Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 459)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

“பழுதாகா தென்றறிந்தேன்” என்கிற பாட்டை பூர்வோபாயத்துக்கு ப்ரமணமாக அநுஸந்திப்பது.

உக்தோபாய சதுஷ்டயத்திலும் பகவத் விஷயத்தை யவலம்பித்திருக்கிற பக்தி ப்ரபத்திகளாகிற உபாய த்வயமு மிவ்வதிகாரிக்கு நழுவி நின்ற ப்ராகாரத்தைக் கீழருளிச் செய்த வநந்தரம் “ஆசார்யனையும் தான் பற்றும் பற்று” என்றும், “ஆசார்யாபிமாநமே யுத்தாரகம்” என்று மருளிச்செய்த ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகார ரூபோபாய த்வயத்துக்கு ப்ரமாண தர்சநம் பண்ணுவிக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி, ப்ரதமம் ஸ்வகத ஸ்வீகாரோபாயத்துக்கு ப்ரமாணம் காட்டுகிறார் (பழுதாகாது) என்று தொடங்கி.

மேலே கூறப்பட்ட நான்குவிதமான உபாயங்களில், ஸர்வேச்வரனைப் பற்றி நிற்பதான பக்தி மற்றும் பரபத்தி ஆகிய இரண்டு உபாயங்களும் இப்படிப்பட்ட உபாயங்களைக் கைக்கொள்ளும் அதிகாரிகளுக்கு நழுவுகின்ற விதத்தைச் சூர்ணைகள் 444 மற்றும் 445ல் அருளிச்செய்தார். அதன் பின்னர் சூர்ணை 446ல் “ஆசார்யனையும் தான் பற்றும் பற்று” என்றும், 447ல் “ஆசார்யாபிமாநமே யுத்தாரகம்” என்றும் அருளிச் செய்யப்பட்ட ஆசார்ய விஷயத்தில் தான் பற்றும் பற்று, ஆசார்யன் தன்னைப் பற்றும் பற்று என்பதான இரண்டு உபாயங்களுக்கும் ஏற்ற ப்ரமாணங்களை உரைக்கவேண்டும் என்று திருவுள்ளம் பற்றுகிறார். இவற்றில் முதலில் ஆசார்யனைத் தான் பற்றும் பற்று உபாயமாதல் என்பதற்கு ப்ரமாணம் அருளிச்செய்கிறார்.

– அதாவது, அமோகமா யிருப்பதோ ருபாயமறிந்தேன்; ஆச்ரயிப்பார்க்கு ஸமாச்ரய ணீயனாய்க் கொண்டு திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருளுகிற வவனுடைய திருவடிகளைத் தப்பாத ப்ரகாரத்தை நினைத்து நாடோறு மநுகூல வ்ருத்தியைப் பண்ணிக் கொண்டு போரும் ஜ்ஞாநாதிகரைக் கண்டு தங்களுக் குத்தாரகராக வாச்ரயித் துஜ்ஜீவிக்கு மவர்கள், ஆத்மாவோ டவிநாபூதமான பாபத்தைப் போக்கி ஸ்ரீவைகுண்டத்தில் திருவாசல் திறந்து அங்கே ஸம்ருத்தமான ஜ்ஞாநாதிகளை யுடையராய் ததீய கைங்கர்ய நிரதராய்க் கொண்டு வ்யாவ்ருத்தரா யிருப்பர் என்று பரமாப்தரான திருமழிசைப்பிரா னருளிச்செய்த “பழுதாகா தென்றறிந்தேன்” என்கிற பாட்டை ஆசார்ய விஷயத்தில் முற்படச் சொன்ன ஸ்வகத ஸ்வீகாரமாகிற வுபாயத்துக்கு ப்ரமாணமாக வநுஸந்திப்ப தென்கை. இதில் ஸ்வகத ஸ்வீகார மஹங்கார கர்ப்பதயா அவத்யகரமா யிருந்ததே யாகிலும் பலஸித்தியில் வந்தால் பழுதுபோகாதென்னுமிடம் சொல்லிற்றாய்த்து, “குருணா யோபிமந்யேத குரும் வா யோபிமந்யதே, தாவுபௌ பரமாம் ஸித்திம் நியமா துபகச்சத:” என்று, பரகத ஸ்வீகாரத்தோபாதி ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாதென்னுமிடம் பாரத்வாஜ ஸம்ஹிதையிலும் சொல்லப்பட்டதிறே.

இங்கு நான்முகன் திருவந்தாதி (89) – பழுதாகா தென்றறிந்தேன் - என்ற பாசுரத்தை ப்ரமாணம் காண்பிக்கிறார். அந்தப் பாசுரத்திற்கான பொருளை அருளிச் செய்கிறார் - வீணாகாமல் இருப்பதான ஓர் உபாயத்தை அறிந்தேன். தன்னை அடைபவர்களுக்கு நன்றாக அடையத்தக்கவனாகத் திருப்பாற்கடலில் கண்வளரும் ஸர்வேச்வரனுடைய திருவடிகளை விட்டு அகலாத வழியை எண்ணியபடி ஒவ்வொரு நாளும் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்தபடி உள்ள ஞானத்தில் சிறந்தவர்கள் இருக்கிறார்கள்; தங்களைக் கரையேற்றத் தயாராக உள்ள அவர்களைக் கண்டு, அவர்களை அண்டி கரையேற எண்ணுபவர்கள், ஆத்மாவோடு பிரிக்க இயலாதபடி கலந்துள்ள பாவங்களை நீக்கி, ஸ்ரீவைகுண்டத்தின் வாயிலைத் திறந்து உள்ளே சென்று அங்கு ஞானம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்; இங்கு ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்யும் அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்தபடி, மிகவும் உயர்ந்தவராக இருப்பார்கள் - என்று நம்பத் தகுந்தவர்களில் உயர்ந்த திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியில் (89) – பழுதாகா தென்றறிந்தேன் – அருளிச்செய்தார். இதனை ஆசார்ய விஷயத்தில் முதலில் கூறப்பட்டதான “தான் ஆசார்யனைப் பற்றும் பற்று” என்ற உபாயத்துக்கு ப்ரமாணமாகக் கொள்ளவேண்டும். இதன் மூலம் “தான் பற்றும் பற்று” என்பது அஹங்காரத்தை உள்ளடக்கியதால் தோஷத்தோடு கூடியது என்ற தாழ்வை உண்டாக்கவல்லது என்றாலும், பலன் அளிக்கும் விஷயத்தில் தவறிப் போகாது என்று கூறப்பட்டது. பாரத்வாஜ ஸம்ஹிதையில் – குருணா யோபிமந்யேத குரும் வா யோபிமந்யதே, தாவுபௌ பரமாம் ஸித்திம் நியமா துபகச்சத: - ஆசார்யனால் யார் விரும்பப்படுகிறானோ, ஆசார்யனை யார் விரும்புகிறானோ அவர்கள் இருவரும் முறையாகப் பரமபதம் அடைகிறார்கள் - என்று, ஆசார்யன் பற்றும் பற்று போன்றே, ஆசார்யனை சிஷ்யன் பற்றுதல் என்பதும் தவறாமல் பலன் அளிக்கும் என்று கூறப்பட்டது காண்க.