பகவான் அல்லாமல் இந்த உலகியல் விஷயங்களில் எப்போதும் ஈடுபட்டு நிற்கிறார்கள். இப்படியாக மஹாபாரதம் உத்யோகபர்வம் (41-34) - யோந்யதா ஸந்தமாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே, கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மா பாப ஹாரிணா - பகவானுக்கு மட்டுமே உடைமையானது என்றுள்ள இந்த ஆத்மாவாது தனக்கே உரியது என்று எண்ணியபடி, அனைத்து பாபங்களுக்கும் காரணமாக உள்ள ‘‘ஆத்மாவைக் களவு செய்தல்’’ என்பதைச் செய்கிறார்கள். அற்பமானதும், நிலையற்றதும், தோஷங்களுடன் கூடியதும் ஆகிய புலன் விஷயங்களில் ஈடுபட்டு நிற்கிறார்கள். ஸ்ரீவிஷ்ணுதத்வம் - விசித்ரா தேஹ ஸம்பத்திரீச்வராய நிவேதிதும், பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா - ஸர்வேச்வரனுக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்வதற்காகவே கைகால்களுடன் கூடியதான இந்த விசித்ரமான சரீரம் நமக்கு, முன்பே நான்முகனால் தரப்பட்டது - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளதான உடல் உறுப்புகள் ஏதும் அற்றவர்களாக, இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கு இயலாமல், அசித் பொருள்களுடன ஒன்றாகவே ப்ரளயகாலத்தில் அனைத்து ஆத்மாக்கள் உள்ளன. இதனைக் கண்டு வருந்தும் ஸர்வேச்வரன், தனது எல்லையற்ற கருணையின் விளைவாக, தனது தாமரை போன்ற திருவடிகளை இவை அனைத்தும் பற்றவேண்டும் என்பதற்கு உதவுவதற்காக, அவரவர்களுக்கு ஏற்ற சரீரங்களை அளிக்கிறான். அதனைக் கொண்டு கரையேற உதவுகிறான். ஆனால் அவ்விதம் சரீரங்களைப் பெற்ற பின்னர், அவனுடைய திருவடிகளை அண்டாமல், திருவாய்மொழி (3-2-1) - அந்நாள் நீ தந்த ஆக்கை வழி உழல்வேன் - என்பதற்கு ஏற்ப, சரீரத்தின் இன்ப துன்பங்களையே பெரிதும் மதித்தபடி, ஒரு ஆற்றைக் கடக்க அளிக்கப்பட்ட படகைக் கொண்டு அக்கரை சென்று சேராமல் அந்த நீர் போகும் வழியே சென்று ஸமுத்ரத்தில் கலப்பது போன்று, ஸம்ஸாரம் என்னும் ஸமுத்ரத்தைக் கடக்க உதவுகின்ற சரீரத்தை ஸம்ஸாரத்திலேயே ஈடுபடுவதற்குக் காரணமாக்குகிறார்கள். – மேலும், எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளதான அவித்யையின் ஸம்பந்தம் காரணமாக, எண்ணற்ற புண்ணியபாப கர்மங்களைச் செய்கிறார்கள். இதன் விளைவாக திருவாய்மொழி (2-6-8) - மாறி மாறி பல பிறப்பு – என்பதற்கு ஏற்ப பல பிறவிகள் எடுக்கிறார்கள். அவ்விதம் பிறந்த ஒவ்வொரு பிறவியிலும் மூன்றுவிதமான துன்பங்கள் என்னும் காட்டுத்தீயால் எரிக்கப்பட்டபடி உள்ளனர். இப்படியாக எல்லையற்ற காலங்கள் கழிகின்றன. இதுவரை கடந்து சென்ற காலமானது மீண்டும் திரும்புவதில்லை என்பது அறியாமல், அதன் காரணமாக எந்தவிதமான துக்கத்தையும் அடையாமல் கர்ப்பம், பிறப்பு, பால்யம், யௌவநம், வியோதிகம், மரணம், நரகம் என்பதான ஏழு வகையாக உள்ள நிலைகளை அடைகிறார்கள். அதனால் ஏற்படும் துன்பங்களைத் தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள். இப்படியாக அளவற்ற துன்பங்களுக்கு இருப்பிடமாக உள்ள ஸம்ஸாரம் என்ற ஸமுத்திரத்தில் அழுந்தியபடி கிடத்து அலையும் சேதநர்கள் அடையும் இன்னல்களை ஸர்வேச்வரன் எண்ணிப் பார்க்கிறான். இவர்களுடைய கரையேறுதல் என்பதற்காக எப்போதும் முயற்சிகள் எடுத்தபடி, அனைத்திற்கும் நண்பனாக அவன் உள்ளான். – அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (14) - ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்த்தே ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயகே – இப்படியாக ஸம்ஸாரம் என்ற சக்கரத்திலிருந்தபடி, தங்களுடைய ஆழ்ந்த வினைகளால் சுழன்றபடி துன்பத்தில் கலங்கி நிற்கும் ஜீவாத்மா குறித்து மஹாவிஷ்ணுவிற்கு கருணை ஏற்படுகிறது - என்பதற்கு ஏற்ப அவர்கள் மீது எல்லையற்ற கருணையானது தாராளமாகப் பிறக்கிறது. மஹாபாரதம் மோக்ஷபர்வம் (349-72) - ஜாயமாநம் ஹி புருஷம் யம பச்யேந் மதுஸூதந: ஸாத்விகஸ் ஸ து விஜ்ஞேயஸ் ஸ வை மோக்ஷார்த்த சிந்தக: - யார் ஒருவன் பிறக்கும் போதே அவனை மதுஸூதநன் பார்க்கிறானோ, அவன் ஸத்வகுணங்கள் நிறைந்த, மோக்ஷம் குறித்து சிந்திக்கிறான் - என்பதற்கு ஏற்ப, பிறக்கும்போதே ஸர்வேச்வரன் ஒருவிதமான சிறப்பான கடாக்ஷத்தை அருள்கிறான். இதன் விளைவாக, அனைத்து விதமான ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் ஏதும் இன்றி, ஓங்கி வளர்ந்தபடி உள்ள ஸத்வகுணம் பெற்று, மோக்ஷத்தில் ஆர்வம் கொண்டவனாக ஒருவன் விளங்கக்கூடும். ஆனால் அவனுக்கு உண்மையான ஞானம் ஏற்பட்டால் அல்லாமல், மோக்ஷம் கிட்டுவதில்லை. ஆகவே அத்தகைய உண்மையான ஞானத்தைப் பெறுவதற்கு அவன் முயல்கிறான். ஆனால் அத்தகைய ஞானமோ சாஸ்த்ரங்கள் அல்லது உபதேசம் மூலம் மட்டுமே பெறத்தக்கதாக உள்ளது. ஆனால், சாஸ்த்ர ஞானம் என்பது உத்தவகீதை - சாஸ்த்ர ஜ்ஞாநம் பஹுக்லேசம் – சாஸ்த்ரம் மூலம் பெற வேண்டிய ஞானம் மிகுந்த துன்பத்திற்கு பின்னரே கிட்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப, மிகுந்த துன்பத்திற்குப் பின்னரே அடையப்படுவதாக உள்ளது; அதனையும் கடந்து, அத்தகைய சாஸ்த்ர ஞானத்தை அடைய முயற்சித்தாலும், அநந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பச்ச காலோ பஹுவச்ச விக்நா: - சாஸ்த்ரங்கள் எல்லையற்றவை, அறியவேண்டிய விஷயங்கள் எண்ணற்றவை, ஆனால் காலமோ மிகவும் குறுகியது, தடைகளோ பல உள்ளன - என்பதற்கு ஏற்ப, சேதநர்களுடைய மதியானது மந்தமாக உள்ளதாலும், குறைவான ஆயுளே உள்ளதாலும், எண்ணற்ற தடைகள் காண்ப்படுவதாலும், எல்லாருக்கும் ஒரே போன்று சாஸ்த்ர ஞானம் கிட்டுவதில்லை. மேலும் சாஸ்த்ரங்களைக் கற்பதற்கான தகுதி இல்லாதவர்களாகிய பெண்கள் போன்றவர்களுக்கு, மோக்ஷத்தில் விருப்பம் ஏற்பட்டாலும், அத்தகைய விருப்பமான பயனற்றே போகிறது. உண்மையான ஞானத்தை உபதேசம் மூலம் அடையலாம் என்று முயற்சி செய்யும்போது, அத்தகைய முயற்சியில் மேலே கூறப்பட்ட தடைகள் ஏதும் இல்லை. இதனைத் திருவுள்ளம் கொண்டவரும், அனைத்து சாஸ்த்ரங்களையும் நன்றாக அறிந்தவரும், அனைத்து சேதநர்களையும் கரையேற்றவேண்டும் என்ற விருப்பம் கொண்டவரும், மிகுந்த கருணை உள்ளவரும் ஆகிய ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் செய்தது என்னவென்றால் : ச்ருதிகள், ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றில், மிகவும் கடினமான விதத்தில் கூறப்படுகின்ற “சித், அசித், ஈச்வரன்” என்னும் தத்வங்களுடைய ஸ்வரூபம் மற்றும் இயல்பு ஆகியவற்றின் சிறப்புக்களை, அனைத்து சேதநர்களும் எளிதாக அறியலாம்படி சுருக்கமாகவும், தெளிவாகவும் இந்த நூலில் அருளிச்செய்கிறார். – ஆனால் நடுவில் திருவீதிப்பிள்ளை, பட்டர், ஆச்சான்பிள்ளை போன்ற பல பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களுடைய மூலக் கருத்து இதுவேயாக உள்ளது. இப்படி உள்ளபோது, அஹங்காரம் அற்றவர்களாக, மற்றவர்களுடைய வாழ்க்கை என்பதையே பெரிதும் விரும்புபவர்களாக, புகழ் மற்றும் பொருள் முதலானவற்றில் எதிர்பார்ப்பு அற்றவர்களாக உள்ள இவர்கள் பலரும் தனித்தனியே ஏன் ப்ரபந்தம் செய்யவேண்டும்? ஒருவர் செய்தருளிய ப்ரபந்தத்தைப் பாதுகாத்தபடி இருந்தால் போதுமானது அல்லவோ என்று சந்தேகம் ஏற்படலாம். இது ஏனென்றால், ஆழ்வார்கள் அனைவரும் ஒரே போன்று சிந்தனை கொண்டவர்களாக இருந்து அருளிச்செய்த ஆழ்பொருளானது, அனைவருடைய நம்பிக்கைக்கும் பாத்ரமாக உள்ளது; இதே போன்று பல ஆசார்யர்களும் ஒரே சிறப்பையே அருளிச்செய்துள்ளனர் என்பது, குறைந்த புத்தி கொண்டவர்கள் உணர்வதற்காகவே ஆகும். மேலும் ஒருவர் அருளிச்செய்த ப்ரபந்தத்தில் சுருக்கமாகக் காணப்படும் சில விஷயங்கள், மற்றொருவர் அருளிச்செய்த ப்ரபந்தத்தில் விரிவாகக் காணப்படும்; இதன் காரணம், அவர்களுடைய ப்ரபந்தங்களில் உள்ள சொற்களுடைய சிறப்பு, விரிவாகவும் சுருக்கமாகவும் உரைக்கும் தன்மைகள் போன்றவையே ஆகும். இந்த நிலையானது ப்ரபந்தங்கள் இயற்றிய அனைவருக்குமே பொருந்தும் என்று அறியவேண்டும்.