Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 460)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
“நல்லவென் தோழி”, “மாறாய தானவனை” என்கிற பாட்டுக்களையும் ஸ்தோத்ரத்திலே முடிந்த ச்லோகத்தையும் “பசுர் மநுஷ்ய:” என்கிற ச்லோகத்தையும் இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்திப்பது.
இனிமேல் பரகத ஸ்வீகாரமாகிற பரமோபாயத்துக்கு ப்ரமாணங்கள் பலவற்றையும் தர்சிப்பித்தருளுகிறார் (நல்லவென் தோழீ) என்று தொடங்கி.
– அடுத்து ஆசார்யன் சிஷ்யனைப் பற்றும் பற்றான பரகத ஸ்வீகாரம் என்பதான உயர்ந்த உபாயத்துக்குப் பல ப்ரமாணங்கள் அருளிச்செய்கிறார்.
– அதாவது, தோழியானவள் இவள் தனக்கு பேற்றுக்குடலாக நினைத்திருப்பது, அவன் “நத்யஜேயம்” என்கிற வார்த்தையையும், பெரியாழ்வார் வயிற்றிற் பிறப்பையுமாய்த்து, இப்போ தவன் வார்த்தை தனக்குப் பலியாத மாத்ரத்தைக் கொண்டு இது தன்னிலு மதிசங்கை பண்ணா நின்றாள். இனி இவளெங்ஙனே ஜீவித்துத் தலைக்கட்டப் புகுகிறாளென்னு மிழவு தோற்றவிருக்க அவளைப் பார்த்து, என்னிலு மென்னிழவுக்கு நோவுபடும்படி ஸ்நிக்தையான வென்னுடைய தோழீ! அநந்தசாயியாய் அத ஏவ ஸர்வஸ்மாத்பரரா யிருக்கிறவர், அதுக்குமேல் ச்ரிய:பதிகளாய் ஒருவருக்கு மெட்ட வொண்ணாத பெருமையை யுடையரா யிருப்பா ரொருவர், தேவயோநியிலே பிறந்து சிறிதணைய நிற்கையு மன்றிக்கே அவர்க்கும் நமக்கும் பர்வத பரமாணுக்க ளோட்டை வாசிபோரும்படி க்ஷுத்ரரான மநுஷ்யர் நாம், ஆனபின்பு நம்மால் செய்யலாவதுண்டோ, அவரொரு வார்த்தை முன்பே சொல்லிவைத்தா ரென்றத்தைக் கொண்டு நம்மால் அவரை வளைக்கப்போமோ; அது கிடக்கிடும், நமக்குப் பேற்றுக்கு வழியுண்டுகாண், ஸ்ரீவில்லிபுத்தூரிலே யவதரித்த வேற்றத்தையுடைய ஸர்வ வ்யாபக வஸ்துவைத் தன் திருவுள்ளத்திலே யடக்கிக் கொண்டிருக்கிற பெரியாழ்வார், “ஆசார்ய தேவோ பவ” என்கிறபடியே நமக்குத் தேவராயிருக்கிற அவரை ஓரிசையைச் சொல்லி யிசைக்கவுமாம், கிழியை அறுத்து வரப் பண்ணவுமாம், திருமஞ்சனத்தை சேர்த்து வைத்து தழைக்கவுமாம், திருக்குழல் பணியைச் சமைத்து வைத்தழைக்கவுமாம், திருவந்திக்காப்பிட வழைக்கவுமாம். அன்றிக்கே நான் நம்மை முன்னிட்டாப்போலே தமக்குப் புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம், வல்லதொரு ப்ரகாரம் வருவித்தாராகில் அத்தைக் கண்டிருக்கக்கடவோம், நாம் மேல்விழக் கடவோமல்லோம் என்றாண்டா ளருளிச்செய்த “நல்லவென் தோழி” என்கிற பாட்டையும்; – ஈச்வரனென்று பாராதே, தனக்கெதிரியான ஹிரண்யாஸுரனைக் கூரிய திருவுகிராலே, வரபலங்களாலே பூண்கட்டியிருக்கிற மார்வை பொன்மலை பிளந்தாப்போலே யிரண்டு கூறாம்படி அநாயாஸேந கிழித்துப் பொகட்ட மிடுக்கை யுடைய நரஸிம்ஹத்தை, “அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழித்தவனைப் பல்லாண்டு பாடுதும்” என்று, அநந்ய ப்ரயோஜநராய்க் கொண்டு மங்களாசாஸநம் பண்ணியிருப்பாரை ஜயிக்குமே, வ்யாவ்ருத்தராயிருக்கிற அவர்கள் பக்கலிலே ந்யஸ்தபரராய் அவர்கள் அபிமாநத்திலே யொதுங்கி யிருப்பாருடைய ஸுக்ருதம் - என்று திருமழிசைப்பிரான் அருளிச்செய்த “மாறாய தானவனை” என்கிற பாட்டையும்; – “அக்ருத்ரிம” என்று தொடங்கி, ஸ்வாபாவிகமாய் தேவருடைய ப்ராப்தமுமாய் போக்யமுமான திருவடிகளிலுண்டான ப்ரேமத்தினுடைய அதிசயத்துக்கெல்லைநிலமா யிருப்பாராய், அந்த ப்ரேம ப்ரகர்ஷத்துக் கடியான ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞாநத்தை யுடையராய், வித்யையாலும் ஜந்மத்தாலும் அடியேனுக்குப் பிதாமஹரா யிருக்கிற நாதமுநிகளைப் பார்த்து, “அடியேனுடைய வ்ருத்தத்தைப் பாராதே ப்ரஸந்நரா யருளவேணும்” என்று பரமாசார்யரான ஆளவந்தா ரருளிச் செய்த வேதாந்த தாத்பர்யமான ஸ்தோத்ரத்தில் சரமமான ச்லோகத்தையும்; ஜ்ஞாநம் பிறக்கைக்கு யோக்யதையில்லாத பசுபக்ஷிகளாகவுமாம், ஜ்ஞாந யோக்யதையுள்ள மநுஷ்யனாகவுமாம், யாவர் சிலர் பகவத் ஸம்பந்தமே நிரூபகமாம்படி யிருப்பானொரு ததீயனோடே ஸம்பந்தித்திருக்கிறார்கள், அவர்களந்த வைஷ்ணவனாலே ப்ராப்ய பூமியான பரமபதத்தை ப்ராபிப்பர்க ளென்கையாலே, ஜ்ஞாநமுண்டாகவுமாம் இல்லையாகவுமாம், ததீயாபிமாநமே உத்தாரக மென்னுமிடத்தை ஸுஸ்பஷ்டமாகச் சொல்லுகிற, “பசுர் மநுஷ்ய: பக்ஷீவா யேச வைஷ்ணவ ஸம்ச்ரயா: தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம்பதம்” என்கிற பௌராணிக ச்லோகத்தையும்; ஆசார்யாபிமாநமாகிற விந்த பரகத ஸ்வீகாரோபாயத்துக்கு ப்ரமாணமாக வநுஸந்திப்ப தென்றபடி.
ஆண்டாளின் தோழி ஒருவள், ஆண்டாள் ஸர்வேச்வரனைப் பெறுவதற்குக் காரணமாக உள்ளது எதுவென்றால், இராமாயணம் யுத்தகாண்டம் (18-3) – நத்யேஜயம் – நான் கைவிடமாட்டேன் - என்று அவன் கூறிய சொற்களும், பெரியாழ்வார் வயிற்றில் பிறந்த பிறப்பும் என்று எண்ணினாள். ஆனால் அவனுடைய சொற்கள் தனது விஷயத்தில் பலிக்காமல் உள்ளது கண்டு, அந்தச் சொற்கள் குறித்து சந்தேகம் அடைந்தாள். இனி இவள் எவ்விதம் பிழைக்கப்போகிறாள் என்று நிலை ஏற்பட்டது. அப்போது அவளிடம் ஆண்டாள், நாச்சியார் திருமொழி (10-10) – நல்லவென் தோழி – என்று உரைத்த பாசுரத்திற்கான பொருளை இங்கு அருளிச்செய்கிறார். என்னைக் காட்டிலும் என்னுடைய துன்பத்தைக் கண்டு அதிக துன்பம் கொள்ளும் எனது தோழியே! ஆதிசேஷனைத் தனது படுக்கையாகக் கொண்டு அதன் காரணமாக அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவனாக உள்ளவன், அதற்கு மேலும் மஹாலக்ஷ்மியின் நாயகன் என்பதான யாருக்கும் எட்டாத உயர்ந்த பெருமை கொண்டுள்ள ஒருவன், தெய்வப்பிறவியில் பிறந்து அதே தெய்வப் பிறவியோடு அவன் இணைய நிற்பான் அல்லாமல் மலைக்கும் மிகச் சிறிய அணுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்று அவனுக்கும் நமக்கு இடையே வேறுபாடு உள்ளதால், தாழ்ந்த மனித குலத்தில் நாம் உள்ளதால் நம்மை அடைவானோ? இதற்கு நாம் என்ன செய்ய இயலும்? அவன் முன்பு ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு சொல் உரைத்தான் என்பதையே எண்ணிக் கொண்டு அவனை நம்மால் வளைக்க இயலுமோ? அது இருக்கட்டும்; அவனை நாம் அடைவதற்கு ஒரு வழி உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஏற்றத்தைக் கொண்டவராகவும், எங்கும் நிறைந்துள்ள ஸர்வேச்வரனைத் தனது திருவுள்ளத்தில் அடக்கிக் கொண்டுள்ளவரும் ஆகிய பெரியாழ்வார் உள்ளார். தைத்திரீய உபநிஷத் – ஆசார்ய தேவோ பவ – ஆசார்யனைத் தெய்வமாகக் கொண்டவனாக இருத்தல்வேண்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப, நமக்கு ஆசார்யனாக உள்ள பெரியாழ்வார், தனக்கு ஆசார்யனாக உள்ள ஸர்வேச்வரனை ஒரு இசை மூலம் இசைய வைக்கக்கூடும்; பாண்டியன் கட்டிய கிழியை அறுத்து வரவழைக்கக்கூடும்; திருமஞ்சனம் செய்வதற்காக நீரைச் சேர்த்து வைத்து அவனை நீராடும்படி அழைக்கக்கூடும்; கண்ணெச்சில்படாமல் தடுக்க திருவந்திக்காப்பு செய்யும் பொருட்டு அழைக்கக்கூடும்; அல்லது அவனை அடைய நான் பெரியாழ்வாரைப் புருஷகாரமாகக் (சிபாரிசு செய்பவராக) கொண்டது போன்று தனக்கு யாரானும் ஒருவரைப் புருஷகாரமாகக் கொண்டு அழைக்கக்கூடும். அவர் இவ்விதம் ஏதோ ஒரு வழியில் அவனை வரவழைக்கும்வரை நாம் பொறுமையுடன் காத்திருப்போம்; நாமாக முயற்சி எடுத்து அவனை வரவழைக்க வேறு எந்தச் செயலையும் செய்யமாட்டோம் – என்று உரைத்தமை காண்க. – அடுத்து நான்முகன் திருவந்தாதி (18) - மாறாய தானவனை – என்ற பாசுரத்திற்கான விளக்கம் மூலம் உணர்த்துகிறார். தான் ஸர்வேச்வரன் என்பதையும் பாராமல் தனக்கு விரோதியான இரண்யாஸுரனைத் தனது கூர்மையான நகங்கள் மூலம், பலவிதமான வரங்களால் தனக்குக் கவசம் பூண்டுள்ள அவன் மார்பைப் பொன்னால் ஆகிய மலையைப் பிளப்பது போன்று இரண்டு துண்டுகளாகப் பிளக்கும்படி ஒரு விளையாட்டு போன்று கிழித்த பலம் கொண்ட நரஸிம்ஹத்தைக் குறித்து எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் திருப்பல்லாண்டு(6) – அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழித்தவனைப் பல்லாண்டு பாடுதும் - என்று பெரியாழ்வார் பல்லாண்டு பாடினார். அப்படிப்பட்டவர்களிடம் தங்கள் பாரங்களை ஒப்படைத்து, அவர்களுடைய அபிமானத்தில் சிலர் ஒதுங்கியிருக்கக்கூடும்; அவர்களுடைய புண்ணியம் வென்று விடும் - என்பதே இந்த பாசுரத்தின் பொருளாகும். – அடுத்து ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்தோத்ரரத்னம் (65) – அக்ருத்ரிம - எனது ஒழுக்கங்களை ஆராயாமல் உனது திருவடிகளில் இயற்கையாகவே உள்ள உயர்ந்த அன்பிற்கு எல்லை நிலமாக உள்ளவரும், ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்தவரும், எனது பாட்டனாரும் ஆகிய நாதமுனிகள் என்னைக் கடாக்ஷிக்க வேண்டும் - என்ற ச்லோகத்திற்கான விளக்கத்தை உரைக்கிறார். இயல்பாகவே அமையப்பெற்றதும், ஆத்மஸ்வரூபத்துக்கு ஏற்றதும், இனிமையாக உள்ளதும் ஆகிய உனது திருவடிகளில் உண்டான மிகுதியான அன்புக்கு எல்லைநிலமாக உள்ளவரும், அத்தகைய ஆழ்ந்த அன்புக்குக் காரணமாக உள்ள ஆத்மாவின் ஸ்வரூபத்தைப் பற்றிய உண்மை ஞானத்தை உள்ளது உள்ளபடி கொண்டவரும் ஆகிய நாதமுனிகளிடம், “எனது ஒழுக்கத்தை ஆராயாமல் அருள் செய்யவேண்டும்” என்று பரமாசார்யராகிய ஆளவந்தார் அருளிச் செய்த வேதாந்த ஆழ்பொருளை உள்ளடக்கிய ஸ்தோத்ரத்தின் இறுதி ச்லோகம் காண்க. – அடுத்து பரத்வாஜ ஸ்ம்ருதியில் – பசுர் மநுஷ்ய: பக்ஷீவா யேச வைஷ்ணவ ஸம்ச்ரயா: தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம்பதம் - என்ற ச்லோகத்தின் பொருளை அருளிச்செய்கிறார். இதில் கூறப்பட்டது என்னவென்றால் - ஞானம் உண்டாவதற்குத் தகுதி இல்லாத பசு மற்றும் பறவைகளாக இருந்தாலும், ஞானம் அடைவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்ட மனிதனாக இருந்தாலும், யார் ஒருவர் “ஸர்வேச்வரனுடைய ஸம்பந்தம் கொண்டவன்” என்று அடையாளம் காண்பிக்கவல்ல ஒரு ஸ்ரீவைஷ்ணவனோடு ஸம்பந்தம் கொண்டுள்ளார்களோ, அந்த ஸ்ரீவைஷ்ணவனின் தொடர்பு காரணமாகவே அவர்கள் அடையத்தக்க இடமான பரமபதம் அடைவார்கள் - என்பதாகும். ஆகவே ஒருவனுக்கு ஞானம் இருந்தாலும், இல்லை என்றாலும் ஸ்ரீவைஷ்ணவன் ஒருவனிடம் கொண்டுள்ள அபிமானம் என்பதே மேலே உயர்த்திவிடும் என்பது மிகவும் தெளிவாக இங்கு உரைக்கப்பட்டது. ஆகவே மேலே உள்ள பலவற்றையும் ஆசார்யன் சிஷ்யனைப் பற்றும் பற்றுதல் என்பதான பரகத ஸ்வீகாரம் என்பதற்குரிய ப்ரமாணங்களாகக் கொள்ளவேண்டும்.