Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 462)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
பக்தியிலசக்தனுக்கு ப்ரபத்தி; ப்ரபக்தியிலசக்தனுக்கு இது.
இப்படி ஸ்வதந்த்ரமான இவ்வுபாயத்துக்கு அதிகாரி யின்னாரென் றருளிச்செய்கிறார் “பக்தியில் அசக்தனுக்கு” என்று தொடங்கி.
இவ்விதம் சுதந்திரமான உபாயமாக உள்ள ஆசார்ய அபிமானம் என்பதற்கு அதிகாரி யார் என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, “உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய” என்கிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ர ஸித்த கர்ம ஜ்ஞாந ஸம்ஸ்க்ருதாந்த: கரணனுக்கு ஜநிக்குமதாய் ஸ்வபாரதந்த்ர்ய விரோதியான ஸ்வயத்ந ரூபமா யிருக்கும் பக்த் யுபாயத்தில், துஷ்கரத்வ புத்தியாலும் ஸ்வரூப விரோதித்வ புத்தியாலும் நாமிதுக்கு சக்தரல்லரென்று கை வாங்கினவனுக்கு, நிவ்ருத்தி ஸாத்யதயா ஸுகரமுமாய் பகவத் பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூபாநுரூபமுமான ப்ரபத்த்யுபாயம்; அத்யவஸாய ஜ்ஞாநரூபமான ப்ரபத்த் யுபாயத்தில் மஹாவிச்வாச முண்டாகை அரிதாகையாலும், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான ஈச்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும், நாமிதுக்கு சக்தரல்லவென்று தேங்கினவனுக்கும் பச்வாதிகளுக்கும் கார்யகரமாகையாலே விச்வாஸ ஸாபேக்ஷமுமன்றிக்கே மோக்ஷைக ஹேதுவுமா யிருக்கும் பரதந்த்ர ஸ்வரூபனான ஸதாசார்யானுடைய அபிமாந ரூபமான விந்த சரமோபாய மென்கை. பக்தியி லசக்தனுக்கு துஷ்கரத்வ ஸ்வரூப விரோதித்வங்க ளிரண்டும் ஹேதுவாகிலும் இவ்விடத்தில் ஸ்வரூப விரோதித்வம் ப்ரதாந ஹேது; ப்ரபத்தியி லசக்தனுக்கு விச்வாஸமாந்த்ய பயமே ப்ரதாந ஹேது; “ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று; பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே ப்ரபத்தி நழுவிற்று” என்றிறே இவர் தாம் கீழருளிச்செய்தது. இத்தால், அந்யோபாயாசக்ததயா அநந்யகதியானவனே ப்ரபத்த்யதிகாரி யாமோபாதி, இவ்வுபாதிகாரியும் அந்யோபாயா சக்ததயா அநந்யகதியானவ னென்றதாய்த்து. அன்றிக்கே, இதின் ஸ்வதந்த்ரத்வத்தை “பக்தியி லசக்தனுக்கு” இத்யாதியாலே ஸ்திரீகரிக்கிறாராகவுமாம். வாக்யார்த்த யோஜநையில் பேதமில்லை; பக்தியி லசக்தனைக் குறித்து விஹிதமான ப்ரபத்த்யுபாயம் ஸ்வதந்த்ரமானாப்போலே ப்ரபத்தியி லசக்தனைக் குறித்து விஹிதமானவிதுவும் ஸ்வதந்த்ரமாக குறையில்லை யென்று கருத்து.
– ஆளவந்தார் ஆத்மஸித்தியில் – உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய - கர்ம ஞானங்கள் என்பதுடன் கூடிய தூய்மையான மனம் கொண்டவனுக்கு - என்று கூறுவது போன்று ஆயிரக்கணக்கான முற்பிறவிகளில் ஈட்டப்பெற்ற கர்மம் மற்றும் ஞானம் ஆகியவற்றால் மனம் தூய்மை அடையப்பெற்றவனுக்கு உண்டாவதும், தனது முயற்சி என்பதால் தான் “ஸர்வேச்வரனுக்கு வசப்பட்டவன்” என்னும் எண்ணத்திற்கு விரோதியாக உள்ளதும் ஆகிய பக்தி உபாயத்தைக் காட்டிலும் – இயற்றுவதற்கு மிகவும் கடினமானது என்னும் அறிவாலும், நமது ஆத்மாவின் ஸ்வரூபமான “ஸர்வேச்வரனுக்கு வசப்பட்டது” என்ற அறிவாலும், “நாம் இதனைச் செய்வதற்குரிய சக்தி உடையவன் அல்லோம்” என்று எண்ணி மற்ற உபாயங்களைக் கைவிட்ட ஒருவனுக்கு, மற்றவற்றைக் கைவிட்டதன் காரணமாகவே செய்வதற்கு எளியதாக உள்ளதால், பகவானுக்கு மட்டுமே வசப்பட்ட ஆத்மாவின் ஸ்வரூபத்துக்கு ஏற்றதாக இருக்கக்கூடிய ப்ரபத்தி உபாயமாகும் (அதாவது பக்தியைக் காட்டிலும் ப்ரபத்தி எளிய உபாயம்). – (அடுத்து ப்ரபத்தியைக் காட்டிலும் ஆசார்ய அபிமானம் எளியது என்று கூறுகிறார்) உறுதியான ஞானம் என்பதன் வடிவமாக உள்ள ப்ரபத்தி உபாயத்தைக் காட்டிலும் - மஹாவிச்வாஸம் என்பது உண்டாவது மிகவும் அரிது என்பதாலும், ஸம்ஸாரத்தில் பந்தப்படுத்துதல் மற்றும் அதிலிருந்து மோக்ஷம் அளித்தல் ஆகிய இரண்டிலும் ஸர்வேச்வரனுக்கு உள்ள சுதந்திரத்தை எண்ணி பயத்தாலும், “நாம் இந்த ப்ரபத்தி உபாயத்துக்குத் தகுதி உடையவர்கள் அல்ல” என்று எண்ணி பின் வாங்குபவர்களுக்கு, பசு முதலானவற்றுக்கும் மோக்ஷம் அளிப்பதால், மஹாவிச்வாஸம் போன்றவை அவசியம் இல்லாமல் உள்ளதால், மோக்ஷத்துக்கு மட்டுமே காரணமாக உள்ளதான ஆசார்ய அபிமானம் என்பது கடைசி உபாயமாக உள்ளது. பக்தியோகத்தில் நிற்கலாம் என்றுள்ள ஒருவனுக்கு அந்த யோகத்தில் நிலைநிற்கத் தேவையான ஆற்றல் இல்லாத காரணத்தால் மிகவும் கடினமாக உள்ள நிலை, தனது முயற்சியால் பக்தி விளையும் என்பதன் காரணமாக “மற்றவர்களுக்கு ஆத்மா வசப்பட்டது” என்பதான ஆத்மஸ்வரூபத்துக்கு விரோதமான நிலை ஆகிய இரண்டு நிலைகளும் பக்தியோகம் நழுவக் காரணம் இருந்தாலும், ஆத்மஸ்வரூபத்துக்கு விரோதியாக இருத்தல் என்பதே அந்த நழுவுதலுக்கு முக்கியமான காரணமாகும். ப்ரபத்தியில் நிலை நிற்க எண்ணும் ஒருவனுக்கு - மஹாவிச்வாஸத்தில் உண்டாகும் குறைவு, ஸர்வேச்வரனின் சுதந்திரம் குறித்த பயம் ஆகிய இரண்டும் ப்ரபத்தி நழுவுவதற்குக் காரணமாக உள்ளபோதிலும், ஸர்வேச்வரனுடைய சுதந்திரம் குறித்த பயமே முக்கிய காரணமாக உள்ளது. சூர்ணை 444ல் – ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று – என்றும், 445ல் - பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே ப்ரபத்தி நழுவிற்று – என்றும் இவர் அருளிச்செய்தார் அல்லவோ? ஆக இதன் மூலம், மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளத் தேவையான சக்தி இல்லாதவன், வேறு புகலிடம் இல்லாத காரணத்தால், ஆசார்ய அபிமானம் என்ற இந்த உபாயத்திற்கு அதிகாரி ஆகிறான். அல்லது வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். ஆசார்ய அபிமானம் என்னும் இந்த உபாயம் சுதந்திரமானது என்பதை இந்தச் சூர்ணையில் உறுதி செய்கிறார் என்றும் பொருள் கூறலாம். இந்தச் சூர்ணைக்கான வ்யாக்யானத்தில், கடந்த இரண்டு மூன்று பத்திகளிலும், இந்தப் பத்தியிலும் கூறப்பட்ட பொருள்களில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. பக்தியோகத்தில் ஆற்றல் இல்லாதவனுக்காக விதிக்கப்பட்ட ப்ரபத்தி உபாயமானது சுதந்திரமான உபாயம் என்பது போன்று, ப்ரபத்தியில் ஈடுபட ஆற்றல் இல்லாதவனுக்காக விதிக்கப்பட்ட ஆசார்ய அபிமானமும் சுதந்திரமானது என்று கூறுவதற்கு எந்தக் குறையும் இல்லை.