Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 458)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ப்ராப்யபூமியில் ப்ராவண்யமும், த்யாஜ்யபூமியில் ஜிஹாஸையும், அநுபவாலாபத்தில் ஆத்மதாரணா யோக்யதையும்; உபாயசதுஷ்டயத்துக்கும் வேணும்.

இனிமேல் ப்ராப்ய பூமியில் ப்ராவண்யாதி த்ரயமு மிவனுக் கவச்யாபேக்ஷித மென்னுமத்தை அறிவிக்கைக்காக, அவற்றினுடைய உபாய சதுஷ்டய ஸாதாரண்யத்தை அருளிச்செய்கிறார் (ப்ராப்ய பூமியில்) என்று தொடங்கி.

இனி அடையத்தக்கதாக உள்ள பரமபதத்தில் இந்த அதிகாரிக்கு ஈடுபாடு மிகவும் அவசியம் என்பதை உணர்த்துவதற்காக கர்மம், ஞானம், பக்தி, ப்ரபத்தி ஆகிய நான்கையும் கைக்கொள்ளும் நான்குவிதமான அதிகாரிகளுக்குப் பொதுவானவற்றை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

(ப்ராப்ய பூமியாவது) - தனக்கு வகுத்த சேஷியான விஷய மெழுந்தருளி யிருக்கிற தேசம்; (தத்ப்ராவண்யமாவது), அத்தேசத்தைக் கிட்டியல்லது தரியாத அதிமாத்ரமான வாசை. (த்யாஜ்ய பூமியாவது), அவ்விஷயத்தை அகன்றிருக்கைக் குடலான தேசம்; (தஜ்ஜிஹாஸையாவது), இத்தைவிட்டே நிற்கவேணுமென்னு மிச்சை. (அநுபவாலாபத்தி லாத்ம தாரணா யோக்யதையாவது), வகுத்த சேஷியான விஷயத்தினுடைய விக்ரஹாத்யநுபவம் பெறாதபோது, தேஹ தாரணமான போஜந மில்லாவிடில் தேஹம் தரியாதாப்போலே தான் தரித்திருக்கைக்கு யோக்ய னன்றிக்கே யிருக்கை. (உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும்) என்றது, இவையித்தனையும், உபாய சதுஷ்டயாதிகாரிகளுக்கும் அதிகாராநுகுணமாக வேணுமென்றபடி. (உபாய சதுஷ்டயமாவது), “ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே” என்று தொடங்கி கீழருளிச் செய்த பக்தி ப்ரபத்திகளும், ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும், பகவத் விஷயத்தில் ஸ்வகத ப்ரகத ஸ்வீகாரங்களுமாகவும். இதிலும் முற்பட்ட யோஜநைக் கௌசித்யமுண்டு; கீழே நாலுபாயத்தையும் சேர இவர்தாமே யருளிச் செய்ததுக்குச் சேருகையாலே. இதில் பக்தி ப்ரபத்தி நிஷ்டரிருவர்க்கும், “மாக வைகுந்தம் காண்பதற் கென்மன மேகமெண்ணும்” என்கிற ப்ராப்ய பூமியான பரமபதத்திலே ப்ராவண்யமும், “வரம் ஹுதவஹஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி: ந சௌரிசிந்தா விமுக ஜந ஸம்வாஸ வைசஸம்”, “கொடுவுலகங் காட்டேல்” என்னும்படி, ப்ராப்ய வஸ்துவை யிழந்து ப்ராக்ருத மத்யே யிருக்கைக் குடலான ஸம்ஸாரமாகிற த்யாஜ்ய பூமியில் ஜிஹாசையும், “உன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன்” என்கிறபடியே, பகவதநுபவாலாபத்தி லாத்ம தாரணா யோக்யதையு மவச்யமுண்டாக வேணும். ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகார நிஷ்டரான விருவருக்கும் (எல்லாம் வகுத்தவிடமே) என்றிருக்கையாலே, ஆசார்ய னெழுந்தருளி யிருந்த தேசம் ப்ராப்ய பூமியாய், அவனைப் பிரிந்திருக்கிற விடம் த்யாஜ்ய பூமியாய், அவனுடைய விக்ரஹாதிகளே அநுபவ விஷயமு மாகையாலே, ப்ராப்ய பூமியில் ப்ராவண்யாதிகள் மூன்று மிதுக்கநுகுணமாக அவச்ய முண்டாக வேணுமென்று, அதிகாராநுகுணம் விபஜித்துச் சொல்லக்கடவது. அன்றிக்கே, “மதுரகவி சொன்ன சொல் நம்புவார்பதி வைகுந்தம்” என்று, தாமருளிச் செய்த ப்ரபந்தத்தை அப்யஸித்தவர்களுக்கு வாஸஸ்தாநம் ததீய வைபவமே நடக்கும் ஸ்ரீவைகுண்டமென்று ஸ்ரீமதுரகவி யாழ்வா ரருளிச்செய்கையாலும், சரமபர்வ நிஷ்டரானவர்களுக்கும் ஸ்வாசார்யனுகந்த பகவத் விஷயத்தில் பரிபூர்ணாநுபவாதிகள் ஸித்திப்ப தவ்விபூதியிலேயாகையாலும் ப்ராப்ய பூமி பரமபதம்; இருள் தருமா ஞால மாகையாலே அதுக்கு விரோதியான ஸம்ஸாரம் த்யாஜ்ய பூமி. (அநுபவாலாபத்தி லாத்ம தாரணா யோக்யதையாவது), ஸ்வாசார்ய விஷயத்திலும் அவனுகந்த பகவத் விஷயத்திலு முண்டான வநுபவம் பெறாத வளவில் நான் தரித்திருக்கமாட்டாமை என்றிங்ஙனே யோஜிக்கவுமாம்.

(ப்ராப்ய பூமியாவது) - தனது ஆத்மஸ்வரூபத்துக்கு ஏற்ற ஸ்வாமியாக உள்ள ஸர்வேச்வரன் எழுந்தருளியுள்ள இடமான பரமபதம். (தத்ப்ராவண்யமாவது) - அந்தப் பரமபதத்தை அடைந்தால் மட்டுமே உயிர் தரிக்க இயலும் என்று எழுகின்ற மிகுதியான ஆசை. (த்யாஜ்ய பூமியாவது) ஸர்வேச்வரனை விட்டு அகன்று நிற்பதற்குக் காரணமாக உள்ள இந்தப் பூமி. (தஜ்ஜிஹாஸையாவது) – இந்தப் பூமியை விட்டு அகன்றே தீரவேண்டும் என்ற ஆசை. (அநுபவாலாபத்தி லாத்ம தாரணா யோக்யதையாவது) – ஸ்வரூபத்துக்கு எஜமானாகிய ஸர்வேச்வரனுடைய திருமேனியை அநுபவிக்க இயலாதபோது, சரீரத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான உணவு போன்றவை கிட்டாத சரீரம் உயிர் வாழாதது போன்று, தான் உயிர் வாழத் தகுதி அற்றவன் என்றிருத்தல். (உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும்) - இந்த மூன்றும், நான்குவிதமான உபாயங்களைக் கைக்கொண்ட நான்குவிதமான அதிகாரிகளுக்கு, அவரவர்களுக்குத் தேவையான அதிகாரத்தை ஏற்படுத்த அவசியமாகிறது என்று கருத்து. – (உபாய சதுஷ்டயமாவது) - சூர்ணை 444ல் கூறப்பட்ட “ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே” என்று தொடங்கி கீழே அருளிச்செய்யப்பட்ட பக்தியும், ப்ரபத்தியும், ஆசார்யனைத் தான் பற்றுகின்ற பற்றும், ஆசார்யனால் தான் பற்றப்படும் பற்றும் உபாய சதுஷ்டயம் – நான்கு உபாயங்கள் - என்று கருத்து. அல்லது பக்தி, ப்ரபத்தி, ஸர்வேச்வரனைத் தான் பற்றும் பற்று, ஸர்வேச்வரனால் தான் பற்றப்படும் பற்று என்றும் கொள்ளலாம். இந்த இரண்டுவிதமான பொருள்களில், முதலில் கூறப்பட்ட நான்கே பொருத்தமாக உள்ளதாகும். இதன் காரணம் முதலில் கூறப்பட்ட நான்கினைக் குறித்தே இவர் முன்பு அருளிச்செய்துள்ளதால் ஆகும். – இவற்றில் பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகிய இரண்டில் நிலையாக நிற்பவர்கள் இருவருக்கும் கீழே உள்ள நிலைப்பாடு அவசியம் வேண்டும்: திருவாய்மொழி (9-3-7) - மாக வைகுந்தம் காண்பதற் கென்மன மேகமெண்ணும் - என்று கூறப்படுவதான அடைவதற்கு ஏற்ற இடமான பரமபதத்தின் மீது அளவற்ற ஈடுபாடு. யௌநகஸம்ஹிதை – வரம் ஹுதவஹஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி: ந சௌரிசிந்தா விமுக ஜந ஸம்வாஸ வைசஸம் - க்ருஷ்ணன் மீது ஆசை இல்லாத மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும், மிகுந்த காட்டுத்தீ போன்ற ஒரு கூட்டிற்குள் வாழ்வதே சிறந்தது - என்றும், திருவாய்மொழி (4-9-7) – கொடுவுலகங் காட்டேல் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அடையத்தக்க ஸர்வேச்வரனை இழந்து இந்த உலகில் வாழ்வதற்குக் காரணமான ஸம்ஸாரம் என்ற கைவிடத்தக்க பூமி மீது வெறுப்பு திருவாய்மொழி (5-7-1) – உன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன் - என்று கூறுவது போன்று ஸர்வேச்வரன் குறித்த அனுபவம் கிட்டாதபோது ஆத்மாவைத் தரிப்பதற்குத் தேவையான சக்தியற்று இருத்தல். ஆசார்யன் விஷயத்தில் தான் பற்றும் பற்று, ஆசார்யன் தன்னைப் பற்றும் பற்று ஆகிய இரண்டிலும் நிலைநிற்கும் இருவருக்கும், சூர்ணை 450ல் – எல்லாம் வகுத்தவிடமே - என்று கூறப்பட்டதால், ஆசார்யன் எழுந்தருளியுள்ள இடமே அடையத்தக்க இடமாகவும், ஆசார்யனைப் பிரிந்துள்ள இடமானது கைவிடத்தக்க இடமாகவும், ஆசார்யன் திருமேனி போன்றவையே அனுபவிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளதாலும், அடையத்தக்க வேண்டிய இடத்தில் ஈடுபாடு முதலானவை மூன்றும் அவசியம் உண்டாகவேண்டும். இவற்றை அவரவர்களுடைய தகுதிக்கு ஏற்றபடி பிரிக்கவேண்டும். – அல்லது வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். கண்ணிநுண் சிறுத்தாம்பு (10) - மதுரகவி சொன்ன சொல் நம்புவார்பதி வைகுந்தம் – என்பதற்கு ஏற்ப தான் அருளிச் செய்ததான கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பத்துப் பாசுரங்களையும் கற்றவர்களுக்கு இருப்பிடம் பகவானின் அடியார்களுடைய மேன்மை ஓங்கி நிற்கும் இடமான ஸ்ரீவைகுண்டமே என்று மதுரகவியாழ்வர் அருளிச்செய்கையாலும், எல்லைநிலமான ஆசார்ய அபிமானம் என்பதில் நிலைநிற்பவர்களுக்கு தனது ஆசார்யன் மகிழ்வதான பகவத் விஷயத்தில் நிறைந்த அனுபவம் போன்றவைகள் கிட்டுவது அத்தகைய பரமபதத்தில் மட்டுமே என்பதாலும், அந்தப் பரமபதமே அடையவேண்டிய இடம் (ப்ராப்யபூமி) என்று கொள்க. திருவாய்மொழி (10-6-1) - இருள் தரு மாஞாலம் - என்பதற்கு ஏற்றபடி இருப்பதும், அத்தகைய பகவத் அனுபவங்களுக்குத் தடையாக உள்ளதும் ஆகிய ஸம்ஸாரம் என்பது (த்யாஜ்ய பூமி) கைவிடத்தக்க இடமாகும். (அநுபவாலாபத்தி லாத்ம தாரணா யோக்யதையாவது) – தனது ஆசார்யன் விஷயத்திலும், ஆசார்யன் மகிழும் ஸர்வேச்வரன் விஷயத்திலும் ஏற்பட்ட அனுபவம் கிட்டாதபோது, தன்னால் உயிர் தரிக்க இயலாத நிலை என்றும் பொருள் கொள்க.