Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 455)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
விஹிதபோகம் நிஷித்தபோகம்போலே லோகவிருத்தமுமன்று; நரக ஹேதுவுமன்று; ஆயிருக்கச் செய்தே ஸ்வரூப விருத்தமுமாய் வேதாந்த விருத்தமுமாய் ப்ராப்ய ப்ரதிபந்தமுமாய் இருக்கையாலே தியாஜ்யம்.
இப்படி பரதாராதிபோகம் ஸ்வபரவிநாசஹேது வாகைக்கடி, சாஸ்த்ர நிஷித்தமாகையிறே; இங்ஙனன்றிக்கே, சாஸ்த்ரவிஹித விஷயமான ஸ்வதார போகத்துக்குக் குறையில்லையென்ன அருளிச்செய்கிறார் மேல் (விஹிதபோகம் என்று தொடங்கி).
இவ்விதம் மற்றவர்களுடைய மனைவியை அனுபவித்தல் என்பது சாஸ்த்ரத்தால் தள்ளப்பட்டது என்பதால் அல்லவோ அந்த செயல்கள் தன்னையும் மற்றவரையும் அழிக்கின்றன; இவ்விதம் அல்லாமல் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டதான தனது மனைவியை அனுபவித்தல் என்பதற்கு எந்தவிதமான தோஷமும் இல்லை அல்லவோ என்ற கேள்வி எழ, அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, விசிஷ்ட வேஷவிஷயியான சாஸ்த்ரத்திலே விதிக்கப்பட்ட ஸ்வதாரத்தில் போகம், தாத்ருச சாஸ்த்ர நிஷித்தமான பரதார பரிக்ரஹம் போலே லோக விருத்தமுமன்று, செம்பினாலியன்ற பாவையைத் தழுவுகை முதலான கோர துக்காநுபவம் பண்ணும் நரகஹேதுவுமன்று; இப்படி ப்ரத்யக்ஷ பரோக்ஷ ஸித்தங்களான லோக விருத்தத்வ நரகஹேதுத்வங்க ளிரண்டு மற்றிருக்கச்செய்தே, அநந்ய போகத்வ ஸ்வரூபத்துக்கு விருத்தமுமாய், “சாந்தோதாந்த உபரத ஸ்திதிக்ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா ஆத்வந்யேவாத்மாநம் பச்யேத்” இத்யாதிகளாலும் திருமந்த்ராதிகளாலும், உபாஸகனோடு ப்ரபந்நனோடு வாசியற இருவர்க்கும் விஷயபோகமாகா தென்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிற வேதாந்தத்துக்கு விருத்தமுமாய், தோஷ தர்சனத்தாலும் அப்ராப்தி தர்சநத்தாலும் விஷயபோகத்தை யருவருத்திருக்கு மாசார ப்ரதாநரான சிஷ்டர்களாலே ஹேயமென்று நிந்திக்கப்பட்டிருப்பதுமாய், அப்ராப்த விஷய விரக்தி ப்ரியனான வாசார்யனுக் கநபிமதமாகையாலே ஆசார்ய முக கமல விகாஸாநுபவரூப ப்ராப்யத்துக்கு ப்ரதிபந்தகமுமாய், இப்படி அநேகாநர்த்தாவஹமா யிருக்கையாலே இவ்வதிகாரிக்கு பரித்யாஜ்யமென்றபடி.
சரீரத்துடன் சேர்ந்த ஆத்மா குறித்து உரைக்கப்படும் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டதான தனது மனைவியிடம் அனுபவிக்கும் இன்பம் என்பது அதே சாஸ்த்ரங்களால் தள்ளப்பட்டதான மற்றவர்கள் மனைவியை அனுபவித்தல் என்பது போன்று உலகவாழ்க்கையுடன் முரண்பட்டதல்ல. அதே போன்று தனது மனைவியை அனுபவித்தல் என்பது பெரியதிருமொழி (1-6-4) – செம்பினால் இயன்ற பாவையை - மற்றவர் மனைவியை அனுபவிப்பவர் நரகம் போகும்போது அங்கு செம்பினால் செய்யப்பட்ட தீயில் உள்ள பெண் உருவத்தைக் காட்டி அணைக்கக் கூறுவர் – என்பதற்கு ஏற்ப நரகத்திற்கு இட்டுச் செல்வதற்கும் காரணம் ஆகாது. இவ்விதம் கண்களால் காணப்படவல்ல உலக நடையுடன் மாறுபடுதல், சாஸ்த்ரங்கள் மூலம் மட்டுமே காணவல்ல நரகத்திற்குக் காரணமாதல் ஆகிய இரண்டும் தனது மனைவியை அனுபவித்தால் இல்லாமல் இருந்தாலும்; மற்றவர் மனைவியை அனுபவித்தல் என்பது உலகவழக்கத்துக்கு முரணானது, நரகக்திற்குக் காரணமாகவல்லது என்று இருந்தாலும்; அவை இரண்டுமே ஆத்மஸ்வரூபத்திற்கு முரண்பட்டதாகவே உள்ளன. எப்படி என்றால் ப்ருகுவல்லி – சாந்தோதாந்த உபரத ஸ்திதிக்ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா ஆத்வந்யேவாத்மாநம் பச்யேத் - ஐந்து இந்த்ரியங்கள், மனம் ஆகியவற்றை அடக்கியவனாக, இவை இரண்டையும் அடக்கியதால் உண்டாகும் செருக்கு அற்றவனாக, உலகவிஷயங்களில் ஈடுபாடு அற்றவனாக, தனது ஆத்மாவின் உள்ளே இருக்கும் பரமாத்மாவைக் காணவேண்டும் - என்பது போன்ற வேதவாக்கியங்கள் மற்றும் திருமந்த்ரம் போன்றவற்றால் பக்தியில் ஆழ்ந்த நிலையில் உள்ள உபாஸகன் மற்றும் ப்ரபந்நன் ஆகிய இருவருக்குமே பெண்கள் மூலம் கிட்டும் இன்பம் ஆகாது என்று கூறும் ப்ரமாணங்களுக்கு முரணாக உள்ளதால் ஆகும். மேலும் இந்தச் செயல்கள் பெண்களிடம் உள்ள தோஷத்தை உணர்த்துவதாலும், பெண்கள் மூலம் கிட்டும் இன்பத்தை அருவறுப்புடன் காணும் நல்ல ஒழுக்கம் உள்ள சான்றோர்களால் “தள்ளத்தக்கது” என்று பழிக்கப்பட்டதாலும், பெண்கள் விஷயத்தில் ஈடுபாடு இல்லாமை என்பதையே விரும்புகின்ற ஆசார்யனுக்கு விருப்பம் இல்லாத செயல் என்பதாலும், ஆசார்யனுடைய திருமுகம் என்னும் தாமரையின் மலர்ச்சியை அனுபவிக்கவல்ல பேற்றுக்குத் தடையாக உள்ளதாலும் - இப்படியாகப் பலவிதமான தீமைகளை உண்டாக்கவல்லதால் இந்த அதிகாரி அடியுடன் கைவிடத்தக்கது என்று கருத்து.