Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 463)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும், பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பலபர்யந்தமாகும்.

இவ்வாசார்யாபிமாந மிவனுக் குண்டாக்கும் பல பரம்பரையை யருளிச்செய்து, இவ்வர்த்தத்தை நிகமித்தருளுகிறார் (இது) என்று தொடங்கி.

இந்த ஆசார்ய அபிமானம் என்பது இந்த அதிகாரிக்கு அளிக்கும் பல பயன்களை அருளிச்செய்து, தொடர்ந்து ஆசார்ய அபிமானம் குறித்த இந்த ஆழ்பொருளை இந்தச் சூர்ணை மூலம் முடித்தருளுகிறார்.

– அதாவது, இப்படி கீழ்ச்சொன்ன ஆசார்யாபிமாநமாகிற விது, ப்ரதமத்திலே இச்சேதநனுக்கு ப்ரணவோக்த பகவதநந்யார்ஹ சேஷத்வத்தைச் சரமபர்வ பர்யந்தமாக உணர்த்தி, அநாதிகாலம் ஸ்வாதந்த்ர்யமாகிற அழிலிலே மண்டிச் சருகெழுந்து கிடந்த ஸ்வரூபத்தைத் துளிர்த்தெழும் படியாக்கும்; இப்படி பல்லவிதமான பின்பு, மத்யமபதோக்தாநந்ய யோகத்தாலே ஸ்வரூபத்தை புஷ்பிதமாம்படியாக்கும்; இப்படி புஷ்பிதமான வநந்தரம், சரமபதோக்தாநந்ய போகத்வத்தையும் சரமபர்வ பர்யந்தமாக உணர்த்தி, நித்ய கைங்கர்ய போகத்தாலே ஸ்வரூபத்தை பலபர்யந்தமாம் படியாக்கு மென்றபடி. ப்ரதம ரஹஸ்யமான திருமந்த்ரத்தில் பதத்ரய ப்ரதிபாத்யமான அநந்யார்ஹ சேஷத்வாத்யாகார த்ரயமு மாத்மாவுக்கு ஸ்வரூபமாய், அதுதான் சரமபர்வ பர்யந்தமாயிறே யிருப்பது; இவைதான் ஆசார்யோபதேசாதிகளாலே லப்தங்க ளாகையாலும் அவ்வுபதேசாதிகளுக்கடி இவன் நம்முடையவனென்கிற ஆசார்யாபிமாந மாகையாலும், ஆசார்யாபிமாந மிவற்றை யுண்டாக்கு மென்கிறது. ஆக, இப்படி யிருந்துள்ள பதத்ரயார்த்த நிஷ்டையை இவ்வாசார்யாபிமாந மிவனுக்குண்டாக்கி யுஜ்ஜீவப்பித்தே விடும்படி சொல்லிற்றாய்த்து. அதவா, இப்படி ஸ்வதந்த்ரோபாயமான விது இவன் ஸ்வரூபத்தை பர்வக்ரமேண உஜ்ஜீவிப்பிக்கும்படியை ப்ரகாசிப்பியா நின்று கொண்டு, இவ்வர்த்தத்தை நிகமித்தருளுகிறார் (இது) இத்யாதியாலே. அதாவது, ஆசார்யாபிமாநமாகிற விது, ப்ரதமம் பகவத் விஷயத்திலே அந்வயிப்பித்து, அநாதிகாலம் ததந்வய ராஹித்யத்தாலே “வாடினேன்” என்னும்படி உறாவிக் கிடந்த ஸ்வரூபத்தை பல்லவிதமாக்கும்; பின்பு, பாகவத விஷயத்திலே யூன்றுவித்து பலாந்வய யோக்யமாக்குகையாலே, பல்லவிதமா யிருந்தவத்தை புஷ்பிதமாக்கும்; அநந்தரம், “நின்று தன் புகழேத்த” என்கிறபடியே சரமபர்வத்தில் நிலைபெறுத்தி புஷ்பிதமா யிருந்தவத்தை பல பர்யந்தமாக்கு மென்னவுமாம். ஆக, இப்பரகரணத்தால், ஆசார்யனை உபாயமாகப் பற்றினார்க்கு பயா பயங்களிரண்டும் மாறி மாறி நடக்குமென்னும் ப்ரஸங்கமில்லாமையும், இவ்வர்த்த நிர்ணாயக ப்ரமாண மின்னதென்னுமதும், இவ்வர்த்த ஸ்தாபநத்துக்கீடான உபபத்தியும், ஐதிஹ்யமும், இவ்வர்த்தோபபாதநார்த்தமாக ப்ராப்ய நிர்ணயமும், இப்படி ப்ராப்ய நிர்ணயம் பண்ணினால் இதுக்கு ஸத்ருசமாகவே கொள்ளவேணும் ப்ராபகமென்னுமதும், அல்லாதபோது வரும் தூஷணமும் ஈச்வர விஷயத்திலிவனுக்குள்ள சரணவத் பாரதந்த்ர்யாநந்யத்வங்களை ஸூசிப்பித்துக் கொண்டு ஈச்வரனைப் பற்றுமதில் இவனைப் பற்றுமதுக்குள்ள விசேஷமும், ஈச்வர சேதநர்களிருவர்க்கு மிவனுபகாரக னென்றும், ஈச்வரனு மாசைப்படும் பதத்தையுடையவனென்னும், இவன் பண்ணு முபகாரத்துக்கு ஸத்ருச ப்ரத்யுபகாரமில்லை யென்றும், இவ்வாசார்ய வைபவமும், ஆத்மகுணமுண்டானாலும் ஆசார்ய ஸம்பந்தத்தை நெகிழில் அந்தப்ரயோஜநமும் அவத்யகரமும் ஈச்வர நிக்ரஹஹேதுவுமாம்படியும், ஆசார்ய ஸம்பந்த விச்சேதத்தில் பகவத் ஸம்பந்த தௌர்பல்யமும், ஆசார்யாந்வயத்துக்கும் பாகவத ஸம்பந்த மபேக்ஷிதமென்னுமதும், ஆசார்யாபிமாநமொழிய உஜ்ஜீவநோபாயமில்லை யென்னுமிடத்தில் ஆப்தோபதேசமும், இவ்வர்த்தத்தினுடைய ஸ்திரீகரணமும், இவ்வாசார்யாபிமாந நிஷ்டனானவன் ஸுலபமான இவ்விஷயத்தைவிட்டு துர்லபமான பகவத் விஷயத்தை ரக்ஷகமாக இச்சிக்கக் கடவனல்லனென்றும், பரத்வாதி ப்ராப்ய ஸ்தலங்களெல்லா மிவ்விஷயமே யென்றிருக்கக் கடவனென்றும், இவனுக்கு ப்ரதிகூலாநுகூலாபய ரின்னாரென்றும், இவனுடைய ஜ்ஞாநாநுஷ்டாநங்களுக்கு விநியோகமும், இவனுக்கு நிஷித்தாநுஷ்டாநமும் விஹிதபோகாதிகளும் த்யாஜ்யமென்னு மிடமும், ஸ்வரூபப்ரச்யுதி வாராமைக்கு வேண்டுமவஸ்தையும், ப்ராப்யபூமி ப்ராவண்யாதித்ரயமு மிவனுக்கவச்யாபேக்ஷிதமென்னுமதும், ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரோபாயத்வய ப்ரமாணங்களும், ஆசார்யாபிமாநத்தின் ஸ்வதந்த்ரோபாயத்வமும், தததிகாரி நிர்ணயமும், இவ்வாசார்யாபிமாந மிச்சேதநனுக் குண்டாக்கும் பலபரம்பரையையும் சொல்லுகையாலே, ஸதாசார்யாபிமாநமே ஸர்வர்க்கு முத்தாரக மென்னுமிடமும் சொல்லப்பட்டது. ஆக இத்தால் வாக்ய த்வயோக் தோபாயோபேய சரமாவதியை அருளிச்செய்தாராய்த்து.

இவ்விதம் மேலே கூறப்பட்ட ஆசார்ய அபிமானம் என்னும் இது முதலில், ப்ரணவத்தால் கூறப்பட்டுள்ள ஸர்வேச்வரனுக்கு மட்டுமே ஜீவன் அடிமைப்பட்டுள்ளதை அடியார்களுக்கு அவன் அடிமையாக உள்ள தன்மை முடிய ஜீவனுக்கு உணர்த்துகிறது; அதன் மூலம் எல்லையற்ற காலமாக “நான் எனக்கு மட்டுமே அடிமை” என்னும் எண்ணமாகிற தீயில் விழுந்து ஒரு பொருள் என்று கூற இயலாதபடி இருந்த ஜீவனுடைய ஸ்வரூபத்தை தளிர்விட்டு முளைக்கும்படிச் செய்யும். இவ்விதம் துளிர்த்த பின்னர், திருமந்த்ரத்தின் நடுப்பதமான “நம:” என்பதால் கூறப்படுவதான “ஜீவன் மற்ற யாரையும் சரணம் புகத் தகுதி அற்றவன்” என்பதை இறுதி நிலை முடிய உணர்த்துகிறது; தொடர்ந்து பழம் உண்டாகப் போகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாக உள்ள மலர் போன்று, பலன் ஏற்படுத்துவதற்கு அறிகுறியான உபாயத்தில் கொள்ளும் உறுதியான ஞானம் என்பதை மலரச் செய்கிறது. இவ்விதம் மலரச் செய்த பின்னர் திருமந்த்ரத்தின் கடைசி பதமான “நாராயணாய” என்பதால் கூறப்படும் கருத்தான “ஸர்வேச்வரனுடைய ஆனந்தம் தவிர ஜீவனாகிய தனக்கு வேறு ஆனந்தம் இல்லை” என்பதை இறுதி நிலை முடிய உணர்த்துகிறது; இப்படியாக எப்போதும் அவனுக்குக் கைங்கர்யம் செய்யும் இன்பத்தை அளிப்பதால் ஆத்மஸ்வரூபம் என்ற செடியில் பழம் உண்டாகும்படி செய்யும் என்று கருத்து. மூன்று ரஹஸ்யங்களாக உள்ள திருமந்த்ரம், த்வயம் மற்றும் சரமச்லோகம் ஆகியவற்றில் முதன்மையாக உள்ள திருமந்த்ரத்தில் காணப்படும் மூன்று பதங்களில் (ஓம், நம:, நாராயணாய) கூறப்படுவதான அநந்யார்ஹ சேஷத்வம் (ஸர்வேச்வரன் தவிர ஜீவாத்மா யாருக்கும் அடிமை இல்லை), அநந்ய சரணத்வம் (ஸர்வேச்வரனை மட்டுமே சரணம் என்று கொண்டிருத்தல்), அநந்ய போக்யத்வம் (அவன் ஒருவனை மட்டுமே அனுபவிக்கத்தக்கவன் என்றிருத்தல்) என்னும் மூன்று தன்மைகளே ஆத்மாவுக்கு ஸ்வரூபமாக, அவை ஆசார்யன் வரை கொண்டு செய்ய வல்லதாக உள்ளன அல்லவோ? இவை ஆசார்யனுடைய உபதேசம் மூலம் கிட்டப்பெறுபவை என்பதாலும், ஆசார்யன் அவ்விதம் உபதேசிப்பது “இவன் நம்முடையவன்” என்று எண்ணுவதாலும் இவற்றை ஆசார்ய அபிமானமே உண்டாக்கும் என்கிறது. ஆக இப்படியாக உள்ளதான திருமந்த்ரத்தில் காணப்படும் மூன்று பதங்களுடைய ஆழ்பொருளில் ஈடுபட்டு நிற்கும் நிலையை இத்தகைய ஆசார்ய அபிமானமே இவனுக்கு ஏற்படுத்தி, இவனைக் கரையேற்றிவிடும் என்று அருளிச்செய்ததாகக் கருத்து. – இந்தச் சூர்ணைக்கு வேறுவிதமாகவும் பொருள் அருளிச்செய்கிறார். சுதந்திரமான உபாயமாக உள்ள ஆசார்ய அபிமானம் என்ற உபாயம் ஆத்மஸ்வரூபத்தை ஒவ்வொரு நிலையாகக் கரை ஏற்றுவதை விளக்கும் விதத்தில் அருளிச்செய்கிறார் என்றும் கொள்ளலாம் (ஒவ்வொரு நிலை = முதலில் ஸர்வேச்வரனைப் பற்றுதல், அடுத்து அடியார்களைப் பற்றுதல், இறுதியாக ஆசார்யனைப் பற்றுதல்). ஆசார்ய அபிமானம் என்னும் இந்த உபாயம் முதலில் ஜீவனைப் பகவத் விஷயத்தில் ஈடுபடச் செய்யும். பின்னர் எல்லையற்ற காலம் அவனுடைய தொடர்பு இல்லாத காரணத்தால், பெரிய திருமொழி (1-1-1) – வாடினேன் வாடி - என்பதில் கூறியதற்கு ஏற்ப வாடிக் கிடந்த ஆத்ம ஸ்வரூபத்தை தளிர்க்கும்படிச் செய்யும். பின்னர் பாகவத விஷயத்தில் ஈடுபடும்படிச் செய்யும். பலன் பெறுவதற்கான தகுதியை ஏற்படுத்துவதன் மூலம் துளிர்த்த ஆத்ம ஸ்வரூபத்தை மலரச்செய்யும். பின்னர், கண்ணிநுண்சிறுத்தாம்பு (6) – நின்று தன் புகழேத்த – என்பதில் கூறுவதற்கு ஏற்ப இறுதி நிலையான ஆசார்ய அபிமானத்தில் நிலை நிறுத்தி, மலர்ந்திருந்த ஆத்மஸ்வரூபம் என்னும் செடியில் பழத்தை உண்டாக்கும் என்றும் பொருள் கூறலாம். – ஆக இந்த ப்ரகரணத்தின் மூலம் கீழே உள்ள பலவற்றையும் உரைத்து, ஆசார்ய அபிமானம் ஜீவனுக்கு உண்டாக்கும் பலன்களையும் கூறுவதன் காரணமாக, நல்ல ஆசார்யனை அடைதல் என்பதே அனைவரையும் கரையேற்றும் என்பதைக் கூறுகிறார் என்று கருத்து: ஆசார்யனை உபாயமாகப் பற்றியவர்களுக்கு அச்சம், அச்சம் இன்மை ஆகிய இரண்டு நிலைகளும் மாறி மாறி உண்டாகும் என்னும் நிலைக்கு இடமே இல்லை என்றும் மேலே கூறப்பட்ட கருத்திற்கான ப்ரமாணம் இன்னது என்றும் இந்தக் கருத்தை உறுதி செய்வதற்கான தகுந்த விளக்கம், அதற்கான நிகழ்வு, இந்தக் கருத்தை விளக்குவதற்குத் தேவையான பேற்றினைக் குறித்த நிர்ணயம், இவ்விதம் பேற்றினை நிர்ணயம் செய்யும்போது அதற்கு ஏற்றபடி உபாயத்தைக் கூறவேண்டும், இவ்விதம் கூறாதபோது உண்டாகும் தோஷம் இன்னது என்றும் ஸர்வேச்வரன் விஷயத்தில் இந்த ஆசார்யன் அவனுடைய திருவடி போன்று அடிமைப்பட்டவர் என்பதையும், வேறுபடாதவர் என்பதையும் உணர்த்தி, ஈச்வரனைப் பற்றுவதைக் காட்டிலும் இந்த ஆசார்யனைப் பற்றுவதில் உள்ள சிறப்பு இன்னது என்றும் ஈச்வரன், ஜீவன் ஆகிய இருவருக்கும் இந்த ஆசார்யனே உதவி செய்கிறார் என்றும், ஆசார்யன் என்னும் பதவியை ஸர்வேச்வரனும் விரும்புகிறான் என்றும், ஆசார்யன் செய்யும் உபகாரத்திற்கு ஈடு செய்யக் கூடியது ஏதும் இல்லை என்றும், ஆசார்யனோடு உள்ள ஸம்பந்தம் மோக்ஷத்திற்குக் காரணமாகிறது என்றும், ஈச்வரனை நமக்குக் காண்பித்துக் கொடுத்த ஆசார்யனைக் காட்டிலும் ஆசார்யனை நமக்கு அளித்த ஈச்வரனே பெரும் உபகாரம் செய்தவன் என்றும் ஆசார்யனுடைய பெருமையும், ஜீவனுக்கு ஆத்மகுணம் இருந்தாலும் ஆசார்ய ஸம்பந்தம் இல்லையென்றால் பயனற்றது என்றும், அதுவே ஈச்வரன் இவனைத் தள்ளக் காரணமாகிவிடும் என்றும் ஆசார்ய ஸம்பந்தம் இல்லை என்றால் ஈச்வரனுடன் ஸம்பந்தம் கிட்டாது என்றும். ஆசார்ய ஸம்பந்தம் உண்டாவதற்குப் பாகவத ஸம்பந்தம் அவசியமானது என்றும் ஆசார்ய அபிமானம் அல்லாமல் கரையேற வேறு உபாயம் இல்லை என்று உண்மையைக் கூறும் சான்றோர்களே செய்த உபதேசத்தையும், இந்தக் கருத்தின் உறுதியையும், இப்படிபட்ட ஆசார்ய அபிமானம் என்பதில் ஆழ்ந்துள்ளவன் எளியதாக உள்ள இதனைக் கைவிட்டு அரிதாக உள்ள ஸர்வேச்வரனை ரக்ஷகமாக எண்ணக்கூடாது என்றும் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்பதான அடையத் தக்க ஐந்து நிலைகளும் இந்த ஆசார்யனே ஆவார் என்று இருத்தல் வேண்டும் என்பதையும், இப்படிப்பட்ட ஒருவனுக்கு விரோதிகள் மற்றும் நண்பர்கள் இன்னவர்கள் என்பதையும் ஆசார்ய அபிமானத்தில் ஆழ்ந்துள்ள அதிகாரியின் ஞானம் மற்றும் ஒழுக்கங்கள் ஆகியவற்றின் உபயோகமும் இவனுக்கு சாஸ்த்ரங்களால் தடுக்கப்பட்டவையான மற்றவர் மனைவியை நாடுதல், விதிக்கப்பட்டதான தனது மனைவியை நாடுதல் போன்றவை கைவிடத்தக்கவை என்றும், தனது ஸ்வரூபத்தை இழக்காமல் இருப்பதற்காக இருக்கவேண்டிய நிலை இன்னது என்றும் அடைய வேண்டியதான பரமபதம் என்பதில் மிகுந்த ஈடுபாடு அவசியம் என்றும், ஆசார்யன் விஷயத்தில் “தான் ஆசார்யனைப் பற்றும் பற்றுதல், ஆசார்யன் தன்னைப் பற்றும் பற்றுதல்” ஆகிய இரண்டும் உபாயமாக உள்ள தன்மைக்கான ப்ரமாணம் இன்னது என்பதையும், ஆசார்ய அபிமானம் சுதந்திரமான உபாயம் என்பதையும், அதற்கான அதிகாரிகள் இன்னவர்கள் என்பதையும், ஆசார்ய அபிமானம் உண்டாக்கவல்ல பலன்கள் இன்னவை என்பதையும், ஆசார்யனை அடைதலே அனைவருக்கும் மோக்ஷம் அளிக்கவல்லது என்பதையும் கூறினார். இப்படியாக இந்த ப்ரகரணத்தில் த்வய மந்த்ரத்தில் கூறப்படும் இரண்டு வரிகளாலும் உரைக்கப்பட்ட உபாயத்தின் எல்லை (ஆசார்ய அபிமானம்), உபேயத்தின் எல்லை (ஆசார்யனின் முகமலர்ச்சி) ஆகிய இரண்டையும் அருளிச்செய்தார்.