Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 461)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஆசார்யாபிமாநந்தான் ப்ரபத்திபோலே உபாயாந்தரங்களுக்கங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமா யிருக்கும்.

கீழ்ச்சொன்ன ப்ரபத்தி நிஷ்டனான வதிகாரிக்கு உபாயாதிகாரத்தில் குறையுண்டாகிலும், அது பாராம லீச்வரன் கார்யஞ் செய்கைக்குடலாய்க் கொண்டு அவ்வுபாய சேஷமாயிருந்துள்ள ஆசார்யாபிமாநத்தை இப்போது ஸ்வதந்த்ரோபாயமாகச் சொல்லுவானென்? ஒன்றுக்கே உபயாகாரமும் கூடுமோவென்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார் மேல் “ஆசார்யாபிமாநந்தான்” என்று தொடங்கி.

– மேலே கூறப்பட்ட ப்ரபத்தியில் நிலைநிற்கும் அதிகாரிக்கு அவனுடைய தகுதியில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டாலும், அதனை ஆராயாமல் அவன் ஸர்வேச்வரனுக்கான கைங்கர்யம் செய்வதற்குக் காரணமாக உள்ளதால், அந்த ப்ரபத்தி உபாயத்துக்கு அங்கமாக ஆசார்ய அபிமானம் உள்ளது என்றிருக்கும்போது, அதனை இப்போது சுதந்திரமான தனி ஓர் உபாயமாக உரைக்கலாமா? இவ்விதம் கொண்டால் ஒன்றுக்கே தனி ஓர் உபாயமாகவும், மற்றொரு உபாயத்துக்கு அங்கமாகவும் உள்ள தன்மை உண்டாகுமோ? இந்தக் கேள்விகளுக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஆசார்யாபிமாநமாகிற விதுதான், “தமேவசாதயம் புருஷம் ப்ரபத்யே”, “தமேவ சரணம் கச்ச” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே விரோதி பாப க்ஷயத்துக்கும் பக்திவிவ்ருத்திக்கு முடலாய்க் கொண்டு உபாயாந்தரமான பக்திக் கங்கமுமாய்; தத் த்யாக பூர்வகமாக “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று விதிக்கும்படி இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்க ளிரண்டுக்கும் ஸ்வயமேவ உபாயமாய்க் கொண்டு ஸ்வதந்த்ரோபாயமுமா யிருக்கும் ப்ரபத்திபோலே, உபாயாதிகார மாந்த்யத்தைப் பார்த்து ஈச்வர னுபேக்ஷியாமல் கார்யம் செய்கைக் குறுப்பாகையாலே ஸ்வேதரோபாயமான ப்ரபத்திக்கு ஸாபல்யத்தை யுண்டாக்கா நின்று கொண்டு அவ்வழியாலே அதுக் கங்கமுமாய், அத்தையொழியத் தன்னையே யுபாயமாகக் கொள்ளுமளவில் அநிஷ்ட நிவ்ருத்த்யாதிகளுக்குத் தானே உபாயமாய்க் கொண்டு ஸ்வதந்த்ரமுமா யிருக்குமென்கை. அன்றிக்கே, “அநாசார்யோபலப்தா ஹி வித்யேயம் நச்யதி த்ருவம்” என்றும், “சாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸாங்கா ஸஹபலோதயா, நப்ரஸித்த்யதி வை வித்யா விநா ஸதுபதேசத:” என்றும் சொல்லுகையாலே ஏதேனுமொரு வித்யையை யவலம்பிக்கு மவனுக்கும் அதுக்கோ ராசார்யோபதேசம் வேண்டுகையாலே ஆசார்யாபிமாநம் ஸகலோபாயாங்கமாயிருக்க, “தேநைவ தே ப்ரயாஸ்யந்தி” என்று ஸ்வதந்த்ரோபாயமாகச் சொல்லுவா னென்னென்ன; (ஆசார்யாபிமாநந்தான்) என்று தொடங்கி அருளிச்செய்கிறாராகவுமாம். அதாவது ப்ரபத்திதான் கர்மஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு உத்பத்தி விவ்ருத்தி விரோதி பரிஹாரார்த்தமாக விஹிதமாய்க் கொண்டு ததங்கமுமாய், “அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸ பூர்வகம், ததேகோபாயதா யாச்ஞா ப்ரபத்திச் சரணாகதி:” என்கிறபடியே, அந்யோபாயங்களை யொழிந்து தன்னையே யுபாயமாகக் கொள்ளுமளவில் அநிஷ்டநிவ்ருத்தி பூர்வகேஷ்ட ப்ராப்திக்கு ஸ்வயமேவ நிர்வாஹகமாய்க் கொண்டு ஸ்வதந்த்ரமாயிருக்குமாப்போலே ஆசார்யாபிமாநமாகிற விதுதான் ஏதெனுமொரு உபாயத்துக்கு மாசார்யோபதேச மவச்யாபேக்ஷிதமாகையாலே அவ்வழியாலே யுபாயாந்தரங்களுக்கு அங்கமா யிருந்ததேயாகிலும், “பாலமூக ஜடாந்தாச்ச பங்கவோ பதிராஸ் ததா, ஸதாசார்யேண ஸம்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கிதம்”, “பசுர் மநுஷ்ய: பக்ஷீவா” இத்யாதிப்படியே ஸ்வயமே வோத்தாரகமாகையாலே ஸ்வதந்த்ரோபாய முமாயிருக்குமென்கை.

– ஆசார்ய அபிமானம் என்பது கீழே உள்ள ச்லோகங்களில் கூறப்படுவது போன்று உபாயத்துக்குத் தடையாக உள்ள பாவங்களை நீக்குதல், பக்தி வளர்வதற்குக் காரணமாக இருத்தல் போன்றவற்றைச் செய்கிறது: கீதை (15-4) - தமேவசாதயம் புருஷம் ப்ரபத்யே – அந்த ஆதிபுருஷனையே காரணமாக அடைகிறேன். கீதை (18-82) – தமேவ சரணம் கச்ச – அவனையே சரணம் என்று அடைவாய். மேலும் ஆசார்ய அபிமானம் என்பது - மற்ற உபாயமான பக்திக்கு அங்கமுமாய், அதனைக் கைவிட்டு, கீதை (18-66) - மாமேகம் சரணம் வ்ரஜ – என் ஒருவனை மட்டுமே சரணம் அடைவாய் - என்று விதிக்கும்படியாக விலக்குவது என்ற இரண்டுக்கும் தானே உபாயமாக உள்ள சுதந்திர உபாயமான ப்ரபத்தி போன்று - உபாயத்திற்கு வேண்டிய தகுதியில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து ஸர்வேச்வரன் ஒதுக்கிவிடாமல் இவன் செயல்களைச் செய்யும்படி ஸர்வேச்வரனை ஆக்குவதால், “ஆசார்ய அபிமானம்” என்ற தன்னைக் காட்டிலும் வேறான உபாயமான ப்ரபத்திக்கு பலன் தரக்கூடிய சக்தியை அளிப்பதால், அந்த ப்ரபத்திக்கு அங்கமாக உள்ளது; அந்த ப்ரபத்தி அல்லாமல் தன்னையே உபாயமாகக் கொள்ளும்போது விருப்பம் அல்லாதவற்றை நீக்குதல் முதலானவற்றுக்குத் தானே உபாயமாக இருந்தபடி சுதந்திரமான உபாயமாகவும் உள்ளது. – அல்லது வேறுவிதமாகவும் இந்தச் சூர்ணைக்குப் பொருள் கூறலாம். அநாசார்யோபலப்தா ஹி வித்யேயம் நச்யதி த்ருவம் – ஆசார்யனால் உபதேசிக்கப்படாத வித்யை பலன் இல்லாமல் போகிறது - என்றும், பாரத்வஜ ஸம்ஹிதை – சாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸாங்கா ஸஹபலோதயா, நப்ரஸித்த்யதி வை வித்யா விநா ஸதுபதேசத: - சாஸ்த்ரங்களை நன்றாக அறிந்துள்ளபோதிலும் நல்ல ஆசார்யனால் உபதேசிக்கப்படாத போது அங்கங்கள் மற்றும் பலன்களுடன் கூடியுள்ள வித்யை பலன் தருவதில்லை - என்றும் கூறுவதால் ஒரு வித்யையைக் கற்க முயன்றாலும் அதற்கும் ஓர் ஆசார்யனுடைய உபதேசம் அவசியமாகிறது. ஆக ஆசார்ய அபிமானம் அனைத்து உபாயங்களுக்கும் அங்கமாக மட்டுமே உபதேசிக்கப்பட்டுள்ளபோது , பாரத்வாஜ ஸம்ஹிதையில் - தேநைவ தே ப்ரயாஸ்யந்தி - ஸ்ரீவைஷ்ணவனின் தொடர்பு காரணமாக உயர்ந்த பரமபதம் சேர்க்கிறார்கள் – என்று ஆசார்ய அபிமானம் என்பதைத் தனியொரு உபாயமாக உரைக்கலாமோ என்ற கேள்விக்கு இந்தச் சூர்ணையில் விடை அளிக்கிறார் என்றும் கொள்ளலாம். ப்ரபத்தியானது கர்ம ஞான பக்தி போன்ற மற்ற உபாயங்கள் ஏற்படுவதற்கும், அவை மேன்மேலும் வளர்வதற்கும், அவற்றின் விரோதிகள் நீங்குவதற்கும் காரணமாக உள்ளதால் அவற்றின் அங்கமாக உள்ளது. என்றாலும், அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸ பூர்வகம், ததேகோபாயதா யாச்ஞா ப்ரபத்திச் சரணாகதி: – மற்ற எந்தவிதமான உபாயத்தாலும் தனது ஸ்வரூபத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலாதபோது மஹாவிச்வாசத்துடன் நின்று ஸர்வேச்வரன் மட்டுமே உபாயம் என்பதான ப்ரபத்தி என்பது சரணாகதி என்றும் கூறப்படுகிறது - என்ற ப்ரமாணத்திற்கு ஏற்ப மற்ற உபாயங்களை விலக்கி ப்ரபத்தியாகிய தன்னையே உபாயம் என்று கொள்ளும்போது, விருப்பம் அல்லாதவற்றை நீக்குவதும் விருப்பமானவற்றை அளிப்பதும் செய்வதால், தானே ஒரு தனி உபாயமாக உள்ளதாகிறது. இதே போன்று எந்த ஓர் உபாயத்துக்கும் ஆசார்ய உபதேசம் அவசியம் என்பதால், ஆசார்ய அபிமானம் என்பது அந்தந்த உபயங்களுக்கு அங்கமாக உள்ளது. என்றாலும், பாரத்வாஜ ஸம்ஹிதை - பாலமூக ஜடாந்தாச்ச பங்கவோ பதிராஸ் ததா, ஸதாசார்யேண ஸம்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கிதம் – குழந்தைகள், ஊமையர்கள், அறிவற்றவர்கள், குருடர்கள், விரோதிகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற பலரும் ஆசார்யனால் பார்க்கப்பட்டதால் பரமபதம் அடைகிறார்கள் – என்றும், பசுர் மநுஷ்ய: பக்ஷீவா - பசு, பறவை, மனிதர்கள் என்ற பலரும் ஆசார்யனால் பரமபதம் அடைகிறார்கள் – என்றும் கூறுவதற்கு ஏற்ப தானே மோக்ஷத்தை அளிக்கவல்ல தனி ஓர் உபாயமாகவும் ஆசார்ய அபிமானம் உள்ளது என்று கருத்து.