Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 456)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
போக்யதாபுத்தி குலைந்து தர்மபுத்த்யா ப்ரவர்த்தித்தாலும் ஸ்வரூபம் குலையும்.
போக்யதா புத்தியைவிட்டு தர்மபுத்யா ப்ரவர்த்திக்குமளவில் இவை யொன்றுமில்லையே யென்ன அருளிச்செய்கிறார் மேல் (போக்யதா புத்தி குலைந்து) என்று தொடங்கி.
தனது மனைவியை அனுபவிக்கும்போது, “இது இன்பம்” என்று எண்ணாமல் “இது இல்லற தர்மம்” என்று எண்ணினால், இது போன்ற தோஷம் வராது அல்லவோ என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.
– அதாவது, விஹித விஷய ப்ரவ்ருத்தியில் காமுகதயாவரும் போக்யதா புத்தியை விட்டு, உபாஸகரான மஹர்ஷிகள் தொடக்கமான சிஷ்டர் பைத்ருகருண மோசக ப்ரஜோத்பாதநார்த்தமாகவும், ஸ்நாந திவஸத்தி லங்கீகரியாவிடில் ப்ரூணஹத்யாதி தோஷமுண் டென்னு மத்தைப் பற்றவும் தர்மபுத்த்யா ப்ரவர்த்திக்கு மாப்போலே இவனுமப்படி தர்மபுத்த்யா ப்ரவர்த்தித்தாலும், ஸித்த தர்மநிஷ்டனான இவனுக்கு அந்ய தர்மாந்வயம் விரோதியாகையாலே அநந்யோபயத்வ ரூபமான ஸ்வரூபம் குலையுமென்கை. இத்தால், போக்யதா புத்த்யா ப்ரவர்த்திக்கில் அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபம் குலையுமோபாதி, தர்மபுத்த்யா ப்ரவர்த்திக்கில் அநந்யோபாயத்வ ரூபமான ஸ்வரூபம் குலையும்; ஆனபின்பு ஒருபடியாலு மிவ்வதிகாரிக்கு விஹித விஷய ப்ரவ்ருத்தி யாகாதென்றதாய்த்து. ஆகையால் ஏதேனு மொருபடி யந்வயித்தாலும் ஸ்வரூபஹாநி தப்பாது, ஆனபின்பு பரித்யஜிக்கவேணு மென்னுமிடம் நிச்சிதமிறே.
சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டதான மனைவியிடம் சேரும்போது, காமம் மூலம் உண்டாகும் இன்பத்தைக் கைவிட்டு; பக்தியில் நிலைநின்ற முனிவர்கள் உள்ளிட்ட சான்றோர்கள், “பித்ரு கடன் தீர்ப்பதற்காகப் புத்திரர்களைப் பெறவேண்டும்” என்ற காரணத்தினாலும், வீட்டுக்கு விலக்காகிவிட்டு நீராடிய நாளில் மனைவியுடன் சேராவிட்டால் கர்ப்பத்தை அழித்தல் போன்ற கொடிய குற்றங்கள் வந்து சேரும் என்ற காரணத்தாலும், “தர்மம்” என்ற எண்ணத்துடன் மனைவியுடன் சேர்வது போன்று, இவனும் தர்மம் என்ற எண்ணத்துடன் சேரக்கூடும். இது தர்மம் என்றாலும், ஸித்ததர்மம் என்பதான “ஸர்வேச்வரன் மட்டுமே உபாயம்” என்பதால் நிலைநிற்கும் ப்ரபந்நன் ஒருவனுக்கு மற்ற தர்மங்களைக் கடைப்பிடித்தல் என்பது முரண்பட்டதால், ஸர்வேச்வரனை மட்டுமே உபாயம் என்று எண்ணியுள்ள ஸ்வரூபம் அழியும் என்று கருத்து. ஆகவே “இன்பம் உண்டாக்குவது” என்ற எண்ணத்துடன் மனைவியிடம் சேர்ந்தால் ஸர்வேச்வரனையே பொருளாகக் கொண்டுள்ள ஸ்வரூபம் அழிவது போன்று, தர்மம் என்ற எண்ணத்துடன் மனைவியுடன் சேர்ந்தால், ஸர்வேச்வரனையே உபாயம் என்று கொண்டுள்ள ஸ்வரூபம் அழியும். ஆகவே எவ்விதத்தில் ஆராய்ந்தாலும் இந்த அதிகாரிக்குத் தனது மனைவியுடன் சேர்தல் என்ற இன்பம் ஆகாது என்றாகிறது. எனவே எந்த எண்ணத்தில் மனைவியுடன் சேர்ந்தாலும், ஸ்வரூபம் அழிதல் என்பது உறுதியாகிறது. ஆகவே அதனை விலக்கவேண்டும் என்று கருத்து.